கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, அரசு பள்ளி ஆசிரியரை காரில் கடத்திச்சென்று தாக்கிய, தனியார் மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணையை சேர்ந்தவர் இளங்கோ, 51; ஆண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார்; இவர், தர்மபுரி தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும், கம்பைநல்லூர் அடுத்த சின்ன முருக்கம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார், 36, மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 38, ஆகியோருக்கு, சென்னையை சேர்ந்த மரியதாஸ் என்பவரை, அறிமுகப்படுத்தினார். அப்போது, பணம் கொடுத்தால் மரியதாஸ், அரசு பணி வாங்கி தருவார் எனக்கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும், கடந்த நான்கு ஆண்டுக்கு முன், மரியதாஸிடம், ஒன்பது லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். அவர், அரசு பணி பெற்றுத்தராத நிலையில், மாரடைப்பால் இறந்தார். இதனால், கடந்த, 21ல், வசந்தகுமார் மற்றும் சரவணன் ஆகியோர், ஆசிரியர் இளங்கோ வீட்டிற்கு சென்று, பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்துள்ளதால், ஆத்திரமடைந்த இருவரும், ஹூண்டாய் சாண்ட்ரோ காரில் அவரை கடத்தினர். அவரை தாக்கி மிரட்டினர். இதில் காயமடைந்த, இளங்கோ, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின்படி, நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார், வசந்தகுமார், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE