சென்னை : சென்னை அரசு மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், இந்தியா உட்பட, பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.கொரோனா தொற்றில்,குணமடைந்தோரிடம் இருந்து, ரத்தத்தை தானமாக பெற்று அதில், பிளாஸ்மாவை மட்டும் பிரித்து, பாதிக்கப்பட்டுள்ளோரின் உடலில் செலுத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சையை, தமிழகத்தில் மேற்கொள்ள, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை ஈடுபட்டு உள்ளது.
இதில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஆராய்ச்சியில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, எட்டு பேரிடம் இருந்து, ரத்தம் தானமாக பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுத்து, பாதிப்புடன் உள்ள நபரின் உடலில் செலுத்தப்பட்டது. இந்த பிளாஸ்மா சிகிச்சையில், நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் உடலில், அந்த வைரஸிற்கு எதிராக, பிரத்யேக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகும். இந்த செல்கள், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவத்தில் கலந்து வைரசை அழிக்கும். அவர் விரைவாக குணமாகி விடுவார்.
தானமாக பெற்ற ரத்தத்தில், மீதமுள்ள சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் போன்ற ரத்த கூறுகள் மீணடும் தானம் கொடுத்தவரின் உடலுக்குள் செலுத்தப்படும்.இதற்கான ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE