மோகனூர்: 'மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு பணியை (ரீ -மாடலிங்), நான்கு மாதங்களுக்குள் முடித்து, விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை தலைவர் சுந்தரராஜூ, நிர்வாகி கள் அருணகிரி, வரதராஜன் ஆகியோர், அமைச்சர் தங்கமணியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, வாய்க்காலை சீரமைப்பு (ரீ -மாடலிங்) செய்வதற்காக, 58.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் திட்ட மதிப்பீட்டில், வாய்க்கால் தரைத்தளம் லைனிங் செய்யும் திட்டம் இடம்பெறவில்லை. மோகனூர் வாய்க்கால் கரைகள், தலைப்பு முதல் முடிவு வரை உயரமாக இருக்கிறது. வேலை திட்டத்தில், 1.03. 1.05, 0.90 என்ற மீட்டர் அளவில் உயரம் குறைவாக உள்ளது. வாய்க்காலில் இருபுறமும் கட்டும் தடுப்பு சுவருக்கு மேல், நான்கு அடிக்கு மேல் கரை மண் இருக்கிறது. சுவரை வாய்க்கால் மட்டத்துக்கு உயர்த்தி கட்டுமானம் செய்ய வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலை கழிவு கலக்கும் இடம் வண்ணாந்துரை முதல், நாவலடியான் கோவில் வரை தரைத்தளம் அமைக்க வேண்டும். வாய்க்காலில் கலக்கும் வீட்டு, சாக்கடை கழிவுகளை, மேற்படி வேலை திட்டத்துடன் கழிவுநீரை ஒரு இடத்தில் சேகரித்து, சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்தம் செய்து, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வாய்க்கால் மதகுகள், 100 ஆண்டுக்கு முன், பைப் லைன் போட்டு அமைக்கப்பட்டது. தற்போது, அதிக மதகுகள் பழுதடைந்துள்ளன. அவற்றையும், இந்த திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, சரி செய்ய வேண்டும். வாய்க்கால் சீரமைப்பு பணியை, நான்கு மாதங்களுக்குள் முடித்து, விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE