அமெரிக்கா வன்முறை: குழியில் பதுங்கினார் டொனால்டு டிரம்ப்| Dinamalar

அமெரிக்கா வன்முறை: குழியில் பதுங்கினார் டொனால்டு டிரம்ப்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (32)
Share
அமெரிக்கா வன்முறை: குழியில் பதுங்கினார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்க போலீஸ்காரரால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு, 49, கொல்லப்பட்டதை கண்டித்து, ஆறாவது நாளாக, நேற்று முன்தினமும், போராட்டம் தீவிரம்அடைந்தது.

வாஷிங்டனில், அதிபர் டொனால்டு டிரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகேயும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாளிகையில் உள்ள பதுங்கு குழியில், அதிபர் டொனால்டு டிரம்ப் சிறிது நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மின்ன சோட்டா மாகாணத்தின் மின்னபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை, அமெரிக்க போலீஸ் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார்.
அப்போது, பிளாய்டை தரையில் வீழ்த்தி, அவருடைய கழுத்தின் மீது, தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுவிட முடியாமல், பிளாய்டு உயிரிழந்தார். இது தொடர்பான, 'வீடியோ' வெளியானதை அடுத்து, அமெரிக்கா முழுதும், கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து, ஆறாவது நாளாக, நேற்று முன்தினமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. நாட்டில் உள்ள, 50 மாகாணங்களில், 140 நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
அதையடுத்து, மிகவும் பாதிக்கப்பட்ட, 26 மாகாணங்களில், 'நேஷனல் கார்டு' எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, ஹூஸ்டன், பிலடெல்பியா என, 40 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.52 ஆண்டுக்குப் பிறகுகடந்த, 1968ல், கறுப்பினத் தலைவரான, மார்ட்டின் லுாதர் கிங் கொல்லப்பட்டபோது, அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன.
அதன்பிறகு, தற்போதுதான், கறுப்பின மக்கள், மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடந்துள்ள வன்முறை சம்பவங்களில், ஐந்து பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக, 2,564 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்தவர்கள்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில், மக்கள் உணர்ச்சி வேகத்திலும், கோபத்திலும் கொதித்துள்ளனர். அதனால், பதற்றம் நிலவி வருகிறது. பாஸ்டனில், காவல் நிலையம் அருகே, ஒரு போலீஸ் வாகனத்தை தலைகீழாக கவிழ்த்து போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
பிலடெல்பியாவில், கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் கவச வாகனங்களில் ரோந்து வந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது, மிளகுப் பொடி துாவியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்டத்தை கலைக்க முயன்றனர்

.
நியூயார்க் நகரில் பல்வேறு இடங்களில், போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இதனால், பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. யூனியன் ஸ்கொயர் பகுதியில், குப்பைகள் உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி, அதற்கு போராட்டக்கார்கள் தீ வைத்தனர்.


பதுங்கினார் டிரம்ப்

வாஷிங்டனில், அதிபரின் வெள்ளை மாளிகை அருகேயும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.சாலையில் நிறுத்தியிருந்த கார்களை கவிழ்த்து, அவற்றுக்கு தீ வைத்தனர். வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் வன்முறை நடந்ததால், மாளிகையில் உள்ள பதுங்கு குழியில், அதிபர், டொனால்டு டிரம்ப் சிறிது நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடைய மனைவி, மெலினா டிரம்ப் மற்றும் மகன் பாரோனும், பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட, டிரம்ப், 'பொய்ச் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களை துாண்டி விடுகின்றன' என, குற்றஞ்சாட்டினார்.அமைப்புக்கு தடைஇதற்கிடையே, 'ஆன்டிபா' எனப்படும் தலைமை இல்லாத,பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடைய குழுவை, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப் போவதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.
'இடதுசாரி கொள்கை உடைய, அரசுக்கு எதிராக செயல்படும் இந்தக் குழுவே, தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காக போராட்டங்களை துாண்டி விடுகிறது' என, டிரம்ப் கூறியுள்ளார்.பிடன் சந்திப்புஇந்தாண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தப் போராட்டம், டிரம்புக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, வெள்ளை மாளிகை அருகே போராட்டங்கள் நடத்து வருவதால், பொது நிகழ்ச்சிகளில், டிரம்ப் பங்கேற்க முடியவில்லை.
அதே நேரத்தில், அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர், டேலாவாரேயில் போராட்டம் நடந்தப் பகுதிக்குச் சென்று, போராட்டக்காரர்களுடன் பேசினார். 'பிளாய்டு கொல்லப்பட்டது, மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த வலி, நம்மை அழித்து விடுவதாக இருந்து விடக் கூடாது.
'போராட்டங்களில் ஈடுபடலாம்; ஆனால், வன்முறையில் ஈடுபடக் கூடாது' என, அவர் கூறியுள்ளார்.ஹூஸ்டனில் இறுதிச் சடங்கு
மின்னபொலிசில், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால், பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்டின் இறுதிச் சடங்கு, அவருடைய சொந்த ஊரான ஹூஸ்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.பிளாய்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில், ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். கொரோனாவால், லண்டனில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதையும் மீறி, இந்தப் பேரணி நடைபெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X