
நீண்ட துாரம் வந்த களைப்பில் பெருமூச்சுவிட்டு நின்றது அந்த ரயில்.
அது வழக்கமாக வரும் பயணிகள் ரயில் அல்ல புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சுமந்துவரும் சிறப்பு ரயிலாகும்.ஆகவே ரயில் பெட்டியை விட்டு இறங்கிய மனிதர்களின் முகத்தில் துயரமும் தோளில் கொஞ்சம் லக்கேஜ்களும் மட்டுமே காணப்பட்டன.
அந்த லக்கேஜ்களை துாக்க முடியாமல் சிரமப்பட்ட முதியோர் ஒருவர் யாராவது உதவிக்கு வருவார்களா? என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்.அப்போது அவரை விட வயதான ஒருவர் வந்து நான் இந்த லக்கேஜ்களை துாக்கி உதவி செய்யட்டுமா என்று கேட்கிறார்.
ஐயா உங்க வயசுக்கு நீங்க ஏன் சிரமப்படணும் என்கிறார் பயணி
நான் ரயில்வே போர்ட்டர்தான் சுமைகளை சுமப்பதுதான் என் வேலை ஆகவே கவலைப்படாதீர்கள் நான் உங்கள் சுமைகளை சுமக்கிறேன் என்கிறார்.

நன்றி ஐயா ஆனால் உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பணம் ஏதும் இல்லை என்கிறார் பயணி.
நீங்கள் கொடுத்தாலும் நான் பணம் வாங்குவதில்லை இந்த கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு என்னால் முடிந்தது எல்லாம் இந்த சுமையை இலவசமாக சுமப்பதுதான் என்றவர் பயணியின் சுமையைத் துாக்கிக் கொண்டு ரயில் நிலைய வாசலை நோக்கி நடக்கிறார்.
யார் இவர்.
பெயர் முஜிபுல் ரஹமான் எண்பது வயதாகிறது கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இதே ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்கிறார் உழைத்துதான் சாப்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
கொரோனா காரணமாக ரயில் போக்குவரத்து நின்று போனபோதுதான் அடடா உழைக்கமுடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார்.புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ஒடுகிறது என்றதும்தான் நிம்மதி வந்தவராக ரயில் நிலையத்திற்கு வந்தார்.
ரயில் நிலையத்தில் சக போர்ட்டர்களை காணோம்,‛ ஏம்பா வரவில்லையா'? என்று கேட்டபோது ‛வருபவர்களே காசு பணம் சோறு இல்லாமல் துயரத்துடன் வருகிறார்கள் நமக்கு சுமைகூலி தருவதற்கு அவர்களிடம் பணம் இருக்காது ஆகவே நாங்கள் வரவில்லை' என்று சொல்லிவிட்டனர்.
இப்போதுதான் நமது சேவை அவர்களுக்கு தேவை ஆகவே நான் அவர்களுக்கு கூலி இல்லாத போர்ட்டராக வேலை செய்கிறேன் என்று சொல்லி கடந்த இரண்டு வாரங்களாக அப்படியே இருந்துவருகிறார்.
இதற்காக ஆறு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தே நடந்தே வருகிறார் பத்து மணி நேரம் பணியாற்றுகிறர், வரக்கூடிய ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு உதவுகிறார், மேலும் பயணிகளுக்கு ரயில் நிலையம் சார்பாக எங்கே இலவச உணவு குடிநீர் தருகிறார்கள் என்பதை சொல்லி வழிகாட்டுகிறார், ஐம்பது கிலோவிற்கு மேற்பட்ட சுமையாக இருந்தால் சலிக்காமல் இரண்டு நடையாக நடந்து இறக்கிவருகிறார்.
என்னால் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காசு பணம் கொடுக்க இயலாது உடலுழைப்பைத்தான் தரமுடியும் அதற்கு ஏற்ப என்னையும் என் மனதையும் திடகாத்திரமாக வைத்துள்ள இறைவனுக்கு நன்றி என்று சொல்லிவிட்டு அடுத்த சுமையைத் தேடி நகர்கிறார்.
-எல்.முருகராஜ்.