72 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கிய நிசர்கா புயல்: அலிபாக் பகுதியில் கரையை கடந்து வலுவிழப்பு| Dinamalar

72 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கிய 'நிசர்கா' புயல்: அலிபாக் பகுதியில் கரையை கடந்து வலுவிழப்பு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (4+ 6)
Share

மும்பை: அரபிக்கடலில் உருவான, 'நிசர்கா' புயல், நேற்று மதியம், 12:30 மணியளவில், மஹாராஷ்டிர மாநிலம், அலிபாக் பகுதியில் கரையைக் கடந்தது. மாநில தலைநகர் மும்பையை, 72 ஆண்டுகளுக்கு பின், கடும் புயல் தாக்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மும்பையில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.latest tamil news
சில தினங்களுக்கு முன், மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று, வடக்கு, வடமேற்கு திசையில், 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இதற்கு, 'நிசர்கா' என, பெயரிடப் பட்டது.இந்தப் புயல் நேற்று மதியம், மஹாராஷ்டிரா - குஜராத் இடையே கரையைக் கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, மஹாராஷ்டிர மாநிலத்தில், மும்பை, தானே, ராய்கட், அலிபாக் உட்பட பல பகுதிகளில் நேற்று காலை முதலே, பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் சூரத் உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.மும்பையை புயல் தாக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையின், 16 குழுக்கள், புயலை எதிர்கொள்ளும் வகையில் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.


latest tamil news
இந்நிலையில், இது, சூறாவளி புயலாக மாறி, மும்பையிலிருந்து, 94 கி.மீட்டர் தொலைவில் உள்ள, அலிபாக் பகுதியில், நேற்று பகல், 12:30 மணிக்கு கரையைக் கடக்க துவங்கியது. அப்போது, அந்த இடத்தில் மணிக்கு, 93 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.இதையடுத்து, மும்பை, ராய்காட் மாவட்டங்களில், மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. பகல், 12:30 மணிக்கு வீசத் துவங்கிய புயல், மாலை, 4:00 மணிக்கு கடந்து முடிந்தது.மும்பையில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

புயல் பாதிப்பு பற்றி மும்பை போலீசார் கூறியதாவது:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மும்பை புறநகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் சுவர் இடிந்து, மூன்று பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நின்ற பின் தான், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துவக்க முடியும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின் விபரங்களும் தெரிய வரும்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, முதல்வர்உத்தவ் தாக்கரே, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மழை நின்ற பின், நிவாரண பணிகளை உடன் துவங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டார்.

குஜராத்திலும் பலபகுதிகளில் பலத்த மழை பெய்தது. முனனெச்சரிக்கை நடவடிக்கையாக, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் மற்றும் மழையால், பெரும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என, போலீசார் தெரிவித்தனர்.


மும்பையில் நிறுத்தப்பட்ட விமான சேவை

புயல் மற்றும் மழை காரணமாக, மும்பை விமான நிலையம் நேற்று காலை மூடப்பட்டது. மதியம், 2:30 மணி முதல், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, விமான சேவை மீண்டும் துவங்கியது. இதேபோல், மும்பையிலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.


1948க்கு பின் தாக்கிய புயல்


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் வரை, பருவ மழை பெய்யும். கடந்த ஆண்டு, தொடர்ந்து பெய்த மழையால், மும்பையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், மும்பை, புயல் தாக்குதலுக்குள்ளாவது அபூர்வமாகவே உள்ளது. 'கடந்த, 1948ம் ஆண்டில், மும்பையை புயல் தாக்கியது; அதன் பின், இப்போது தான் புயல் தாக்கியுள்ளது' என, நேற்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X