சென்னை : ரம்ஜான் தினத்தன்று, பள்ளிவாசல்களில், இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த, அனுமதி அளிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, குத்புதீன் என்பவர் தாக்கல் செய்த மனு:முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும், ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பர். ஏழைகளுக்கு உதவுவதும், சகோதரத்துவத்தை வலியுறுத்துவதும் தான் நோக்கம். ரம்ஜான் தினத்தன்று, பள்ளிவாசல் சென்று, தொழுகையில் கலந்து கொள்வது வழக்கம்.தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் தினத்தன்று, சிறப்பு தொழுகை நடத்த, இரண்டு மணி நேரம் போதுமானது.சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, அமைதியாக கூடி, மத ரீதியான கடமையை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை கடைப்பிடிக்கிறோம்.
எனவே, பள்ளிவாசல்களில் நாளை, இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த, அனுமதி அளிக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ''மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.''அதன் அடிப்படையில், தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, வழிபாட்டு தலங்களில், தரிசனத்துக்கு அனுமதி கோரிய மனு, தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.அரசு பிளீடரின் வாதத்தை பதிவு செய்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE