பவானி: கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், குடும்பத்தை காப்பாற்றும் கடமை இருப்பதால், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள, பல அடி உயர தடுப்பில் ஏறி, தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் அபாயநிலை, பார்ப்போரை பதற வைக்கிறது.
நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் இருந்து, காவிரி ஆற்றுப்பாலம் வழியாக, ஈரோடு மாவட்டம் பவானிக்கு, தினமும் கூலி வேலைக்கு ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கால், மாவட்ட எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வால், கடந்த, 17ல் குமாரபாளையத்தில் தடுப்பு அகற்றப்பட்டது. ஆனால், பவானியில் தடுப்பு அகற்றப்படவில்லை. குறிப்பாக பவானி, குமாரபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்று பாலங்களான புதுப்பாலம், மற்றும் பழைய பாலத்தில் தடுப்பை அகற்றவில்லை. இதனால் இரண்டு மாதமாக கூலி தொழிலாளர்கள், வேலைக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் பவானி, லட்சுமி நகர் பைபாஸ் சென்று, காவிரி ஆற்றுப்பாலத்தை சுற்றிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டூவீலர் வைத்திருப்போர் பைபாஸ் வழியாக, பவானி வந்து செல்கின்றனர். நடந்து செல்லும் தொழிலாளர்கள், இதன் வழியாகத்தான் சென்றாக வேண்டும். குடும்பத்தை நடத்தவே வருமானம் இல்லாத அவலத்தில், கொரோனா அச்சத்தை மறந்து, பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே புது பாலத்தில், இரும்பு தடுப்பின் மீதேறி, உயிர் பயத்தை துறந்து, கடந்து வேலைக்கு செல்கின்றனர்.
அமைச்சர் சொன்னபடி நடக்குமா? பவானி சட்டசபை பகுதியில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது, நிருபர்களிடம் கூறுகையில், 'ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலம், நான்கு நாட்களில் திறந்து விடப்படும்' என்றார். அமைச்சர் சொன்னபடி நடக்குமா? என, தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE