தமிழ்நாடு

இவர்களையும் மனதார வாழ்த்தலாமே

Added : மே 24, 2020
Share
Advertisement

ஊரடங்கு நாட்களில் மக்களுக்காக தொடர்ந்து பல சேவைகள் செய்யும் நம் சமூகத்தின் மீது தீராத காதல், அக்கறை கொண்ட மதுரை மண்ணின் உதவும் கரங்களை மனதார வாழ்த்த வேண்டிய நேரம் இது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உதவும் உள்ளம் என்பதை நிரூபித்து வரும் சேவகர்கள் மனம் திறக்கிறார்கள்.
580 குடும்பங்களுக்கு உதவி
ஆர்.கவிதா
தை புரட்சி இயக்கம் பொறுப்பாளராக உள்ளேன். இயக்கம் மூலம் ஊரடங்கு துவங்கிய நாள் முதல் மக்களுக்காக பல சேவைகள் செய்கிறோம். இயக்கத்தில் உள்ள 70 உறுப்பினர்கள் மதுரையை சுற்றியுள்ள வசதி இல்லாத 580 குடும்பங்களை கண்டறிந்தனர். அந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குரிய அரிசி, பலசரக்கு வழங்கினோம். பேரையூர் வண்ணாங்குளம் பகுதியில் வசிக்கும் நலிவடைந்த கிராமிய கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினோம். அன்னவாசல் திட்டத்தில் இணைந்து ஆதவரற்ற நபர்களை அடையாளம் கண்டு உணவு வழங்கி வருகிறோம்.
அரவணைக்கும் அன்பு இல்லம்
பி.விஜயபாரதி
பாரதி ஆதவற்றோர் அன்பு இல்லம் நடத்தி வருகிறேன். இதன் மூலம் ஆதரவற்றவர்களை அரவணைக்கிறோம். வேலை இல்லாதவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வேலைவாய்ப்பு, தங்குமிடம், உணவு வழங்குகிறோம். தனிமைப்படுத்திய பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த வடநாட்டினர் உட்பட 30 நபர்களை அருகில் உள்ள மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பினோம். போலீஸ் உதவி கமிஷனர் லில்லி கிரேஸ் உட்பட நண்பர்கள், தன்னார்வலர்களிடம் நிவாரண பொருட்களை பெற்று ஏழை, எளிய மக்களுக்கு உதவினோம்.
ஆரப்பாளையம் பகுதி லாரி டிரைவர்கள் குடும்பங்களுக்கு கூட அத்தியாவசிய பொருட்களை வழங்கியிருக்கிறோம்.
நண்பர்களால் சாத்தியமாகிறது
கண்ணன்
கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் வேலையின்றி தவித்த கூலி தொழிலாளர்கள், ஏழைகள், திருநங்கைகளுக்கு
அரிசி, மளிகைபொருட்களை வழங்கி வருகிறேன். என் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வறுமையில் வாடியவர்களுக்கு வழங்குகிறேன். அறுவடை செய்யும் வாழை பழங்களை அழகர்கோவில், திருப்பரங்குன்றம் மலையில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் சென்று வழங்கி வருகிறேன். என் சேவையை கண்டு நான் சார்ந்த மாவட்ட சர்வோதய சங்கமும் எனக்கு உதவிகளை வழங்கியது. சங்கம் கைகளை கழுவ உதவும் சோப்புகளை தந்துதவியது. நண்பர்களும் என்னுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் உதவியுடன் இதுவரை எட்டாயிரம் முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்ட சில நிவாரண பொருட்களை மாவட்ட, மாநகராட்சி, போலீஸ் நிர்வாகங்களிடம் வழங்கியிருக்கிறேன். நண்பர்களால் இச்சேவை சாத்தியமாகிறது.
கை கொடுத்து உதவுவோம்
பிரபாகரன்
கல்லுாரி நண்பர்கள் குழு மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மளிகை பொருட்கள் இதுவரை ஐந்து கட்டங்களாக வழங்கியுள்ளோம். சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மஸ்கட்டில் பணிபுரியும் என் தந்தை ராஜா விருப்பத்தின்படி கோயில் பணியாளர்கள் 700 பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. குடியிருப்புகளில் கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். தேவைகள் உள்ள மக்கள் குறித்து தெரிய
வந்தால் அவர்களின் இருப்பிடங்களுக்கு எங்கள்
குழுவினர் சென்று நிவாரணம் வழங்கி கை கொடுத்து
உதவுகின்றனர். இச்சேவை ஊரடங்கு முடியும் வரை
தொடரும்.

ஆதரவற்றோருக்கு அரவணைப்பு
சேது
நண்பர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து சுரபி அறக்கட்டளை மூலம் தெருவில் திரியும் ஆதரவற்றோரை மீட்டு சமுதாய கூடங்களில் தங்க வைக்கிறோம். அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற உதவுகிறோம். கொரோனா ஊரடங்கு துவங்கிய நாள் முதல் கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வழிகாட்டுதலின்படி ஆதரவற்றோர்களை மீட்டு அவர்கள் உத்தரவின்படி சமுதாய கூடங்களில் அனுமதிக்கிறோம். சுரபி அறக்கட்டளை பராமரிப்பில் ஹார்விபட்டி சமுதாய கூடம் உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம். சிலர் புண்கள் உள்ளிட்ட நோய்களால் சிரமப்படுவர். அவர்களை தனியாக எங்களின் தாய்மடி இல்லத்தில் பராமரித்து வருகிறோம். நண்பர்கள் அளிக்கும் நிதியுதவியுடன் அறக்கட்டளை சார்பில் சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்குகிறோம். வறுமையில் வாடுவோருக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம்.
மன நிம்மதி தருகிறது
ராகவன்
அக்குபஞ்சர் டாக்டராக உள்ளேன். ஊரடங்கு துவங்கிய நாள் முதல் தற்போது வரை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்குகிறோம். எங்கள் பகுதி இளைஞர்கள் உதவியுடன் செல்லுார், மீனாட்சிபுரம், துவரிமான் என தினமும் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று ஒரு நபருக்கு50 எம்.எல்., வீதம் வழங்குகிறோம். பொது இடங்களில் காய்ச்சி சமூக இடைவெளியை பின்பற்றி வினியோகம் செய்கிறோம். தினமும் ரூ.1500 செலவாகிறது. தனியார் குடியிருப்புகள், போலீஸ் ஸ்டேஷன்கள், இ.பி., அலுவலர்கள் என பல தரப்பினரும் பயனடைகின்றனர். பெத்தானியாபுரம் சிவசக்தி அறக்கட்டளை உட்பட உணவு அளிக்கும் சில அமைப்புகளுக்கு அவ்வப்போது அரிசி பைகள் வழங்குகிறோம். கொரோனா பேரிடர் கால சவால்களை மீறி மக்களுக்கு செய்யும் இச்சேவையால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X