நாமக்கல்: ராஜ, குமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்காலை நவீனமயமாக்கும் பணியை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தில், காவிரி ஆற்றில் படுகை அணை உள்ளது. இங்கிருந்து, 33.50 கி.மீ., நீளத்துக்கு ராஜ வாய்க்கால் அமைந்துள்ளது. அதன் மூலம், 9,615 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதேபோல், ராஜ வாய்க்காலில் இருந்து, 17.90 கி.மீ., நீளத்துக்கு, குமாரபாளையம் வாய்க்கால், ஐந்து கி.மீ., நீளத்துக்கு பொய்யேரி வாய்க்காலும் உள்ளன. அவற்றின் மூலம், 3,631 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மோகனூர் வாய்க்கால், 22.54 கி.மீ., நீளத்துக்கு, 2,901 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நான்கு வாய்க்கால் மூலம், 16,143 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு வாய்க்கால்களில் கான்கிரீட் சுவர் கட்டவும், கரைகளை பலப்படுத்தி, மதகுகள், மிகுதி நீர் போக்கி மதகுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும். விவசாயிகள், விவசாய சங்கங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, வாய்க்காலை புனரமைத்தல், நவீனமயமாக்குதல் பணிக்காக, 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜை, மோகனூரில் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., பாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தனர். அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE