கொரோனாவோடு வாழலாம் வாங்க!| Dinamalar

கொரோனாவோடு வாழலாம் வாங்க!

Updated : மே 25, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (12)
Share
'கொரோனாவின் பிடியில் இருந்து உலகம், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது' என்று யாராவது சொன்னால், அது ஒரு பச்சைப் பொய்! அது நிச்சயம் நடக்கும்; ஆனால், இப்போதைக்கு இல்லை.எனவே, நாம் தான் கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்களுடன், வருங்காலத்தில் எப்படி வாழப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும்.ஏட்டுச் சுரைக்காய்'இன்றைய தேதிக்கு எனக்கு கொரோனா இல்லை' என்று
கொரோனாவோடு வாழலாம் வாங்க!

'கொரோனாவின் பிடியில் இருந்து உலகம், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது' என்று யாராவது சொன்னால், அது ஒரு பச்சைப் பொய்! அது நிச்சயம் நடக்கும்; ஆனால், இப்போதைக்கு இல்லை.எனவே, நாம் தான் கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்களுடன், வருங்காலத்தில் எப்படி வாழப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும்.


ஏட்டுச் சுரைக்காய்'இன்றைய தேதிக்கு எனக்கு கொரோனா இல்லை' என்று எவரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. கொரோனா அறிகுறி தெரிந்து சிகிச்சை எடுத்து வாழ்பவர்கள்; கொரோனா அறிகுறி தெரியாமல், சிகிக்சை எடுத்துக் கொள்ளாமல் வாழ்பவர்கள் என்ற, இரண்டே பிரிவிற்குள் தான் நாம் எல்லாரும், கிட்டத்தட்ட நாட்களை நகர்த்துகிறோம்.யாருடனும் பேசாமல், எதையும் தொடாமல் வாழ்வது என்பது, தீவில் கூட நடக்காது.

கொரோனாவிடம் இருந்து விலகியிருக்கச் சொல்லும் வழிகள் எல்லாம், ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும்.கொரோனா வராமல் இருக்க என்ன என்ன வழி உண்டோ, அதை கடைப்பிடிப்போம், ஆனால் அதையே நினைத்து, போர்வைக்குள்ளும் வீட்டுக்குள்ளும் முடங்கிக் கிடந்தால், உலகம் உருளாது.அது, கோழைத்தனமும் கூட!மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகத்தினர், கொரோனாவுக்கு பயந்திருந்தால், உலகம் என்னவாகி இருக்கும்!இவர்கள், உயிரைவிட கடமை பெரிதென கருதுகின்றனர். தளர்வு பிறந்ததும், நீங்களும் பணி செய்யக் கிளம்புவது, உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் செய்யும் கடமை.தளர்வு அறிவிக்கப்பட்ட உடன், கொரோனா நம்மிடம், 'டாட்டா' சொல்லி, கடலில் குதித்து மடியப் போவது இல்லை. 'வைரஸ் தியரி'படி, இன்னும் சில ஆண்டுகள் இங்கே தான் இருக்கும். சொல்லப் போனால், காய்ச்சல், சளி போல், அனைவருக்கும் வந்து செல்லும்.இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, மூன்று முதல் ஆறு ஆண்டு ஆகும். அதுவரை நாம், இதனுடன் வாழப் பழக வேண்டும்.'புதிய இயல்பு வாழ்க்கை' என்ற தத்துவம் தான் இது.

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு, உடலாலும், மனதாலும் செம்மையாக வாழ வேண்டும் என்பது தான் இந்த தத்துவம்.கொரோனாவை விடக் கொடியது, பசியும், பட்டினியும் தான். அதில் இருந்து மீள, எளிய பல வழிகள் இருக்கின்றன.உழைப்பை பெருக்குவோம். எட்டு மணி நேர வேலை என்பதை பத்து மணி நேரமாக்கலாம். நம்மால் முடியும் என்று மனதில் உறுதி கொண்டால், பனிரெண்டு மணி நேரமாகவும் ஆக்கலாம்.ஞாயிற்றுக்கிழமைகளில், அரை நாள் கூடுதலாக வேலை பார்க்கலாம். நமக்காக, நாட்டுக்காக, பனி மலையில் இருபத்து நான்கு மணி நேரமும், நம் ராணுவத்தினர் பணிபுரிகின்றனர் என்பதை, இந்த இடத்தில் கவனத்தில் கொள்வோம்.நம் பையை விட்டு காய்கறிக் கடைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தால் தான், அது அவருக்கு அரிசியாக மாறும்; அரிசிக் கடைக்காரருக்கு, கடை வாடகையாக உருவெடுக்கும்; வாடகை விட்டவருக்கு, வங்கித்தவணை செலுத்த ஏதுவாகும். பணத்தை முடக்காமல் இப்படிச் சுழல விட்டால் தான், நாடும், எளிய மக்களும் ஏற்றம் பெறுவர்.
கலாசாரப் பெருமைசிக்கனமாக இருப்பது வேறு; கஞ்சத்தனமாக இருப்பது வேறு. உங்கள் பணத்தை, நியாயமான முறையில் செலவு செய்யுங்கள். 'உங்கள் வழிச்செலவு எங்கள் வாழ்க்கைச் செலவு' என, ஆட்டோக்களில் வசனம் எழுதப்படுவது வழக்கம்; அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.கடந்த, 60 நாட்களில் உலகம் கற்றுக் கொண்ட பாடம், உயிருக்கு நிகரானது எதுவும் இல்லை என்பது தான்.இந்த உயிருக்கு தேவை, எளிமையான, இயல்பான, அன்பான, அழகான, அளவான, நேர்த்தியான, நேர்மையான வாழ்க்கை மட்டுமே.கூடவே, சுற்றுச் சுழலுக்கு கெடுதல் புரியாத, சக மனிதர்களை மதித்து, உதவி புரிந்து வாழ்ந்து விட்டால், அதை விட மகிழ்ச்சியான வாழ்க்கை, வேறு எதுவும் இல்லை!இவ்வளவு நாளாக, எதை நோக்கி நாம், இவ்வளவு மூச்சிரைக்க ஓடினோம்; எதைத் தேடினோம் என்பதை நினைக்கையில், வெட்கம் தான் ஏற்படுகிறது.

இவ்வளவு வேகமாக ஓடியும் தேடியும், எதையும் சாதித்ததாக தெரியவில்லையே... சாதனையாக வீடு, பணம், நகை, அதிகாரம், அந்தஸ்து, ஆடம்பரம் என, நினைத்திருந்த எதுவுமே, இந்த கொரோனா நாளில் துளியாவது பயன்பட்டதா... இல்லையே!இனியும் இவை பெரிதாக பயன்படப் போவதில்லை என்பது தான் உண்மை!

ஒரு முறை புத்தரிடம், அவரது சீடர் ஒருவர், ஒரு மாற்றுத் துணி கேட்டாராம். உடனே புத்தர், 'நீங்கள் உபயோகப்படுத்திய துணி என்னாயிற்று?' என்று கேட்டாராம்.அதற்கு சீடரோ, 'அது கிழிந்து விட்டது. எனவே, அடுப்பில் பாத்திரம் ஏற்ற இறக்கப் பயன்படும் கைப்பிடித் துணியாக்கி விட்டேன்' என்றாராம். 'அப்படியானால், ஏற்கனவே பயன்படுத்திய கைப்பிடித் துணி என்னவானது?' என, புத்தர் கேட்டாராம்.சீடரோ, 'அதை கால் மிதியடியாக்கி விட்டேன்' என்றாராம்.அடுத்தபடியாக புத்தர், 'ஏற்கனவே இருந்த கால் மிதியடியை என்ன செய்தீர்கள்?' என்று கேட்பார் என்பதை உணர்ந்த சீடர், 'பழைய கால் மிதியடியை துவைத்து, வெளிச்சத்திற்காக, தீப்பந்தத்தில் சுற்றி எரித்து விட்டோம்' என்றாராம். அதன் பிறகே, சீடருக்கு புதுத் துணி கிடைத்தது!அந்த அளவுக்கு, எந்த பொருளையும் வீணாக்காது பயன்பாட்டுக்குள்ளாக்கும் கலாசாரப் பெருமை மிக்கது நம் நாடு!விஷயத்திற்கு வருவோம்... மாதச் சம்பளம் பெறுபவர்களை, 'பாதுகாப்பான வளையத்தில் வாழ்பவர்கள்' என்று, பொறாமையுடன் பார்ப்பவர்கள் உண்டு; அப்படி பார்க்காதீர்கள்!
வாரிக் கொடுங்கள்நாட்டில், மாத சம்பளம் பெறுபவர்கள், குறைந்த சதவீதம் பேர் தான். ஆனால் அவர்களிடம் இருந்து, பலவிதங்களில் வரியாக பிடித்த பணத்தில் தான், நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு, இந்த கொரோனா காலத்தில், உணவும், மானிய பணமும், ரேஷன் பொருட்களும் கொடுக்க முடிகிறது.ஆகவே, அரசுக்கு வரி கட்டுவதை, அனாவசியம் எனக் கருத வேண்டாம். அது, எங்கோ, யாருக்கோ உதவுகிறது என, நம்புங்கள்!கஷ்டப்படும் சக மனிதர்களுக்கு, உணவாகவோ, உடையாகவோ, போர்வையாகவோ, ஏன் செருப்பாகவோ கூட வாங்கிக் கொடுங்கள். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் கொடுத்துப் பெறும் சந்தோஷத்திற்கு ஈடு ஏதும் இல்லை.

இதை உணர்ந்து பாருங்கள்; உங்களுக்கே புரியும்.உங்களில் நிறைய பேர், சிறு வயதில், தீபாவளி புதுத் துணியாக, பள்ளிச் சீருடை தான் எடுத்திருப்பீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான், செருப்பும், பேன்டும் போட்டு பழகியிருப்பீர்கள்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கைக்கடிகாரம் கேட்டு, அப்பா விடம் அடி வாங்கியிருப்பீர்கள்; கல்லுாரி போகும் போது, தாத்தா - அப்பா வழி வந்த சைக்கிளை ஓட்ட அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஆனால் இப்போது அப்படியா! ஒவ்வொருவரும் வீட்டில், செருப்புக் கடையே வைத்திருக்கின்றனர்.இனி, இதெல்லாம் மாற வேண்டும்.பாட்டி கொடுத்தது என, பூட்டி பூட்டி வைத்திருக்கும் பண்ட பாத்திரங்களை, பிறருக்கு வாரிக் கொடுங்கள்.'நுாறு நாட்கள் ஒரு பொருளை உபயோகிக்க வில்லை என்றால், அது நமக்கு உபயோகமில்லாத பொருள் என்பதை அறிய வேண்டும்' என, முன்னோர் கூறுவர்.

அந்த வார்த்தைக்கு இணங்க, நீங்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை, பயன்படுத்துவோருக்குக் கொடுத்து விடுங்கள்.


'பாசிட்டிவ்' உணர்வுநீங்கள் கொடுப்பது, திடீரென வேலையை இழந்த தொழிலாளியாக இருக்கலாம்; தொழில் இல்லாமல் நஷ்டப்பட்ட சிறு வியாபாரியாக இருக்கலாம்.அன்றாடம் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி, குடும்பத்தைக் காக்கும் நபராக இருக்கலாம்; புலம் பெயர்ந்து வந்து, வெயிலிலும், மழையிலும் வாடும் கட்டடத் தொழிலாளியாக இருக்கலாம்.இவர்கள் எல்லாம், கை நீட்டி கேட்க மாட்டார்கள்; நாம் தான் தேடித் தேடி கொடுக்க வேண்டும். மூட்டை மூட்டையாக கொடுக்கா விட்டாலும், முடிந்த வரை கொடுக்கலாம்.

அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளிக் கொடுக்கலாம். வலது கை கொடுப்பதை, இடது கை அறியாத வண்ணம் கொடுக்க வேண்டும்.திருவள்ளூரில் நடந்து செல்லும், பீஹார் மாநில தொழிலாளிக்கு, வேண்டிய வசதி செய்து கொடுத்தால், சிக்மகளூரில் தவிக்கும், நம் தமிழக சொந்தங்களுக்கு, அங்கு இருப்பவர்கள் யாரோ உதவுவர்.இப்படியான, 'பாசிட்டிவ்' உணர்வு, உலகமெங்கும் பரவும்; பரவ வேண்டும்!புதியதோர் உலகம் செய்வோம்! எளிமையான வாழ்க்கை, வலிமையான பாரதம், வளமான தமிழகம் நோக்கி நகர்வோம்!

-எல்.ஆதிமூலம்
பத்திரிகையாளர்.
தொடர்புக்கு:இ - மெயில்: adimoolam@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X