சீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம்| Dinamalar

சீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம்

Updated : மே 26, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (7)
Share
சீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம்

புதுடில்லி: இந்திய எல்லைப்பகுதிக்கு ஒட்டியுள்ள பேன்காங் சோ நதிப் பகுதியில், சீனா திடீரென பதுங்குக் குழிகள் அமைப்பது மற்றும் கால்வான் பகுதியில் மூன்று இடங்களில் அத்துமீறி நுழைந்தது, எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா, 3,488 கி.மீ., துார எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இருநாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால், அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு
வருகிறது.


பதுங்கு குழிகடந்த, 2017ல், டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைக்க முற்பட்டபோது, இரு நாட்டு ராணுவமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இரு தரப்பும், 70 நாட்களுக்கு மேலாக, எல்லையில் குவிக்கப்பட்டன. துாதரக பேச்சு மூலம், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், தன் எல்லைக்குட்பட்ட பேன்காங் சோ நதிப் பகுதியில், ராணுவத்தை சீனா குவித்துள்ளது. அங்கு பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இதைத் தவிர, இந்திய எல்லைக்குட்பட்ட, கால்வான் பகுதிக்குள், சீனா ராணுவம் மூன்று இடங்களில் அத்துமீறி நுழைந்தது. நம் படைகள் உடனடியாக செயல்பட்டு, சீன ராணுவத்தை விரட்டியடித்தன.

ஆனாலும், எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இது இரு தரப்பு உறவில் புதிய திருப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.இது குறித்து, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில நாட்களாக, அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்தும், தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்த நிலையில், சீனாவும் எல்லையில், தன் ராணுவத்தை குவித்துள்ளது.

இது ஏதேச்சையாக நடந்ததாகக் கருத முடியவில்லை.இரு நாடுகளும் இணைந்து, ஏதோ ஒரு திட்டத்துடன் செயல்படுவதாகவே பார்க்க வேண்டியுள்ளது.லடாக்கின் கால்வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அதன் அருகே, சீனா அதிகளவு ராணுவத்தை குவித்து வருகிறது.இதற்கிடையே, மிகவும் கரடுமுரடான பகுதியில், பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருவது, சந்தேகத்தை அதிகரிக்க செய்கிறது.இந்தியப் படைகள் முன்னேறாமல் தடுப்பதற்காக, இந்த பதுங்கு குழிகள் அமைப்பதாக கருதப்படுகிறது. அதனால், நம் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த, 1999ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான, கார்கில் போரின்போது, நம் படைகள் வெற்றியுடன் திரும்பியன. அப்போது, பேன்காங் சோ நதி அருகே, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ௫ கி.மீ., துார சாலையை சீனா அமைத்தது. தற்போதும், அது போன்ற ஏதோ ஒரு திட்டத்தை, சீனா வைத்துள்ளது. ஒரே நேரத்தில், பாகிஸ்தானும், சீனாவும் எல்லையில் குவிந்திருப்பது, கூர்ந்து கவனிக்கப்படுகிறது.


கைப்பற்றலாம்ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, முதல் கோடைக் காலம் வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அகாசிசின் பகுதிகளை, இந்தியா மீண்டும் கைப்பற்றலாம் என, பாகிஸ்தான் மற்றும் சீனா கருதுகின்றன. இது சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்துக்கு இடையூறாக அமைந்து விடும்.

மேலும், ஆப்கானிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில், இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, சீனாவுக்கு நிச்சயம் எரிச்சலையும், புகைச்சலையும் ஏற்படுத்தி இருக்கும்.அதனால் தான், பாகிஸ்தானை சீனா துாண்டிவிட்டு, தானும் களத்தில் இறங்கியுள்ளது. மேலும், நேபாளத்தையும் துாண்டிவிட்டுஉள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை, தன் பகுதியாக அறிவித்து, புதிய தேசிய வரைபடத்தை வெளியிடும் அளவுக்கு, நேபாளம் முனைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news
அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு என்ன அழுத்தம்?தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டுமாம். அது போல, ஒரு பிரச்னையை மறக்கடிக்க செய்ய, மற்றொரு பிரச்னையை கையில் எடுப்பது தான் அரசியல். அந்த அரசியலையே, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், அவருடைய சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது செய்கின்றன.கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால், உலக அளவில் சீனாவுக்கான மதிப்பு குறைந்து வருகிறது. இதனால், உலகின் உற்பத்தி மையமாக விளங்கும் சீனா, தன் பொருட்களை, மற்ற நாடுகளில் விற்க, கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இது ஒரு புறம் இருக்கையில், சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கூட்டம், இம்மாதம், 22ல் துவங்கியுள்ளது. அதில், கொரோனா வைரஸ், பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.


ஆலோசனை கூட்டம்அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசியல், பொருளாதார, வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவே, இந்தக் கூட்டம் நடக்கிறது. இதைத் தவிர, அரசுக்கு அரசியல் ஆலோசனை வழங்கும், மக்கள் ஆலோசனை மன்றத்தின் கூட்டமும் நடக்கிறது.கடந்த, 1949ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி, மோசமான நெருக்கடியை சந்தித்ததில்லை. தற்போது, மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை நாடு சந்திக்கிறது. இது தொடர்பாக, இந்தக் கூட்டங்களில் கண்டிப்பாக விவாதிக்கப்படும்.சீன ராணுவத்தின் தலைவராகவும் ஸீ ஜின்பிங் உள்ளார். அவருக்கு தற்போதைக்கு அரசியல் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால், தனக்கு எதிராக, ஒரு சின்ன முனகல் கூட இருக்கக் கூடாது என, அவர் நினைக்கிறார்.அதனால், பொருளாதார பாதிப்பு குறித்து, இந்தக் கூட்டங்களிலோ, மக்களிடமோ அதிருப்தி ஏற்படுவதை தடுக்க அவர் கையாண்டதே, தற்போதைய ராணுவ நடவடிக்கை.உள்நாட்டு பொருளாதார பிரச்னை, ஹாங்காங் மற்றும் தைவான் பிரச்னைகளில் இருந்து மக்களையும், உலக நாடுகளையும் திசை திருப்ப வேண்டும்; தெற்காசியாவில் இந்தியா வளர்ந்து வருவதையும் தடுக்க வேண்டும்.அதனால், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துக்கு எதிராக இந்தியா உள்ளது போல் சித்தரிக்க, ஜின்பிங் முயன்றுள்ளார்.

அவர் கையசைவுக்கு ஏற்ப, பாகிஸ்தான், நேபாள பொம்மைகளும் தலையாட்டியுள்ளன.அமெரிக்காவுடனான வர்த்தக உறவு கேள்விக் குறியாக உள்ளது. அந்த நேரத்தில், உலகின் மிகப் பெரிய சந்தையான இந்தியா தான், சீனாவின் இலக்கு. ஆனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடு.இதைத் தவிர, சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில், கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதில், இந்தியாவும் ஒன்று. அதனால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனை, ஜின்பிங்கின் மூளையில் திடீரென உதித்து உள்ளது.

ஜின்பிங்கின் இந்த முயற்சி, ஏதோ புதிய சிந்தனை எல்லாம் இல்லை. இது வழக்கமான, சீனாவின் பழைய பார்முலா தான்.அதை துாசி தட்டி, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, கொஞ்சம், 'பாலிஷ்' செய்துள்ளார் ஜின்பிங்.கடந்த, 1962ல், சீனாவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அதிபராக இருந்த, மாவோ ஜெடாங்கின் மோசமான திட்டங்களால், அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அதை மறைக்க, நம் எல்லையில் பிரச்னையை உருவாக்கினார். அதேபோல், 1979ல் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிபராக இருந்த டெங்க் ஜியோபிங், வியட்நாம் போரின் மூலம், விவகாரத்தை திசை திருப்பினார். தற்போது அதுபோன்ற ஒரு முயற்சியை, ஜின்பிங் மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.


சிறந்த நடவடிக்கைலடாக்கில், நம் எல்லையில், டார்பக் - ஷியோக் - டி.பி.ஓ., சாலையை இந்தியா அமைத்துள்ளது. இது, நம் ராணுவத்தை, எல்லைப் பகுதிக்கு விரைவாக அனுப்ப, பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டாலும், இரு நாடுகளும் போருக்கு தயார் இல்லை.

இது இந்தியாவை மிரட்டிப் பார்க்கவும், உள்நாட்டில் அதிருப்தியை சமாளிக்கவும், ஜின்பிங் போட்டுள்ள முகமூடி. வரும், 28ம் தேதி வரை, தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் நடக்கிறது. அதுவரை, இதுபோன்ற பூச்சாண்டி காட்சிகள் நடக்கும்.ஆனால், நிரந்தரப் பிரச்னைக்கான ஒரே தீர்வு, வூஹான், மாமல்லபுரம் சந்திப்பு போல், மோடி - ஜின்பிங் இடையே மற்றொரு மனந்திறந்த பேச்சின் மூலமே ஏற்பட வாய்ப்புள்ளதாக, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X