சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ள, தமிழகத்தை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோரை மீட்கக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, 900க்கும் மேற்பட்டோர், தமிழகம் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு, மீண்டும் டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ''ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படவில்லை. ரயில் நிலையங்களில், அவர்கள் நடமாடுகின்றனர். உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அளிக்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் தங்கவேல் ஆஜராகி, ''புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தேவையான வசதிகள் அளிக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது,'' என்றார். மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், ''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம், ரயில் கட்டணம் பெறப்படவில்லை,'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், போதிய உணவு, குடிநீர், தங்கும் வசதி, மருத்துவ வசதி அளிக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது. அவர்களிடம் வேலை வாங்கி விட்டு, நன்றி மறக்கக் கூடாது.எனவே, உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி கிடைக்காத புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அடுத்த விசாரணையின் போது, அரசு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, வரும், 8ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.