மாணவர் வாழ்க்கையில் விளையாடாதீர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மாணவர் வாழ்க்கையில் விளையாடாதீர்!

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share

மாணவர் வாழ்க்கையில் விளையாடாதீர்!

எஸ்.சுதர்சன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜூன்,1ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, தற்போது, 15ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி, மாற்றி மாற்றி அறிவிப்பது, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு என, அறிவித்தனர்; சில நாட்கள் கழித்து, இல்லை என்றனர்.இது போல, பள்ளிக் கல்வித் துறையின் ஏராளமான அறிவிப்புகளை, நாம் உதாரணம் காட்ட முடியும். இப்படி, மாற்றி மாற்றி அறிவிப்பதால், அத்துறையின் மீதான நம்பிக்கை குறைகிறது.'இன்று, ஒன்று அறிவிப்பர்; நாளை, மாற்றி விடுவர்' என்ற எண்ணம், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வந்து விட்டது. இது, நல்லதல்ல.சரியான திட்டமிடலோ, ஆலோசனையோ இல்லாமல், பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கையிலும், மனநிலையிலும் விளையாடுகிறது, பள்ளிக் கல்வித் துறை.நடப்பாண்டு, 10 வகுப்பு தேர்வு நடத்த வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. மாணவர்கள், எங்கு இருக்கின்றனரோ, அங்குள்ள பள்ளியில், தேர்வு எழுத அனுமதிக்கலாமே? அதற்கு, 'ஹால் டிக்கெட்' மட்டும், பதிவிறக்கம் செய்தால் போதுமே; மாணவர்களை ஏன், ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு அலைக்கழிக்க வேண்டும்? தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில், இதைச் செய்வது, கடினமான காரியம் இல்லை. இதனால், தேர்வு மையங்களில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும்.பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில், உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். தகுதியான நபர்களை, அங்கு பணி அமர்த்த வேண்டும்.ஏனெனில், அவர்கள் மாற்றி மாற்றி விளையாட, மாணவர்களின் வாழ்க்கை என்ன, மைதானமா?


அவர்களுக்குஏன் மானியம்?பெயர் வெளியிட விரும்பாத அரசு ஊழியர், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பது, வரவேற்கக் கூடியது தான்.இன்னும் பல்வேறு வகையில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால், நலம்.அரசு ஊழியர்களுக்கு, ரேஷன் பொருட்கள், 'காஸ்' மானியம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும், 1,000 ரூபாய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தில், கணவன் மனைவி இருவரும், 'டி கிரேடு' அரசு ஊழியராக இருந்தால், அவர்களின் சம்பளம், மாதம், 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். அதுவே, அதிகாரிகள் அளவில், இருவரும் பணிபுரிந்தால், அவர்களது மாத ஊதியம், லட்சம் ரூபாயை தாண்டும்.இவர்களுக்கு, ரேஷனில் இலவச பொருட்களும், மானிய விலையில் பொருட்களும் ஏன் கொடுக்க வேண்டும்?இந்த மனிதர்களின் மனதிற்கு, எவ்வளவு கொடுத்தாலும், நிறைவு வராது. அதே போல, ஓர் அரசு ஊழியர், தன் சம்பளம் போக, அடிப்படை ஊதியத்தில், 10 சதவீத தொகையை, ஒவ்வொரு மாதமும், பயணப்படியாக பெறுகிறார். இந்த பயணப்படியை, 90 சதவீதம் பேர், பணியை மேற்கொள்ளாமலேயே பெற்று வருகின்றனர்.போக்குவரத்து மற்றும் இதர படிகள் என்ற வகையில், மாதந்தோறும் மட்டும், கோடிக்கணக்கான ரூபாய், அரசு ஊழியர்களுக்கு வீணாக செலவிடப்படுகிறது. எனவே, இந்த விஷயத்திலும், அரசு கவனம் செலுத்த வேண்டும்.மாதந்தோறும், லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் போது, 'எந்தெந்த வகையில், வரி செலுத்தாமல் தப்பிக்கலாம்' என, யோசிக்கின்றனர்.இதற்கென கார் மற்றும் வீட்டுக் கடன், 'இன்சூரன்ஸ்' என, கணக்கு காட்டி, வரி செலுத்துவதில் இருந்து, தப்பித்துக் கொள்கின்றனர். வீடு, கார், இன்சூரன்ஸ் எல்லாமே, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காகத் தானே பெறுகின்றனர். அதில் வரி விலக்கு அளிப்பது ஏன்?
தனியார் பணி என்பது, கத்தி மேல் நடப்பது போன்றது! எப்போது, வேலை பறி போகும் எனத் தெரியாது. அரசு பணி அப்படியில்லையே... எனவே, அரசு ஊழியர்களுக்கு தேவையின்றி செலவழிக்கப்படும் நிதியை மிச்சப்படுத்தினால், பல கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும்.


வேலையில்லா திண்டாட்டம்அதிகரிக்கும்!சி.அன்புசெல்வி, அம்மாபேட்டை, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 59 ஆக, ஓராண்டு நீட்டித்து, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். இது, படித்து முடித்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை கடுமையாக பாதிக்கும். இரண்டு கோடி பட்டதாரி இளைஞர்களின், அரசு வேலை கனவு, தவிடு பொடி ஆகும்.மேலும், தற்போது, பட்டப்படிப்பு முடித்து வெளியேற உள்ள, பல லட்சம் இளைஞர்களின் நிலை, கேள்விக்குறியாகும். இது, இளைஞர்கள் மத்தியில், மன உளைச்சலை ஏற்படுத்தும். சில மாதங்களுக்கு முன், கோவை மாநகராட்சி துாய்மைப் பணியாளர் பணிக்கு, எம்.இ., உட்பட, பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இதன் வழியாக, தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களின் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை, அறிந்துக் கொள்ளலாம்.அரசின் உத்தரவால், ஓய்வு பெற வேண்டிய, 10 லட்சம் பேர் பயன் பெறுவர். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுவர். ஓர் அரசு ஊழியர் ஓய்வு பெற்றால், மூன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம். அவ்வழியே, 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.தற்போது ஓய்வு பெறும் அனைவருக்கும், அடுத்த மாதமே, 'பென்ஷன்' கிடைக்கும்; அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. தமிழக அரசின், ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ள முடிவு, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். எனவே, இந்த உத்தரவை, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்!அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்வு' என்று, ஒன்று இருந்தால், அது நேர்மையாக நடத்தப்பட வேண்டும் அல்லவா!ஆரம்ப கல்வி முதல், உயர் கல்வி வரை, தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பது, எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, தேர்வின் வழியே, மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வதும் முக்கியம். இருபது ஆண்டுகளுக்கு முன், மூன்றாம் வகுப்பில், மூன்று ஆண்டு; ஐந்தாம் வகுப்பில், ஐந்து ஆண்டு படித்தவர்கள் எல்லாம் உண்டு. அந்த அளவுக்கு, ஆரம்ப பள்ளி தேர்வுகள் கூட, கடுமையாக இருக்கும். ஆரம்ப பள்ளிகளில் படித்து, 'பாஸ்' செய்து, உயர் நிலைப்பள்ளிகளுக்கு செல்வதே, மிகப்பெரிய வெற்றியாக சொல்லப்படும்.அன்று, ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட, தமிழை, தவறு இல்லாமல் எழுதுவர்; ஆனால் இன்று, கல்லுாரி மாணவர்களுக்கு, 10 வரிகள் கூட, தவறின்றி எழுத தெரியவில்லை. அந்த அளவுக்கு, நம் கல்வியின் தரம் குறைந்து விட்டது.அதற்கு முக்கிய காரணம், எட்டாம் வகுப்பு வரையில், அனைவரும், 'பாஸ்' என்ற, அரசின் உத்தரவு தான். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நடப்பாண்டு, 10ம் வகுப்பு தேர்வு இல்லாமலேயே, அனைவரையும், பாஸ் போட வேண்டும் என, பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அது, எதிர்காலத்தில், மாணவர்களின் உயர் கல்வியை பாதிக்கும். தரம் இல்லாத மாணவர்களால், அவர்கள் படிக்கும் உயர் கல்வியும் சேதமாகிவிடும்.ஏற்கனவே, அடிப்படைக் கல்வியே சரியாக படிக்காமல், ஒன்பதாம் வகுப்பு வரை சென்ற மாணவர்களை, 10ம் வகுப்பிலும், பாஸ் போட சொல்வது, மிக தவறான செயல். பிளஸ் 1ல், கணிதம், அறிவியல், கணினி என, ஏதாவது ஒரு பாடப்பிரிவை, மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். எதன் அடிப்படையில், அவர்களின் திறனை கண்டுபிடிப்பது?நோய் தொற்று பரவாமல் இருக்க, அரசு போதிய நடவடிக்கை எடுக்கும். கொரோனா பீதியை கிளப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்.


'ஆயுஷ்' பரிந்துரைத்தும் அலட்சியம்!ஆர்.சுப்பு, திருத்தங்கல், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும், 'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு, ஒரு முடிவு கிடைத்து விட்டது. அலோபதி மற்றும் சித்தாவை தொடர்ந்து, தற்போது ஹோமியோபதி மருந்திற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ள, தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.ஹோமியோபதியில் முக்கியமானது, 'ஆர்செனிகம் ஆல்பம் - 30' என்ற மருந்தும் ஒன்றாகும். இந்த மருந்து, உடல் உறுப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கொரோனா தொற்றுக் கிருமிகளை, உடனே அழிக்கும் திறன் படைத்தது என, கருதப்படுகிறது.
கொரோனா தொற்றை தடுக்க, 'ஆர்செனிகம் ஆல்பம் - -30' மருந்தை, மத்திய அரசு நிறுவனமான, 'ஆயுஷ்' பரிந்துரைத்துள்ளது. கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் தான், இந்த பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்தி, வைரஸ் பரவலை குறைத்துள்ளன. தமிழக அரசு, தற்போது தான், அந்த மருந்தை பயன்படுத்த துவங்கியுள்ளது.ஆனால், பெரும்பாலான மாநில அரசுகள், இதை முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்த மருந்து, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் என, பரிந்துரைக்கப்பட்ட பின்னும், பல மாநில அரசுகள் அலட்சியமாக இருப்பது, வேதனை அளிக்கிறது.
அனைத்து மாநிலங்களும், 'ஆர்செனிகம் ஆல்பம் - -30' மருந்தை, மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இந்த மருந்தை, நோய் தொற்று ஏற்பட்ட பின் தான், சாப்பிட வேண்டும் என்பதல்ல; வரும் முன் காப்போம் முறையில், அந்த மருந்தை, அனைவரும் சாப்பிட வேண்டும்.மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை, தொடந்து பின்பற்றுவோம். நாம் அனைவரும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் விரைவில் வரும்.


காமராஜரிடம் பாடம் படிக்கணும்!அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் வரை சென்று, 'டாஸ்மாக்' கடைகளை திறந்து, வியாபாரம் செய்யத் துவங்கியது, அனைவரும் அறிந்ததே. தற்போது, செலவினங்களை குறைத்து கொள்ள போவதாக, அரசு கூறியுள்ளது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்று உள்ளது. தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தும், தமிழகத்தை முன்னேற்ற இயலாதவர்கள், இன்று, சிக்கன நடவடிக்கை பற்றி பேசுவது, அதிருப்தியை தருகிறது.இதே தமிழகத்தில், ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சி தந்த, காமராஜரை, இன்றைய அரசியல்வாதிகள் மறந்து விட்டனர்.இன்று, ஒவ்வொரு ஜாதிக்கும், ஒரு அமைச்சர் பதவி என, 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உள்ளனர். எந்த இலாகாவிற்கு, யார் அமைச்சர் என, மக்களுக்கு தெரியாது.ஆனால், 1954 ஏப்., 13ம் தேதி, முதல்வராக, காமராஜர் பதவி ஏற்ற போது, எட்டு பேர் உடைய அமைச்சரவையை அமைத்தார். தமிழகத்தின் பொற்காலம், அன்று தான் துவங்கியது. காமராஜர் மட்டுமல்ல, எட்டு அமைச்சர்களும், நேர்மையின் சாட்சியாக விளங்கினர்; அதிகாரிகள், சுதந்திரமாக செயல்பட்டனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக, அல்லும் பகலும் உழைத்ததால் தான், மக்கள் தலைவராக, இன்று வரை, காமராஜர் போற்றப்படுகிறார். கட்சியின் வளர்ச்சிக்காக, ஒன்பது ஆண்டு கால ஆட்சியை துறந்து, 1963 அக்., 2ம் தேதி பதவி விலகினார்; அன்றே தமிழகத்தின் வீழ்ச்சி துவங்கியது.அவருக்கு பின், நேர்மையான ஆட்சி அமையவே இல்லை என, நிச்சயமாக கூறலாம். ஏனெனில், காமராஜருக்கு பின், திராவிடக் கட்சிகளின் பிடியில், தமிழகம் சிக்கியது. அக்கட்சிகளின் ஆட்சியில், ஊழல் தான் பிரதானம்.காமராஜர் ஆட்சியில், 'டாஸ்மாக்' கிடையாது; விலையில்லா, 'டிவி, மிக்சி, கிரைண்டர்' போன்றவை கிடையாது. அவரின் ஆட்சியைப் பற்றி, பாடம் படித்திருந்தால், இன்றைய ஆட்சியாளர்கள், நிதி நெருக்கடி பற்றி புலம்ப
வேண்டியதில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X