ராஞ்சி : ''தோனி 'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். துாக்கத்தில் கூட புலம்புகிறார்,'' என மனைவி சாக் ஷி தெரிவித்தார்.
இந்திய அணி 'சீனியர்' வீரர் தோனி 38. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் உள்ள தோனி, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.இதனிடையே சென்னை அணியின் 'இன்ஸ்டாகிராம்' இணையதளத்தில், தோனி மனைவி சாக் ஷி உரையாடினார். அப்போது தோனி வீட்டில் என்ன செய்கிறார் என கேட்கப்பட்டது.
இதுகுறித்து சாக் ஷி கூறியது:தோனி நன்றாக சிந்திக்கக் கூடியவர். இந்த மூளை எப்போதும் சும்மா இருக்காது. வீடியோ 'கேம்' விளையாடுகிறார். இது அவரது மனதை திசை திருப்ப உதவுகிறது. இப்போதெல்லாம் தோனியின் 'பப்ஜி' விளையாட்டு, எனது படுக்கையை ஆக்கிரமித்து விட்டது. துாக்கத்தில் கூட 'பப்ஜி' குறித்து தான் பேசுகிறார்.

இவர் 9 'பைக்குகள்' வைத்துள்ளார். இவற்றை கழற்றி விட்டு தேவையான பாகங்களை வாங்கி மீண்டும் முழுமையாக பொருத்துவார். ஒருமுறை ஒரு பாகத்தை மட்டும் மாட்டாமல் விட்டு விட்டு 'பைக்கை' பொருத்தி விட்டார். மறுநாள் மீண்டும் பாகங்களை கழற்றி, மறந்து போன பொருளை பொருத்தினார்.
தோனி எந்த விஷயத்திலும் அமைதியாக இருப்பார். நான் மட்டுமே அவரை 'அப்செட்' செய்ய முடியும். அவரது கோபத்தை துாண்ட முடியும். இதனால் அவர் என் மீது கோபத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் நான் மட்டுமே அவருக்கு நெருக்கமானவராக உள்ளேன். இவ்வாறு சாக் ஷி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE