''அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், ஸ்டாலின், திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையான எதிர்க்கட்சி தலைவர் எனில், அவரது கட்சிக்காரரை கண்டித்திருக்க வேண்டும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
சேலத்தில், முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை, தி.மு.க.,வை சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதி, அவதுாறாக பேசியுள்ளார். இது குறித்து, மதுரையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மார்ச், 12ல், சென்னை, தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கும், அரசுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம். ஆனால், திட்டமிட்டு, அரசியல் ஆதாயம் தேட, அவதுாறு பரப்பி,ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையான எதிர்க்கட்சி தலைவர் எனில், அவரது கட்சிக்காரரை கண்டித்திருக்க வேண்டும். அது தான் அரசியலில் அழகு. ஆனால், அரசியலில் நாடகமாடி, மற்றவர் மீது பழி போட்டு தப்பிக்கிறார்.
பாரதி, என்ன பெரிய விஞ்ஞானியா... என் மீது ஊழல் புகார் செய்ததால், அவரை கைது செய்ததாக குற்றம் சாட்டுகிறார். ஸ்டாலின் அறிக்கை கொடுத்தால், பத்திரிகைகள் அப்படியே வெளியிடுகின்றன. அதன் உண்மை தன்மையறிந்து வெளியிட வேண்டும். 'இ - டெண்டர்' போட்டால் யாருக்கும் தெரியாது. டெண்டர் திறந்தால் மட்டுமே, யார் போட்டது என்பது தெரியும்.
அதற்கு முன், இவருக்கு தான் டெண்டர் தரப் போகின்றனர் என, குற்றம் சொல்வது தவறு. தி.மு.க., ஆட்சியில் அப்படி நடந்திருக்கலாம். 'பாஸ்' வழங்கி, டெண்டர் தருவர். அவர்களுக்கு மட்டும், 'ஷெட்யூல்' வழங்கி டெண்டர் வழங்கப்படும். அதே நினைப்பில், ஸ்டாலின் இருக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE