இம்பால் : கொரோனா பாதிப்பு காரணமாக மணிப்பூருக்கு திரும்பும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த தனிமை முகாம்களுக்கு செல்லாமல் விதி மீறலில் ஈடுபட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வர்த்தகத்துக்காகவும் சென்ற மணிப்பூர் மக்கள் அங்கியே சிக்கிவிட்டனர். இவர்கள் சொந்த மாநிலம் திரும்புவதில் பெரும் சிரமம் இருந்தது.
வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஷ்ராமிக் ரயில்கள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் மக்கள் திரும்புகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வரும் அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் இதற்காக பிரத்யேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, மணிப்பூரிலும், 14 நாட்கள் தனிமைப்படுத்த, தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்.,19 வரை நோய் தொற்று இல்லாத மாநிலமாக மணிப்பூர் இருந்து. பின் நோய் தொற்று பல விதங்களில் பரவ துவங்கியது. மேலும் மாநிலத்துக்குள் வர விரும்பும்மக்களுக்காக மணிப்பூர் அரசு தனியாக இணைதளம் உருவாக்கி அதில் பதிவு செய்ய உத்தரவி்ட்டது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து மணிப்பூருக்கு வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். தனிமை முகாமுக்கு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்.பாதிப்பு அதிகமாக இருந்தால் தொடரந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மணிப்பூரில் கொரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம். பரிசோதனை மையங்கள் மூலம் நாள் தோறும் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 800 மாதிரிகள் வரை எடுக்கப்பட்டு பரிசோதிக்கப் படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE