இணையவழிக் கல்விமுறைக்கான நெடும்பயணம்

Added : ஜூன் 01, 2020
Share
Advertisement
இணையவழிக் கல்விமுறைக்கான நெடும்பயணம்

கடந்த காலங்களில் மனித சமூகம் எதிர்கொண்ட நோய்த்தொற்றுகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கோவிட்-19 ஆல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனித சமூகம் இதுநாள்வரை எதிர்கொள்ளாத அளவிலான மனரீதியிலான பாதிப்பையும் பொருளாதார பின்னடைவையும் சந்தித்து வருகிறது.


வாழ்வியல் பாடம்ஒவ்வொரு இயற்கை பேரிடரும் பேரிழப்பும் அரியதொரு வாழ்வியல் பாடத்தை மனித சமூகத்திற்கு உணர்த்தி வந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் பேரிழப்புக்குக் காரணமான கோவிட்-19 ம் தடம்புரண்டு செல்லும் மனித சமூகத்தின் வாழ்வியல் முறையில் சிலவற்றைச் சீர்படுத்த வேண்டும் என்ற செய்தியை உணர்த்துகிறது.சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட மனிதனின் மூளைக்கு இணையான 'செயற்கை நுண்ணறிவு' திறனைக் கணினி உதவி கொண்டு கண்டறியும் மனித சமூகம் உடனடியாகப் பின்பற்ற வேண்டியவை என சில செயல்பாடுகளைக் இந்நோய் உணர்த்துகிறது.அவை:
• பொது சுகாதாரத்தைப் பேணுதல்
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவு வகைகளை உட்கொள்ளுதல்• சுவாசிக்கும் காற்றில் மாசு கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல்
• தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல்
• சமூக விலகலைக் கடைபிடித்து பழகுதல்
• மனித நேயத்துடன் பிறருக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுதல்


தடங்கல்இந்த நோய்த்தொற்று உலகப் பொருளாதாரத்தைப் பெருமளவில் சீர்குலைத்து வருவது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி கற்றலுக்கும் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக விலகலைப் பின்பற்றி மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் தற்பொழுது பள்ளி, கல்லுாரிகளிலும் இல்லை. அதை உடனடியாக உருவாக்கவும் முடியாது.இதனைச் சமாளிக்க முன் வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றுதான் இணையவழிக் கல்வி.ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் சமூக விலகலைப் பின்பற்றி மெல்ல மெல்ல இயங்கத் தொடங்கிவிட்டன. பள்ளிகள், கல்லுாரிகள் இயங்குவது குறித்த தெளிவான திட்டம் வெளியிடப்படாத நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.


சிக்கலுக்கான தீர்வுஇந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது; அடுத்த கல்வி ஆண்டில் மேற்படிப்பில் சேர்வது; இறுதி ஆண்டு கல்லுாரி மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக நடத்தப்படும் 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்த திட்டமிடாமல் இருப்பது போன்றவைகளுக்குத் தெளிவான விளக்கமும் செயல் திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையைப் பயன்படுத்தி சில தனியார் கல்லுாரிகளும் பள்ளிகளும் இணையவழிக் கல்விமுறையை அறிமுகப்படுத்தி பாடங்களை நடத்தத் தொடங்கிவிட்டன. சில நகரங்களில் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.நகரங்களில் வசிக்கின்ற பெற்றோர்களில் ஒருசாரார் இணையவழிக் கல்விமுறைதான் கொரோனா ஏற்படுத்தியுள்ள நடைமுறை சிக்கலுக்கான தீர்வு எனக் கருதுகின்றனர். அவசர அவசரமாகக் குழந்தைகளைக் காலை நேரங்களில் பள்ளிக்கு அனுப்பும் சிரமம் இருக்காது; பள்ளிக்குச் செல்லும் பயண நேரம் மீதமாகும்; பிற மாணவர்களால் ஏற்படும் இடையூறு இல்லாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்றுக் கொள்ளும் வசதிகள் இணையவழிக் கல்விமுறையில் உண்டு என அவர்கள் கருதுகின்றனர்.


சிரமங்கள்இணையவழிக்கல்வி கருத்து கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்குமா? அதை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் என்ன? இணையவழிக் கல்விமுறைக்குத் தேவையானவை 'டச் போன்' என்றழைக்கப்படும் தொடுதிரை அலைபேசி மற்றும் இணையதளம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட இணையதள சேவை மிகக் குறுகிய காலத்தில் சமூகத்தின் அனைத்து பயன்பாட்டிலும் இடம் பிடித்துவிட்டது. மேலைநாடுகளில் கல்வி கற்பிக்கும் முறைக்கும் இணையதளம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நம்நாட்டில் இணையவழிக் கல்விமுறை முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வரவில்லை.


பெற்றோர்களின் பயம்குழந்தைகளின் வாழ்க்கையை அலைபேசி தடம்புரளச் செய்துவிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடம் பரவலாக இன்றும் இருந்து வருகிறது. பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டுவருவதற்கு அனுமதி வழங்குவதில்லை. இம்மாதிரியான சூழலில் இணையவழிக் கல்விமுறையை எப்படி நம்நாட்டு பள்ளிகளில் நடைமுறை படுத்த முடியும்? அதற்கு தடைக்கல்லாக இருப்பதைக் கண்டறிந்து அகற்றாமல் இணையவழிக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன் அளிக்காது.138 கோடி மக்கள்தொகை கொண்ட நம்நாட்டில் பயன்பாட்டில் இருந்துவரும் அலைபேசிகளின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டிவிட்டது. அவைகளில் டச் போன்கள் 45 கோடி. ஆறு வயதுக்குட்ட குழந்தைகளைத் தவிர்த்து பார்த்தால் நம்நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரிடமும் அலைபேசி உள்ளது என்றும் இரண்டு நபர்களில் ஒருவர் டச் போன் வைத்துள்ளார் என்றும் இந்த புள்ளி விபரம் உணர்த்துகிறது. இந்த சூழலில் இணையவழிக் கல்விமுறைக்கு தடையாக இருப்பது எது.


எதிர்மறை விளைவுகள்எளிய முறையில் தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசி இன்றைய இளைஞர்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. அம்மாதிரியான செயல்களுக்கு உதாரணமாக சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நிகழ்ந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். பள்ளியில் தன்னுடன் படித்துவரும் ஒரு மாணவியின் புகைப்படங்களை 'வாட்ஸ் ஆப்' மூலம் அலைபேசியில் பதிவு இறக்கம் செய்த மாணவன், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுவேன் என்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அச்செயலுக்காக அந்த மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.


கெடுக்கும் தோழன்அலைபேசி பயன்பாட்டுக்கான வரைமுறைகளை வளரும் இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ளாதவரை அலைபேசி பயன்பாடு என்பது அவர்களின் வாழ்க்கையை உடனிருந்து கெடுக்கும் தோழனாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இணையதளம் என்பது அனைத்து வகையான தகவல்களின் குவியல் ஆகும். இலக்கியம், வரலாறு, அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், பொறியியல்,விளையாட்டு,பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்களின் சேமிப்புக் கிடங்காக இணையதளம் விளங்கிறது.

அதேசமயம் வளரும் இளம்பருவத்தினரின் கவனத்தைக் கவர்ந்து இழுக்கும் ஆபாசம் மிகுந்த கருத்துக்களும் வீடியோக்களும் இணையதளத்தில் குவிந்துள்ளன. அன்னப் பறவை போன்று தண்ணீரைத் தவிர்த்து பாலை மட்டும் அருந்தும் குணம் இன்றைய வளரும் இளம்தலைமுறையினர் பலரிடம் இருப்பதில்லை. அம்மாதிரியான குணத்தை வளர்க்கும் விதத்தில் இன்றைய சமூகச் சூழலும், குடும்ப அமைப்பும் இல்லை என்றே கூறலாம்.இணையவழிக் கல்விமுறையை நடைமுறை படுத்துவது என்பது எல்லா மாணவர்களுக்கும் அலைபேசி, மடிக்கணினி மற்றும் இணையதள இணைப்பு கிடைக்கச் செய்வது அல்ல. அலைபேசி, இணையதளத்தின் சரியான பயன்பாடு குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதைப் பொறுத்துதான் இணையவழிக் கல்விமுறையின் வெற்றி நம்நாட்டில் அமையும்.- பெ.கண்ணப்பன்ஓய்வு பெற்ற ஐ.ஜிசென்னை. 94890 00111


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X