'கொரோனாவின் பிடியில் இருந்து உலகம், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது' என்று யாராவது சொன்னால், அது ஒரு பச்சைப் பொய்! அது நிச்சயம் நடக்கும்; ஆனால், இப்போதைக்கு இல்லை.எனவே, நாம் தான் கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்களுடன், வருங்காலத்தில் எப்படி வாழப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும்.
ஏட்டுச் சுரைக்காய்
கொரோனாவிடம் இருந்து விலகியிருக்கச் சொல்லும் வழிகள் எல்லாம், ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும்.கொரோனா வராமல் இருக்க என்ன என்ன வழி உண்டோ, அதை கடைப்பிடிப்போம், ஆனால் அதையே நினைத்து, போர்வைக்குள்ளும் வீட்டுக்குள்ளும் முடங்கிக் கிடந்தால், உலகம் உருளாது.அது, கோழைத்தனமும் கூட!மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகத்தினர், கொரோனாவுக்கு பயந்திருந்தால், உலகம் என்னவாகி இருக்கும்!இவர்கள், உயிரைவிட கடமை பெரிதென கருதுகின்றனர். தளர்வு பிறந்ததும், நீங்களும் பணி செய்யக் கிளம்புவது, உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் செய்யும் கடமை.தளர்வு அறிவிக்கப்பட்ட உடன், கொரோனா நம்மிடம், 'டாட்டா' சொல்லி, கடலில் குதித்து மடியப் போவது இல்லை. 'வைரஸ் தியரி'படி, இன்னும் சில ஆண்டுகள் இங்கே தான் இருக்கும். சொல்லப் போனால், காய்ச்சல், சளி போல், அனைவருக்கும் வந்து செல்லும்.இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, மூன்று முதல் ஆறு ஆண்டு ஆகும். அதுவரை நாம், இதனுடன் வாழப் பழக வேண்டும்.'புதிய இயல்பு வாழ்க்கை' என்ற தத்துவம் தான் இது.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு, உடலாலும், மனதாலும் செம்மையாக வாழ வேண்டும் என்பது தான் இந்த தத்துவம்.கொரோனாவை விடக் கொடியது, பசியும், பட்டினியும் தான். அதில் இருந்து மீள, எளிய பல வழிகள் இருக்கின்றன.உழைப்பை பெருக்குவோம். எட்டு மணி நேர வேலை என்பதை பத்து மணி நேரமாக்கலாம். நம்மால் முடியும் என்று மனதில் உறுதி கொண்டால், பனிரெண்டு மணி நேரமாகவும் ஆக்கலாம்.ஞாயிற்றுக்கிழமைகளில், அரை நாள் கூடுதலாக வேலை பார்க்கலாம். நமக்காக, நாட்டுக்காக, பனி மலையில் இருபத்து நான்கு மணி நேரமும், நம் ராணுவத்தினர் பணிபுரிகின்றனர் என்பதை, இந்த இடத்தில் கவனத்தில் கொள்வோம்.நம் பையை விட்டு காய்கறிக் கடைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தால் தான், அது அவருக்கு அரிசியாக மாறும்; அரிசிக் கடைக்காரருக்கு, கடை வாடகையாக உருவெடுக்கும்; வாடகை விட்டவருக்கு, வங்கித்தவணை செலுத்த ஏதுவாகும். பணத்தை முடக்காமல் இப்படிச் சுழல விட்டால் தான், நாடும், எளிய மக்களும் ஏற்றம் பெறுவர்.
கலாசாரப் பெருமை
இவ்வளவு வேகமாக ஓடியும் தேடியும், எதையும் சாதித்ததாக தெரியவில்லையே... சாதனையாக வீடு, பணம், நகை, அதிகாரம், அந்தஸ்து, ஆடம்பரம் என, நினைத்திருந்த எதுவுமே, இந்த கொரோனா நாளில் துளியாவது பயன்பட்டதா... இல்லையே!இனியும் இவை பெரிதாக பயன்படப் போவதில்லை என்பது தான் உண்மை!
ஒரு முறை புத்தரிடம், அவரது சீடர் ஒருவர், ஒரு மாற்றுத் துணி கேட்டாராம். உடனே புத்தர், 'நீங்கள் உபயோகப்படுத்திய துணி என்னாயிற்று?' என்று கேட்டாராம்.அதற்கு சீடரோ, 'அது கிழிந்து விட்டது. எனவே, அடுப்பில் பாத்திரம் ஏற்ற இறக்கப் பயன்படும் கைப்பிடித் துணியாக்கி விட்டேன்' என்றாராம். 'அப்படியானால், ஏற்கனவே பயன்படுத்திய கைப்பிடித் துணி என்னவானது?' என, புத்தர் கேட்டாராம்.சீடரோ, 'அதை கால் மிதியடியாக்கி விட்டேன்' என்றாராம்.அடுத்தபடியாக புத்தர், 'ஏற்கனவே இருந்த கால் மிதியடியை என்ன செய்தீர்கள்?' என்று கேட்பார் என்பதை உணர்ந்த சீடர், 'பழைய கால் மிதியடியை துவைத்து, வெளிச்சத்திற்காக, தீப்பந்தத்தில் சுற்றி எரித்து விட்டோம்' என்றாராம். அதன் பிறகே, சீடருக்கு புதுத் துணி கிடைத்தது!அந்த அளவுக்கு, எந்த பொருளையும் வீணாக்காது பயன்பாட்டுக்குள்ளாக்கும் கலாசாரப் பெருமை மிக்கது நம் நாடு!விஷயத்திற்கு வருவோம்... மாதச் சம்பளம் பெறுபவர்களை, 'பாதுகாப்பான வளையத்தில் வாழ்பவர்கள்' என்று, பொறாமையுடன் பார்ப்பவர்கள் உண்டு; அப்படி பார்க்காதீர்கள்!
வாரிக் கொடுங்கள்
இதை உணர்ந்து பாருங்கள்; உங்களுக்கே புரியும்.உங்களில் நிறைய பேர், சிறு வயதில், தீபாவளி புதுத் துணியாக, பள்ளிச் சீருடை தான் எடுத்திருப்பீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான், செருப்பும், பேன்டும் போட்டு பழகியிருப்பீர்கள்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கைக்கடிகாரம் கேட்டு, அப்பா விடம் அடி வாங்கியிருப்பீர்கள்; கல்லுாரி போகும் போது, தாத்தா - அப்பா வழி வந்த சைக்கிளை ஓட்ட அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஆனால் இப்போது அப்படியா! ஒவ்வொருவரும் வீட்டில், செருப்புக் கடையே வைத்திருக்கின்றனர்.இனி, இதெல்லாம் மாற வேண்டும்.பாட்டி கொடுத்தது என, பூட்டி பூட்டி வைத்திருக்கும் பண்ட பாத்திரங்களை, பிறருக்கு வாரிக் கொடுங்கள்.'நுாறு நாட்கள் ஒரு பொருளை உபயோகிக்க வில்லை என்றால், அது நமக்கு உபயோகமில்லாத பொருள் என்பதை அறிய வேண்டும்' என, முன்னோர் கூறுவர்.
'பாசிட்டிவ்' உணர்வு
அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளிக் கொடுக்கலாம். வலது கை கொடுப்பதை, இடது கை அறியாத வண்ணம் கொடுக்க வேண்டும்.திருவள்ளூரில் நடந்து செல்லும், பீஹார் மாநில தொழிலாளிக்கு, வேண்டிய வசதி செய்து கொடுத்தால், சிக்மகளூரில் தவிக்கும், நம் தமிழக சொந்தங்களுக்கு, அங்கு இருப்பவர்கள் யாரோ உதவுவர்.இப்படியான, 'பாசிட்டிவ்' உணர்வு, உலகமெங்கும் பரவும்; பரவ வேண்டும்!புதியதோர் உலகம் செய்வோம்! எளிமையான வாழ்க்கை, வலிமையான பாரதம், வளமான தமிழகம் நோக்கி நகர்வோம்!
-எல்.ஆதிமூலம்
பத்திரிகையாளர்.
தொடர்புக்கு:இ - மெயில்: adimoolam@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE