சென்னை : தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 246 ஆக உயர்ந்துள்ளது. அதில், 11 ஆயிரத்து, 313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 1,000த்தை நெருங்கி விட்டது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா பாதிப்புடன், 8,776 பேர்; அறிகுறியுடன், 6,269 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 334 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 141 பேர். சென்னையில், 618 பேர்;
செங்கல்பட்டு மாவட்டத்தில், 61 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதுவரை, 4.67 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 20 ஆயிரத்து, 246 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில், 1,203 பேர், 12 வயதுக்கு உட்பட்டவர்கள்; 1,806 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சென்னையில், 13 ஆயிரத்து, 362 பேர் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னைக்கு அடுத்து முதல் முறையாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும், 765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை, 11 ஆயிரத்து, 313 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து பலிசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, சென்னையை சேர்ந்த, 70 வயது மூதாட்டி; 66 வயது மூதாட்டி; 85 வயது நபர், நேற்று முன்தினம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, செங்கல்பட்டை சேர்ந்த, 77 வயது முதியவரும், சென்னையை சேர்ந்த 32 வயது நபரும், நேற்று உயிரிழந்தனர்.
சென்னை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, திருவள்ளூரை சேர்ந்த, 62 வயது மூதாட்டி; சென்னையை சேர்ந்த, 63 வயது முதியவர்; 58 வயது பெண் ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த, 86 வயது முதியவர், நேற்று உயிரிழந்தார். இதுவரை, 154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.