சென்னை : அறிக்கை தயாரிப்பு பணிக்கு, மண்டலத்தில் இருந்து, மூன்று - நான்கு பேர், தினமும், ரிப்பன் மாளிகைக்கு அழைப்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட முடியாமல், சுகாதார அதிகாரிகள் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர்.
சென்னையில், கொரோனா பாதிப்பு, 9,000த்தை நெருங்கி விட்டது. தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி சுகாதாரத் துறையின் பங்கு மிக அதிகம்.
ஆய்வு:
இரவு, பகல் பாராமல், உயிரை பணயம் வைத்து, தொடர்ந்து பணி செய்கின்றனர். கொரோனா பாதித்தவர்களை மருத்துவ மனைக்கு அனுப்புவது முதல், தொடர்புகளை கண்டறிந்து பரிசோதனைக்கு அனுப்புவது வரை, அனைத்து பணிகளையும் சுகாதாரத்துறை செய்கிறது.
பரிசோதனை முடிவுகள், காலை, மதியம், இரவு, அதிகாலை வருகிறது. இதை வைத்து, எந்நேரமாக இருந்தாலும், கொரோனா பாதித்தவர்களை, உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.இந்நிலையில், அறிக்கை தயாரிப்பு என்ற பெயரில், ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும், மூன்று முதல் நான்கு சுகாதார அதிகாரிகளை, ரிப்பன் மாளிகைக்கு அழைக்கின்றனர்.இதனால், களப்பணியில் தொய்வு ஏற்படுவதுடன், மறுநாள் பணிக்கு வருவதில் சோர்வு அடைந்து, உடல்நிலை பாதிப்பதாக கூறுகின்றனர்.
இது குறித்து, துாய்மை அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:கொரோனா பாதித்த நபரை, மருத்துவமனை, தனிமை முகாம் அனுப்புவது, அவரது வீட்டை தனிமை வீடாக அறிவித்து, நோட்டீஸ் ஒட்டுவது, கபசுர பொடி, சத்து மாத்திரை வழங்குவது, 'அம்மா' உணவகத்தை கவனித்தல், பிறப்பு, இறப்பு சான்று குறித்த ஆய்வு உள்ளிட்ட, பல பணிகள் செய்கிறோம்.
களத்தில், ஆர்வமாக பணி செய்ய முடிகிறது. கொரோனா பணிகள் தொடர்பான அறிக்கைகள், மண்டல அலுவலகம் வாயிலாக, வட்டார கூடுதல் நல அலுவலருக்கு அனுப்பி, அங்கிருந்து ரிப்பன் மாளிகைக்கு செல்கிறது. அறிக்கையை, ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்து தான் அனுப்புகிறோம்.இருந்தாலும், இரவு 10:00 - 11:00 மணிக்கு, ரிப்பன் மாளிகைக்கு அழைக்கின்றனர். ஏற்கனவே அனுப்பிய அறிக்கையை, பல கோணங்களில் மாற்றித்தர வலியுறுத்துகின்றனர். வீடு திரும்ப, அதிகாலை, 3:00 - 4:00 மணி வரை ஆகிறது. மீண்டும் காலையில் பணிக்கு வர வேண்டும்.
நடவடிக்கை:
இதனால், மிகவும் மன உளைச்சல் அடைகிறோம். உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. விடுமுறை எடுக்கும் சூழல் ஏற்பட்டால், கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கப்படும். பெண் சுகாதார ஆய்வாளர்கள் அதிகாலை வீடு திரும்பும்போது, பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். கணினி வசதியில், அறிக்கை தயாரிப்பை எளிமையாக்க முடியும். அதிகாரிகள், இதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.