அதிகாரிகளை வெளியேற்றுவதா? இந்திய தூதருக்கு பாக்., சம்மன்| Pakistan condemns expulsion of diplomats by India | Dinamalar

அதிகாரிகளை வெளியேற்றுவதா? இந்திய தூதருக்கு பாக்., 'சம்மன்'

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (18)
Share

இஸ்லாமாபாத்; உளவு பார்த்த குற்றத்துக்காக பாக்., துாதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை, 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட மத்திய அரசுக்கு, பாக்., கண்டனம் தெரிவித்துள்ளது.latest tamil newsஇந்திய துாதரக அதிகாரியை நேரில் அழைத்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் பணியாற்றிய அபித் உசேன், முகமது தாஹிர் ஆகியோர், இந்திய ராணுவ ரகசியம் தொடர்பான ஆவணங்களை, ஒரு நபரிடம் லஞ்சம் கொடுத்து வாங்கியபோது, டில்லி போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினர். இந்த இரண்டு அதிகாரிகளையும், 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியை நேரில் வரவழைத்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாவது:துாதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்ட இந்திய அரசின் இந்த நடவடிக்கை, சர்வதேச துாதரக விதிமுறைகளை மீறிய செயல். பாகிஸ்தானுக்காக இந்திய பாதுகாப்பு ரகசியங்களை இந்த இரண்டு அதிகாரிகளும் உளவு பார்த்ததாக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இந்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்திய அரசு இதைச் செய்துள்ளது. இவ்வாறு, பாக்., வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


latest tamil newsபாக்., துாதரக அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை லஞ்சம் கொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில், பாக்., துாதரக அதிகாரிகள் இருவர், டில்லி போலீசாரிடம் சிக்கினர். இந்த நடவடிக்கை தொடர்பாக, பாகிஸ்தான் அரசிடம், நம் தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. துாதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களுக்குள்ள விதிமுறைகளை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்கள், துாதரக அதிகாரிகளுக்கு ஏற்றதல்ல. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X