சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கேரளாவும், சுகாதாரமும்!

Updated : மே 26, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம் - கேரள மாநில எல்லையில், கேரளாவின், பாரசாலை என்ற இடத்தில், ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர் மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என, பலரும் வந்து கொண்டே இருந்தனர். கேரள போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு காரில் வந்து இறங்கினார். அவரின் நண்பர்களும் கூடவே வந்தனர்.திருமண வீட்டு வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர், எல்லாரையும் வரவேற்பதைப் போலவே,
கேரளாவும், சுகாதாரமும்!

கன்னியாகுமரி மாவட்டம் - கேரள மாநில எல்லையில், கேரளாவின், பாரசாலை என்ற இடத்தில், ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர் மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என, பலரும் வந்து கொண்டே இருந்தனர். கேரள போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு காரில் வந்து இறங்கினார். அவரின் நண்பர்களும் கூடவே வந்தனர்.

திருமண வீட்டு வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர், எல்லாரையும் வரவேற்பதைப் போலவே, அமைச்சர் மற்றும் அவரின் நண்பர்களை, 'வாருங்க சார்...' என, உள்ளே அழைத்து சென்றார்.அந்த திருமணத்திற்கு சென்றிருந்த நம் ஊர் நண்பருக்கு, அது, ஆச்சரியமாக இருந்தது. 'நம்ம ஊரில் ஒரு சாதாரண, எம்.எல்.ஏ., வந்தாலே, திருமண வீட்டார் எவ்வளவு அமர்க்களமாக வரவேற்பர்; எத்தனை பேனர்கள் தொங்க விட்டிருப்பர். வாண வேடிக்கையுடன், எத்தனை வாத்தியங்கள் முழங்கி இருக்கும்...' என்று எண்ணினார்.

கற்பனையில் அவர் மிதந்து கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு வாகனம் வந்து நின்றது. அது, மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனம். 'டபேதார்' கதவைத் திறக்க, மாவட்ட ஆட்சித் தலைவர், வாகனத்தை விட்டு இறங்கினார்.அதற்குள், வெளியே வரவேற்க இருந்தவரில் ஒருவர், மண்டபத்தின் உள்ளே போய், மாவட்ட ஆட்சித் தலைவரின் வருகையை சொல்ல, உள்ளே இருந்த ஒரு கூட்டமே வெளியே வந்து, மாவட்ட ஆட்சித் தலைவரை மிகுந்த மரியாதையுடன் அழைத்துச் சென்றது.நண்பருக்கு மிகுந்த ஆச்சரியம்... 'இந்த ஊரில் அமைச்சருக்கு அப்படியொன்றும், இவர்கள் மரியாதை செலுத்தவில்லை. ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இவ்வளவு பெரிய மரியாதையா...' என்று! பொறுமை இழந்த நண்பர், அந்த திருமண வீட்டாரிடமே கேட்டு விட்டார்.
'முதலில் அமைச்சர் வந்தார். அவரை, எல்லாரையும் போலவே வரவேற்று உள்ளே அனுப்பினீங்க. இவர், ஒரு மாவட்ட கலெக்டர் தானே... இவருக்கு மட்டும் ஏன் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கறீங்க?' என்றார்.


200 சதவீதம்உடனே அவர், 'இந்த ஆட்சி இருக்கிற வரைக்கும் தான் அவர் அமைச்சர். ஆனால், அவர், ஐ.ஏ.எஸ்., படிச்சவர். என்றைக்கும் அவர் நிரந்தரமாக, ஆட்சித் தலைவர் தான்' என்றார்.அப்போது தான், அந்த நண்பருக்கு, கேரள மக்கள், படித்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை விளங்கியது. அது போல் தான் அங்கே அரசியல்வாதிகளும், படித்தவர்களுக்கு மரியாதை கொடுப்பர்.
ஆனாலும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், இடையேயான பனிப்போரைப் பொறுத்தவரை, கேரளாவும், மற்ற மாநிலங்களுக்கு விதி விலக்கல்ல.

அப்படியொன்றும், அங்கேயும், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட இயலாது.எதிர்க்கட்சியிலிருந்து சாதாரண குடிமகன் வரை, கழுகு பார்வையுடன் எல்லாவற்றையும் கண்காணித்து கொண்டே இருப்பர். ஆளும் வர்க்கம் தான், மிகுந்த எச்சரிக்கையுடன்
முடிவெடுக்கும்.மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கேரளாவில் கடையடைப்பு, 'பந்த்' போன்ற நாட்களாகவே இருக்கும். சட்டசபை வளாகத்திற்கு முன் எப்போதுமே, போராட்டக்காரர்களின் பந்தல்களை நிரந்தரமாக காணலாம்.அதில் தனி மனிதர்கள் சிலர், சின்ன கூரைப் பந்தலில், பல ஆண்டுகளாக தொடர்ந்து, போராட்டம் செய்த வரலாறும் உண்டு. கேரளாவை நம்பி இன்னொரு மாநிலத்திலிருந்து,
அங்கே திட்டமிட்டபடி பயணம் செய்து திரும்ப இயலாது.காரணம், ஏதாவது ஒரு கட்சி நாம் போகும் அன்று, திடீரென பந்த் நடத்தும். பேருந்துகள் ஓடாது; ஆட்டோக்கள் இயங்காது. உங்களின் சொந்த இரு சக்கர வாகனத்தில் சென்றால் கூட கல்லெறிவர்.இதிலெல்லாம், கேரள யதார்த்தமாய் இருந்தாலும், கொரோனா, இயற்கை சீற்றம் போன்ற, அசாதாரணமான தருணங்களில் பொதுமக்களோடு அரசியல் கட்சிகள் எல்லாம், அரசுடன் ஒத்துழைக்கும். அரசு இடும் உத்தரவை மக்கள், 200 சதவீதம் நடைமுறைப் படுத்துவர்.
இந்தச் சூழல் தான், கொரோனா போன்ற காலக்கட்டங்களிலும் ஆளும் கட்சியையும், எதிர்கட்சியையும், பொது மக்களையும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.கொரோனா போன்ற சூழல்களில், தனிமனித இடைவெளி, பொது இடத்தில் துப்புதல், முக கவசமின்றி உலாவுதல், ஊரடங்கு மீறல் போன்ற விஷயங்களில், தமிழக சூழலில், மக்களில் சிலர், காவல் துறையினருக்கு கூட பயமில்லாமல் பயணிப்பர்.


சமூக பயம்ஆனால், கேரளாவில் இந்தத் தவறை ஒரு தனி மனிதன் செய்தால், அவனருகில் இருக்கும் இன்னொரு மனிதனே அதை கண்டித்து விடுவான்.இத்தோடு, காவல் துறையினரும் மிகவும் கண்டிப்புடன் அதை செயல்படுத்துவர். அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு, தான் வாழும் சமூகத்தின் மீது பயமுண்டு. அதனால் தான், அங்கே பொது கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில், இயற்கையாகவே கேரளாவின் ஊரமைப்பு சாதகமாகவே இருக்கிறது. தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற நகரங்களில் அபார்ட்மென்ட் குடியிருப்புகள் வந்தாலும், பெரும்பாலான வீடுகள் தனி வீடுகள் தான்.வீட்டைச் சுற்றி பெரிய காலி இடம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிணறு இருக்கும். ஒரு குறுகிய சந்து போல் இருக்கும். அதற்குள், நான்கு சக்கர வாகனங்கள் போகாது. அதற்குள் போனால், உள்ளே பெரிய வெட்ட வெளியில், சுற்றுச்சுவருடன் மரங்களுக்கிடையே தனி வீடு இருக்கும்.நெருக்கடியான நேரங்களில் அவர்களால், வீட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர், கிழங்கு, ஏரி மீன், வாழை, தென்னை, பலா போன்றவற்றை வைத்து ஆரோக்கியமாக வாழவும் இயலும்.

எழுத்தறிவில், 100 சதவீதம் எட்டியவர்கள் ஆதலால், படித்தவர்களிலிருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை, அங்கே எல்லாருக்கும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு, கொரோனாவிற்கு முன்பே உண்டு.எல்லாருமே, உணவு உண்பதற்கு முன், கையை சுத்தமாக கழுவி விட்டு, சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். பெரும்பாலானோர், தினமும் இரண்டு வேளை, தலைக்கு குளிப்பவர்கள். தினமும் தலைக்கும், உடலுக்கும், தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.இந்த பழக்க வழக்கங்களை, கேரளாவின் எல்லைப்புற தமிழக மாவட்டங்களிலும் காண இயலும்.இன்னொன்று, கொரோனா நோய், கேரளாவை எட்டிய உடனேயே, எல்லா ஊடகங்களும், அதை ஒழிப்பதற்கான போரில், கங்கணம் கட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகளை, வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து, மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தன.கேரளாவின் சுகாதாரத் துறையின் தன்னலமற்ற சேவை, மக்களிடையே மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை யும், நம்பிக்கையையும் அளித்தது. மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும், போர் படை வீரர்களின் நேர்த்தியுடன் செயல்பட்டனர்.

அங்கே ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு கடையின் முன்பும், சோப்பும், தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளின் முன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய அடையாளங்களாக, உரிய துாரங்களில் மனிதர்கள் நிற்பதற்கு, வட்டங்கள் வரையப்பட்டிருக்கும்.கேரளாவின் பெரும்பாலான மக்கள், அயல் நாடுகளில் வேலை பார்ப்பவர்கள். வீட்டிற்கு இருவராவது, அயல் நாடுகளில் வேலை செய்பவர்களாக இருப்பர். 20 லட்சத்திற்கும் அதிகமான கேரள மக்கள், வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர்.கொரோனா முதன்முதலில், கேரளாவில் தான் எட்டிப் பார்த்தது. துவக்கத்திலேயே வெளிநாட்டிலிருந்து பயணியர், விமானங்களில் வந்து இறங்கிய உடனேயே, மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், அவர்களை உரிய மருத்துவ பரிசோதனையுடன் தனிமைப்படுத்தினர்.

விமான நிலைய பரிசோதனையிலிருந்து ஏமாற்றி, தப்பித்த கதைகள் எல்லாம் அங்கே ஈடேறவில்லை.ஊரடங்கு நடைமுறைகளுக்கு முன்பாகவே, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தினர். கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோரை குணப்படுத்தி, கொரோனா நோய் இல்லையென, இரு முறை ஊர்ஜிதமான பிறகும், குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப் படுத்தும் நடைமுறை இருந்தது.ெவளிநாடுகளில் இருந்து வந்தவர்களை மட்டுமின்றி, அவர்களின் உறவினர்களையும், தொடர்பில் இருந்தவர்களையும், இதே முறையில் தனிமைப்படுத்தினர்.இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், கேரளாவில் சிறியது, பெரியது என்றில்லாது, எந்த உணவு விடுதிக்கு சென்றாலும், சாப்பிட இலையை போடுவதற்கு முன், அவர்கள் ஒரு கோப்பை நிறைய வென்னீர் வைப்பர்.


விவேகமான வழி!அந்த வென்னீரும், ராமச்சம் வேர் இடப்பட்டதாகவோ அல்லது மூலிகை நீராகவோ இருக்கும். அந்த அளவிற்கு, அங்குள்ள மக்களுக்கு, சுகாதார விழிப்புணர்வு முழுமையாக உள்ளது.
கேரளாவின் தட்ப வெப்பநிலை காரணமாக, வைரஸ் போன்ற தொற்றுகளுக்கு அடிக்கடி இலக்காகும் மாநிலமாக இருக்கிறது. எனவே, அதை எதிர் கொள்வதில் மற்றவர்களை விட, அவர்களுக்கு முன் அனுபவம் ஜாஸ்தி.மேலும், சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள் அங்கே பரவலாக அறியப்பட்ட நோயானதால், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளால், அவர்கள் அதை எதிர்கொள்கின்றனர்.பெரும்பாலும், இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை, வென்னீர் குடித்தல், நீராவி பிடித்தல், பாலில் மஞ்சள், நல்ல மிளகு சேர்த்து குடித்தல் என, எல்லா நல்ல பழக்க வழக்கங்களும் அங்கு உண்டு.
இவை தான், போர்ப்படை வீரர்களாகி, கேரளாவை, கொரோனாவிலிருந்து காத்தன. கொரோனா என்ற துஷ்டனை, துஷ்டனாக நம்பினர்; துார விலகி நின்றனர். அதனாலேயே கொரோனாவால், அந்த அளவிற்கு அங்கே வேகமாக தாக்குதலை நடத்த இயலவில்லை.இன்னொரு முக்கியமான விஷயம், கேரளாவில் அரசு ஊரடங்கை தளர்த்தினால் கூட, பெரும்பாலான மக்கள், அவர்களே முன்னெச்சரிக்கையாக, இரண்டு நாட்களுக்கு வெளியே வர மாட்டார்கள். ஆனால், சென்னை போன்ற நகரங்களில், அரசு எத்தனை முறை எச்சரித்தாலும், ஏராளமானோர் சுற்றித் திரிகின்றனர்.

அவர்களிடம் இங்கிருப்பது, சமூகத் தொற்று குறித்த சமூக பயமல்ல. நம்மைத் தொற்றாது என்ற மூடத்தனமான தைரியம்.எனவே, உலகின் எந்த பகுதியில் நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அதை கடைப்பிடித்து, கொரோனாவை வெல் வது தான் விவேகமான வழி! குமரி எஸ்.நீலகண்டன்சமூக ஆர்வலர் இ -மெயில்: punarthan@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மே-202013:02:57 IST Report Abuse
மோகன் மலையாளிகள் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள். ஆனால் நாம் அவர்களைப்போல் வாழ முயற்சி செய்யாமல் அவர்களை சகட்டு மேனிக்கு கேவலமா பேசுவோம். துப்பு கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-202019:26:49 IST Report Abuse
r.sundaram சுகாதாரம் எல்லாம் தனது வீட்டில், நாட்டில் மட்டும் தான். அடுத்தவன் எக்கேடுகெட்டாலும் அவர்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. இல்லாவிட்டால் மருத்துவமனை கழிவு, கறிக்கடை கழிவு போன்றவற்றை பக்கத்து மாநிலத்தில் கொட்டுவார்களா? மெத்தப்படித்த அறிவாளிகள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
25-மே-202011:12:50 IST Report Abuse
konanki கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் + மற்ற எம் எல் ஏ க்கள் அவர்களின் அல்லக்கைகள் சமீபத்தில் ஒரு அரசாங்க அதிகாரியின் அலுவலக அறைக்கு சென்றனர். அவர் எழுந்து நிற்க வில்லை என்ற காரணத்திற்காக அவரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அறையில் உள்ள அரசாங்க சாமான்களை உடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காணொலி வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X