புலம் பெயர்ந்த தொழிலாளர் குறித்து மோடி வேதனை! | Dinamalar

புலம் பெயர்ந்த தொழிலாளர் குறித்து மோடி வேதனை!

Updated : ஜூன் 02, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (38)
Share
புலம் பெயர்ந்த தொழிலாளர் குறித்து மோடி வேதனை!

புதுடில்லி : 'ஊரடங்கு காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.நம்முடைய கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் அல்லது மாநிலம் சுயசார்பு பெற்றிருந்தால், இந்தப் பிரச்னையை அனுபவித்திருக்க வேண்டியதில்லை' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' என்ற பெயரில், வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

ஊரடங்கு காலத்தில், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். ஆனால், வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களுக்கு உதவுவதற்கு, அனைத்து தரப்பினரும் முன் வந்தனர்.
ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களை இயக்கியவர்களும், வைரசுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களே.

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது, உலகுக்கு புதியது; இதுவரை சந்தித்திராத சவால். அதே நேரத்தில், இந்த வைரஸ் நமக்கு பல நல்ல படிப்பினையை தந்துள்ளது. நம் முந்தைய தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது; எதிர்காலத்துக்கான திட்டமிடலையும் சுட்டிக் காட்டியுள்ளது.நம் கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் அல்லது மாநிலம் சுயசார்பு பெற்றிருந்தால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் இவ்வளவு பிரச்னையை சந்திக்க வேண்டி இருக்காது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு பிராந்தியத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அந்தப் பிராந்தியம், நாட்டின் வளர்ச்சிக்கான இன்ஜினாக மாறும் திறன் கொண்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில், அதிக அளவில் வளர்ச்சிப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை, ஊரடங்கு நமக்கு காட்டியுள்ளது.இந்த நேரத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய தீர்வு தேவை. இனி, அதை நோக்கி நாம் நகருவோம்.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்க, அரசு பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்தது. அவை அனைத்தும், நம் கிராமங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குதல், சுய வேலைவாய்ப்பை உருவாக்குதல், சிறு தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த அனைத்து முடிவுகளும், நம் நாட்டை சுயசார்பு உடையதாக மாற்றும் இலக்குடன் செய்யப்பட்டுள்ளது.தற்போது, இது மக்களின் இயக்கமாக மாறியுள்ளது. அனைத்து தரப்பினரும், உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


எச்சரிக்கை தேவைதற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும், இனிதான் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இத்தனை வாரங்களாக நாம் பட்ட கஷ்டங்கள் வீணாகிவிடக் கூடாது.
சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, தூய்மையுடன் இருக்க வேண்டும். தற்போது நாடு திறந்து விடப்பட்டுள்ளதால், வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் மக்கள், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


யோகா சிறந்ததுஇந்த ஊரடங்கு காலத்தின்போது, ஹாலிவுட் துவங்கி, ஹரித்துவார் வரை, பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.யோகா, நம் சமூகத்துக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும், ஒற்றுமை ஏற்படுத்துவதற்கும் சிறந்த வழி. வரும், 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் வேளையில், அனைவரும், அதன் மதிப்பை உணர வேண்டும்.

வெட்டுக்கிளி

ஒரு சிறிய பூச்சி, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை, வெட்டுக்கிளிகள் தாக்குதல் நமக்கு உணர்த்திஉள்ளது.அந்த வெட்டுக்கிளிகள் போல், நாம் ஒற்றுமையாக, ஒன்றாக இணைந்து, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்போம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.


'அம்பான்' புயல்கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி நாடு முழுதும் நடந்து வரும் நிலையில், 'அம்பான்' புயல் தாக்கியுள்ளது.இந்த கடினமான நேரத்தில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மக்கள், மன தைரியத்துடன் நிலைமையை திறம்பட சமாளித்தனர். அந்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, இந்த நாடு ஒற்றுமையுடன் உள்ளது.


ஆயுஷ்மான் பாரத்ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் என்ற இலவச காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதுவரை, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள், இதனால் பயன் பெற்றுள்ளனர்.இந்த நேரத்தில், ஏழை, எளிய மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதற்காக, தங்களுடைய வரியை முறையாக செலுத்தும் அனைத்து மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


latest tamil news
மோகன் நெகிழ்ச்சிமகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயில், கொரோனா நிவாரண உதவி வழங்கிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகனை, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், நேற்று பிரதமர் மோடி பாராட்டினார்.மோகன் கூறியதாவது: மதுரையில், கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட முதல் பகுதி, நான் வசிக்கும் தாசில்தார் நகர். என் சலுான் இருந்த மேலமடையும் பாதிக்கப்பட்டது.
இங்கு வசிக்கும் ஏழைகள் உதவி கேட்டனர். எட்டாவது படிக்கும் மகள் நேத்ரா, 'மக்களுக்கு உதவ வேண்டும்; இல்லை என்றால் சாப்பிட மாட்டேன்.

ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள, 5 லட்சம் ரூபாயில், நிவாரணம் வழங்குங்கள்' என்றாள்.மகள் விருப்பப்படி செல்லுார், மேலமடை, தாசில்தார் நகர், ஒத்தக்கடை, மதிச்சியம், கருப்பாயூரணி பகுதிகளில், 1,500 குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம். சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். நேற்று, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியதை அறிந்து நெகிழ்ச்சியுற்றேன். பா.ஜ., மாநில தலைவர் முருகனும், போன் மூலம் வாழ்த்தினார். சினிமா இயக்குனர் பார்த்திபன், தன் நண்பர்களை அனுப்பிகவுரவித்தார். என் மகள், நேத்ரா கல்வி செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.மோகன் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X