திருப்பூர் : நெல் உட்பட, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து, சி.ஏ.சி.பி., எனப்படும், விவசாய செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது வழக்கம்.இது குறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, காரீப் பருவத்தில், அதிகபட்சமாக நெல், 40 சதவீத அளவுக்கு பயிரிடப்படுகிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டால், 1,835 ரூபாயில் இருந்து, 1,888 ரூபாயாக உயர்த்த, சி.ஏ.சி.பி., பரிந்துரைத்துள்ளது.
உளுந்துக்கான ஆதரவு விலை, கடந்த ஆண்டு, குவிண்டாலுக்கு, 5,000 ரூபாயாக இருந்தது. அதை, 6,000 ரூபாயாக்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பருத்தி உட்பட, 17 வகை பயிர்களுக்கான, ஆதரவு விலையை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. உணவு தானியங்களின் உற்பத்தி, சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பதால், சமையல் எண்ணெய் இறக்குமதியை பெருமளவு தவிர்க்க முடியும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.