நாமக்கல் : 'கொரோனா வைரஸ் தொற்றால், கோழி பண்ணையாளர்களுக்கு, இதுவரை, 560 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவர், சிங்கராஜ், செயலாளர், சுந்தர்ராஜன் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: சீனாவில், கொரோனா வைரஸ் பரவ துவங்கிய காலத்தில் இருந்தே, கோழிப்பண்ணை தொழில், கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிற்கு கொரோனா வந்த பின், தீவன மூலப் பொருட்களை, பக்கத்து மாநிலத்தில் இருந்து எடுத்து வரமுடியாததால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதனால், முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணை தொழிலுக்காக, வங்கியில், 4 சதவீதம், குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
ஏற்கனவே, வாங்கிய கடனை செலுத்த, ஐந்து ஆண்டு அவகாசம் அளிக்க வேண்டும். தீவன மூலப்பொருட்கள் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட, 5 சதவீத, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோழிப் பண்ணையில் பணியாற்றி வந்த, 50 சதவீத வட மாநிலத்தவர்கள், தற்போது, சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதனால், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களை, கோழிப்பண்ணை தொழிலில் அரசு ஈடுபடுத்தினால், தொழிலும் மேம்படும், அரசுக்கும் செலவு குறையும். சத்துணவிற்கு முட்டைகள் செல்லாததால், முட்டை விற்பனை குறைந்து வருகிறது.
அரசு தலையிட்டு, முட்டை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக, மானிய விலையில், முட்டை வழங்கவும், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தினமும், இரண்டு முட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் இருந்து, இதுவரை, கோழிப்பண்ணையாளர்களுக்கு, 560 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.