எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

68 நாட்களுக்கு பின் ஓடிய அரசு பஸ்கள்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
68 நாட்களுக்கு பின் ஓடிய அரசு பஸ்கள்

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால், 68 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த, அரசு பஸ்கள், நேற்று முதல் ஓடத் துவங்கின. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கொரோனா ஊரடங்கால், தமிழகத்தில், மார்ச், 24 முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முதல் அரசு பஸ்களின் இயக்கம் துவங்கியது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய, நான்கு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலத்துக்குள் மட்டும், பயணிக்கும் வகையில், பஸ்கள் இயக்கப்பட்டன.

தினமும், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை மட்டுமே, பஸ்கள் இயங்குகின்றன. முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், எல்லை பிரச்னைகளால், பஸ்களை இயக்க முடியவில்லை. இதையடுத்து, நேற்று கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, இன்று முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில், பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் பஸ்கள்சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:ஆறு மண்டலங்களிலும், 2,866 நகர பஸ்கள்; 2,637 புறநகர் பஸ்கள்; 156 மலைப் பகுதி பஸ்கள் என, மொத்தம், 5,609 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 60 சதவீத பயணியர் ஏற்றப்படுகின்றனர்.அதாவது, 55 இருக்கைகள் உள்ள புறநகர் பஸ்களில்,32 பேர்; 40 இருக்கைகள் உள்ள, மாநகர் மற்றும் நகர பஸ்களில், 24 பேர் ஏற்றப்படுகின்றனர். விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகர பஸ்கள் இயக்கப்
படவில்லை.பஸ் நிலையங்கள்,பஸ்கள் அனைத்தும் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. ஓட்டுனர், நடத்துனர்கள், உடல் வெப்ப பரிசோதனை செய்தபின் பணியேற்கின்றனர். அவர்களுக்கு, கையுறை மற்றும் மூன்று பருத்தி முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணியருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முகக்கவசத்துடன் பஸ்களில் ஏற்றப்படுகின்றனர்.பஸ்களில், மாதாந்திர, 'பாஸ்' வாங்க பயணியருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

'கியூஆர்' கோடுடன் கூடிய பணப்பரிவர்த்தனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயன்றவரை பணப்பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தனியார் பஸ்களை இயக்குவது குறித்து, ஒரு வாரத்துக்குப் பின் முடிவெடுக்கப்படும். கூட்டம் இல்லாத பகுதிகளில், பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். தேவை அதிகம் உள்ள இடங்களில், எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு, பஸ்கள் இயக்குவது போல், தேர்வெழுதும் மாணவர்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இது குறித்து, கல்வித்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை செயலர் ஆலோசித்து முடிவெடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆரத்தி வரவேற்புதிருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து, தஞ்சாவூருக்கு சென்ற அரசு பஸ், அரியலுார் மாவட்டம் வழியாக இயக்கப்பட்டது. அரியலுார் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்திற்கு, நேற்று காலை, 8:45 மணிக்கு இந்த பஸ் வந்தது.அப்போது, இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள், பஸ்சுக்கு வேப்பிலை மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். டிரைவர், கண்டக்டருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு, வரவேற்பு அளித்தனர்.


பஸ் கண்ணாடி உடைப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, ஒன்பது பணிமனைகளில் இருந்து, 192 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பயணியரை ஏற்றிய அரசு பஸ், ஆலங்குடி நோக்கி சென்றது.பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண், பஸ் மீது கல் வீசினார். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது; அந்த பெண், ஓடி விட்டார்.புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணையில், அரசு பஸ் மீது கல் வீசியவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனவும், நீண்ட நாட்களாக புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிவதும் தெரிந்தது. 'அவரை, மனநல காப்பகத்தில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்' என, பொதுமக்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X