பாசன நீர் திறப்பை நீட்டியுங்கள்: தடப்பள்ளி விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசன நீர் திறப்பை நீட்டியுங்கள்: தடப்பள்ளி விவசாயிகள் வலியுறுத்தல்

Added : மே 23, 2020
Share

ஈரோடு: 'கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேராததால், தண்ணீர் திறப்பு நாட்களை நீட்டிக்க வேண்டும்' என, தடப்பள்ளி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு, கடந்த பிப்., 1ல் தண்ணீர் திறக்கப்பட்டு, நெல் பயிரிடப்பட்டுள்ளது. வரும், 30 உடன், 120 நாள் நிறை வடைவதால், தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நாற்றங்கால், உழவு நடவு, அறுவடை ஆகியவற்றை, 120 நாட்களுக்குள் செய்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, தண்ணீர் திறப்பின்போதே, விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். குறிப்பாக, மெயின் வாய்க்காலின் கடைமடை பகுதிகள் மற்றும் கூகலூர், மேவானி, அம்மாபாளையம், பெருமுகை, அத்தாணி உள்ளிட்ட கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் தாமதமாக சென்று சேர்ந்ததால், நடவுப்பணிகளும் தாமதம் ஆனது. தாமதமாக துவங்கப்பட்ட பகுதிகளில் தற்போது, நெற்கதிர்கள் பால் பிடித்து முற்ற துவங்கி உள்ளன. இந்த கால கட்டத்தில், தண்ணீர் நிறுத்தப்பட்டால், நெற்பயிர் முற்றிலும் காய்ந்து வீணாகிவிடும். எனவே, அணையின் நீர் மட்டம் திருப்திகரமாக இருப்பதால், தண்ணீர் திறப்பு நாட்களை மேலும், 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதி விவசாயிகள், கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X