ஐதராபாத் : தெலுங்கானாவில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தினார்.

தெலுங்கானாவின் பிரகதிபவனில் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பல்வேறு நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களுடன் விவசாயிகள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்தும், லாபகரமாக கொண்டு செல்லும் முயற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தெலுங்கானாவில் விளைவிக்கப்படும் விளை பொருட்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் விவசாயிகள் முயற்சிகள் வீணாகாமல் இருக்க வேண்டும். சந்தையில் மக்களுக்கு தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் லாபம் பெற முடியும். வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. வேளாண்மையில் தேவையான மாற்றங்கள், விளைச்சலை அதிகரித்தல், பண்ணை நிலங்களிலிருந்து சந்தைக்கு பயிர் மதிப்புகளை கூட்டுதல், உலக ளாவிய சந்தைகள் மற்றும் போட்டி, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல், விவசாயிகள் மற்றும் பிறருக்கான முதலீட்டைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

நமது மாநிலம் உருவாகும் போது விவசாயம் கடுமையான நெருக்கடியில் இருந்தது. பின் டிஆர்எஸ் அரசின் கடுமையான முயற்சிகளாலும், நமது மாநிலத்தில் இயற்கையாகவே இருக்கும் செழிப்பான மண் வளங்கள் மற்றும் சிறந்த காலநிலை மாற்றங்களால் தெலுங்கானா சிறந்த விவசாய மாநிலமாக முன்னேறி வருகிறது. நமது விவசாயிகள் திறமையானவர்கள்.மாநில அரசு எப்போதும் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு, வேளாண் துறை நடவடிக்கைகளால் சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் விவசாய மேம்பாட்டுக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால உத்திகளை கடைபிடிக்க வேண்டும்.
குறுகிய கால நடவடிக்கையாக விவசாயிகளுக்கு தேவையான ஆதரவை அளித்தும், மேலும் பயிர் சாகுபடி மற்றும் சந்தைகளில் தேவையான மற்றும் அத்தியாவசிய பயிர்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சிறந்த உரங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும், மற்றொரு புறம் ரைத்து பந்து மற்றும் ரைத்து பிமா போன்ற விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களும் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும். மேலும் மாநிலத்தில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளதால் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் அரசு உதவ முன்வர காத்திருக்கிறது.

மாநில அரசு பெரிய அளவிலான பயிர்கள் சேகரிக்கும் மற்றும் உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து வருகிறது. உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க கூட்டு விவசாய முறையை ஊக்குவித்து தரமான பொருட்களை வழங்குவதன் மூலம், தெலுங்கானா மாநிலத்தின் தரம் அதிகரிக்கும் மற்றும் சர்வதேச சந்தையில் அது எங்களுக்கு உதவும். உலகெங்கிலும் உள்ள நுகர்வு முறைக்கு ஏற்ப மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை மாற்ற வேண்டும். அதன் மூலம் சிறந்த லாபத்தை ஈட்ட முடியும். பயிர் வடிவத்தில் மாற்றத்தை கடைப்பிடிப்பதன் மூலம், அதிக மகசூல் கிடைக்கும். மண்ணின் வலிமையும் அதிகரிக்கும், பூச்சிகள் மற்றும் பூச்சிகளைக் குறைக்கும். இந்த விஷயங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE