கோவை:கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 5வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், பாரதி நகரில், 'ரிசர்வ் சைட்' 6.5 சென்ட் உள்ளது.அருகாமையில் வசிப்பவர்கள் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக, 5 கார்கள் நிறுத்தியிருந்தனர். அவற்றை அகற்றித்தர, பாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மாநகராட்சி நடத்திய விசாரணையில், அந்நிலம் சம்பந்தமாக வழக்கு நடப்பது தெரியவந்தது.
அவ்வழக்கில், கோர்ட்டில் இருந்து எவ்வித உத்தரவும் வழங்காத காரணத்தாலும், தற்போது சுகாதார சீர்கேடு ஏற்படுவதாலும், ஆக்கிரமிப்பை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.அதன்படி, தாமாக முன்வந்து கார்களை அகற்றிக் கொள்ள, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில், மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.கார்களை அகற்றாததால், மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, உதவி பொறியாளர் யோகசித்ரா ஆகியோர், நேற்று போலீசாருடன் சென்று, கிரேன் உதவியுடன் கார்களை துாக்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமான இடத்தில் வைத்தனர்.மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 'ரிசர்வ் சைட்'டை சுற்றிலும் விரைவில் கம்பி வேலி அமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE