சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பெற்றோரே... உங்கள் கடமை தான் என்ன?

Added : மே 24, 2020
Share
Advertisement

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'பப்ஜி' என்ற, மொபைல்போன் விளையாட்டால், 15 வயது சிறுவன், மயங்கி விழுந்து இறந்துள்ளான் என்ற செய்தி, வருத்தம் தருகிறது. இதே போல, சில மாதங்களுக்கு முன், 'ப்ளூ வேல்' விளையாட்டால், பல சிறுவர்கள் இறந்தது நினைவுக்கு வரலாம். இது போன்ற, மொபைல்போன் விளையாட்டுகளை, அரசு தடை செய்ய வேண்டும் என, பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே, 'கொரோனா' வைரசால், நொந்து நுாலாகிப் போயுள்ள அரசுக்கு, இவற்றையும் கவனிக்க முடியுமா? வீட்டில், இதை கூட கவனிக்காமல், பெற்றோர் என்ன செய்கின்றனர்?ஆட்சியாளர்கள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பிரச்னையை தீர்ப்பதென்பது, நடைமுறையில் இயலாது. பொதுவான பிரச்னைகளைத் தான், இயன்றவரைத் தீர்க்க முடியும்.உங்களது அஜாக்கிரதையால், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பதில் இருந்து,விபரீத விளையாட்டில் இருந்து, சிறுவர்களை மீட்பது வரை, அரசே அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால், பெற்றோரே... உங்களது கடமை தான் என்ன?பிள்ளைகள் செயல்களை கண்காணித்து, தவறான வழியில் சென்றால், அவர்களைத் திருத்த வேண்டிய கடமை, பெற்றோருக்குத் தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, அந்த பொறுப்பு, ஆசிரியர்களுக்கும் இருந்தது. நாம் தான், பல சட்டங்களை உருவாக்கி, அவர்களின் கைகளை கட்டிவிட்டோம்.நம் தாத்தா, பாட்டி காலத்தில், குறைவான வருமானத்தில், நான்கு, ஐந்து குழந்தைகளை பெற்று, கட்டுப்பாடாக வளர்ந்தனர்.இன்று, லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் உள்ள, பல குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே உள்ளது.

அதனால், அந்த பிள்ளை எதை கேட்டாலும், வாங்கிக் கொடுக்கின்றனர். அதனால், ஏதாவது தீமை வருமா என்றெல்லாம், பார்ப்பதில்லை.மேலும், பணத்தின் பின்னால் ஓடுவதால், பிள்ளைகளைக் கண்காணிக்க, அவர்களுக்கு நேரமும் இல்லை. அதனால் தான், இந்த, 'பப்ஜி, ப்ளூ வேல்' போன்ற விபரீத விளையாட்டுகளில், குழந்தை சிக்கிக் கொள்கின்றனர்.நன்மையும், தீமையும், நம்மைச் சுற்றி, பரவிக் கிடக்கின்றன. நம் பிள்ளைகளுக்கு, 'எது நல்லது' என்பதை, பெற்றோர் தான் எடுத்துரைக்க வேண்டும்.மூக்கறுப்பட்டபிரியங்கா!

எஸ்.ராம சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தான், அரசியலில் கத்துக்குட்டி என்பதை, பல்வேறு சந்தர்ப்பங்களில், காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்கா நிரூபித்து வருகிறார்.ஊரடங்கால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர் அனுப்பும் விவகாரத்தில், உத்திரபிரதேச அரசு, அரசியல் செய்வதாக, காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்கா கூறியுள்ளார்.அம்மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, நான்கு கும்பமேளாக்கள் ஆகி விட்டன என்பது, வேறு விஷயம்.உத்திர பிரதேசத்தில் இருந்து, 837 ரயில்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவரவர் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால், 100க்கும் மேற்பட்ட பஸ்களிலும், அவர்கள் செல்கின்றனர்.இந்நிலையில் பிரியங்கா, 'உ.பி.,யில் சிக்கித் தவிக்கும், வெளி மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல, 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான முழுச் செலவையும், காங்கிரஸ் ஏற்கும். இதற்கு, அம்மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என, கடிதம் அனுப்பி இருந்தார்.காங்கிரசின் யோக்கியதை, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குத் தெரியாதா என்ன!'ஆஹா! அனுமதிக்கிறோம். மிக்க மகிழ்ச்சி. அதற்கு முன், அந்த, 1,000 பஸ்களின் விபரங்களை, 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என, கூறினார்.'உ.பி., அரசு கேட்டபடி, ஏதாவது அனுப்பி வைப்போம். அதை, யார் பரிசோதித்துப் பார்க்கப் போகின்றனர்' என்ற இறுமாப்பில், 'பஸ்களின் விபரங்கள் இதோ...' என, காங்கிரஸ் சார்பில், ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது.அந்த பட்டியலில், பஸ்கள் என்ற தலைப்பின் கீழ், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, மீன் பாடி வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விபரம் தான் இருந்தது. 'பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லணும்' என, ஒரு பழமொழி உண்டு.

இப்போது, பஸ்கள் விவகாரத்தில், பிரியங்காவிற்கு மட்டுமல்ல; காங்கிரசின் மூக்கும் அறுக்கப்பட்டுள்ளது.அரசியலில், தான் ஒரு கத்துக்குட்டி என்பதையும், இப்போதும் பிரியங்கா நிரூபித்துள்ளார். பொருத்தமாகப் பொய்களைக் கூற, தனக்கு அனுபவம் இன்னும் கைகூடவில்லை என்பதையும், பிரியங்கா, உ.பி. மாநில முதல்வருக்கு எழுதி அனுப்பிஉள்ள கடிதமும், முதல்வரின் கடிதத்திற்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதமும், எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, பகடைக் காயாக வைத்து விளையாட முயற்சிப்பது, காங்கிரசா அல்லது பா.ஜ., கட்சியா?அத்தைக்குமீசை முளைக்கும்கதை!

ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'ஸ்டாலின் செய்வாரா' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதிஇருந்தார்.அதாவது, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'தமிழகத்தில், நாங்கள் ஆட்சி அமைத்தால், மது விலக்கை அமல்படுத்துவோம்' என, வாக்குறுதி
அளித்தால், அவர் முதல்வர் ஆகும் வாய்ப்பு அமையும் என, குறிப்பிட்டு இருந்தார்.அது உண்மை தான். ஆனால் அப்படி அறிவிக்க, ஸ்டாலின் ஒன்றும், அப்பாவி அல்ல. அவரின் கட்சிக்காரர்கள், மது தயாரிக்கும் ஆலைகள் நடத்தும் போது, எதிர்க்க முடியுமா?மறுபக்கம், 'டாஸ்மாக்' கடைகள் வழியாக கொட்டும் வருவாயை, கருணாநிதியின் மகன் வேண்டாம் என, சொல்வாரா?'தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும்' என்று, தி.மு.க., அறிவிக்கும் என எதிர்பார்ப்பது, 'அத்தைக்கு மீசை முளைக்கும்' கதை தான்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X