ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில் சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (24+ 38)
Share
ஐ.என்.எக்ஸ்., மீடியா, வழக்கு, சிதம்பரம், குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி; 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், சிதம்பரம், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய், அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்கு, சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதன் மூலம், அவரும், அவரது மகன் கார்த்தியும் ஆதாயம் அடைந்ததாகவும், 2017ல், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிதம்பரம் சிறையில் இருந்தபோது, அமலாக்கத்துறையினர், பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், அவரை கைது செய்து விசாரித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில், சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது, அமலாக்கத் துறையினர் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 'நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கத் துவங்கியதும், குற்றப்பத்திரிகை நகல், நேரில் தாக்கல் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X