புதுடில்லி : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன், ராகுல் பேசும் காட்சிகள் கொண்ட ஆவணப்படத்தை, காங்., நேற்று வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலைஅடுத்து கொண்டு வரப்பட்ட ஊரடங்கினால், வேலையிழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர்.
வாழ்வாதாரம்
இதுதொடர்பான, 16 நிமிட ஆவண படத்தை, காங்., நேற்று வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக, நகரங்களில் வாழ்வாதாரம் இழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வழியின்றி, புலம் பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தவித்ததை, இந்த ஆவண படம் விளக்குகிறது.கடந்த வாரம், டில்லியில், சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே, சொந்த ஊருக்கு நடந்து சென்ற, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 20 புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் பேசுகிறார்.
வேலை, வருமானம் இழப்பு ஆகிய பிரச்னைகள் குறித்து, ராகுல் அவர்களிடம் கேட்டறிகிறார். பின், காங்., கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனங்களில், தங்கள் வீடுகளுக்கு செல்லும் அவர்கள், ராகுலுக்கு நன்றி கூறுகின்றனர். இதில் தோன்றும் ராகுல் பேசுவதாவது:கொரோனா வைரஸ் ஏராளமானோரை பாதித்துள்ள நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களை அதிகம் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் முழு சுமையையும், உங்கள் தோள்களில் சுமக்கிறீர்கள்.
நாட்டின் பலம்
ஊரடங்கால் தவிக்கும், 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு, அரசு நேரடியாக, 7,500 ரூபாய் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், ராகுல் பேசுகிறார்.ஆவண படத்தின் முடிவில், 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களான சகோதர, சகோதரிகளே... நீங்கள் இந்த நாட்டின் பலம்' என, ராகுலின் குரல் ஒலிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE