குடையுடன் வந்த, குடிமகன்களுக்கு, டோக்கன் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடையுடன் வந்த, 'குடி'மகன்களுக்கு, 'டோக்கன்' வினியோகம்

Added : மே 24, 2020
Share

திருவள்ளூர் மாவட்டத்தில், 15 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும், 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டு குடை, ஆதார் கார்டு மற்றும் முக கவசத்துடன் வந்தவர்களுக்கு மட்டும், 'டோக்கன்' வழங்கப்பட்டது.

ஊரடங்கால், இம்மாதம், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், டாஸ்மாக் கடைகள் திறந்து, விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, 15 நாட்களுக்கு பின், நேற்று, திருவள்ளூர் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.குடை, முகக் கவசம் மற்றும் ஆதார் கார்டு உள்ள, 'குடி'மகன்களுக்கு மட்டும், டோக்கன் வழங்கப்பட்டது. திருத்தணி பகுதியில், காசிநாதபுரம் - 2; வள்ளியம்மாபுரம் - 3 என, ஐந்து கடைகள் திறந்து, எங்களிடம் டோக்கன் வாங்கிக் கொள்ளுங்கள் என, 'குடி'மகன்களை கூவி, கூவி அழைத்தனர்.

கும்மிடிப்பூண்டி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 'டாஸ்மாக்' கடைகள் திறந்து டோக்கன் முறையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சரக்கு விற்பனை செய்தனர். 'குடி'மகன்கள் தள்ளுமுள்ளு இன்றி, சமூக இடைவெளியுடன் நின்று சரக்குகள் வாங்கினர்.

கடம்பத்துார் ஒன்றியத்தில், கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, போளிவாக்கம், சத்தரை என, ஐந்து இடங்களில், ஆறு டாஸ்மாக் கடைகள் திறந்து விற்பனை செய்யப்பட்டன.50 பேர் கைதுசோழவரம் அடுத்த, அருமந்தை கூட்டுச்சாலையில், டாஸ்மாக் கடை இரு மாதத்திற்கு பின், நேற்று காலை திறக்கப்பட்டது. இதற்கு, அப்பகுதி சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 10 பெண்கள் உட்பட, 50 பேரை கைது செய்தனர். பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 'டாஸ்மாக்' கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

- நமது நிருபர் குழு-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X