கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கோவை ரோடுக்குமாற்றுப்பாதை அமைக்க, நிலம் எடுப்பு பணிக்கான பேச்சு நடந்தது.
கிணத்துக்கடவு வாசுகி திருமண மண்டபத்தில், மாற்றுச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு அலுவலரும், டி.ஆர்.ஓ.,வுமான ராமதுரை முருகன் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலைக்கு, மாற்றுச்சாலை அமைப்பதற்கு, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, காணியாலாம்பாளையம், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம் கிராமத்தின் வழியாக அமைகிறது.
அதன்பின், மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம் வழியாக செட்டிபாளையம் வரை வழித்தடம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு, மொத்தம், 12.1 கி.மீ., துாரத்துக்கு, 24.72 ஏக்கர் நிலம் எடுக்கப்படவுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள ரோட்டின் மையப்பகுதியில் இருந்து, இரண்டு பக்கங்களிலும் தலா எட்டு மீட்டர் அகலத்தில் ரோடு விரிவுபடுத்தப்படுகிறது. நிலம் எடுப்பு குறித்து ஆலோசிக்க, நேற்று நடந்த கூட்டத்தில், மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, காணியாலாம்பாளையம், மயிலேறிபாளையம் போன்ற கிராமங்களில், நிலம் எடுக்கப்பட உள்ளவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதில், மாற்றுச்சாலை அமைப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. தென்னை மரங்களுக்கும், போர்வெல்லுக்கும் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிலம் எடுக்கப்படும் இடத்தில், கிணறு இருந்தால் பாதையை மாற்றி அமைக்க வேண்டும். கிணறு பகுதியில் இருந்து ஐந்து அடி வரை, கிணறுக்கு பாதிப்பு இன்றி நிலம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு முழுமையாக வழங்கிய பின், பணிகளை துவங்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர். ஆனால், திட்டத்தின் தேவைக்கு ஏற்ப, 15 அடி வரை நிலம் தேவையுள்ள இடத்தில் கிணறு இருந்தாலும், நிலம் எடுக்கப்படும், என, டி.ஆர்.ஓ., தெரிவித்தார்.
கூட்டத்தில், தாசில்தார் ஸ்ரீதேவி, தலைமையிடத்து துணை தாசில்தார் ரேணுகாதேவி, மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராமராஜ், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE