சென்னை: தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் குறைந்துள்ளது. ஆனால், சென்னையில், தினமும் நோய் தொற்று அதிகரித்தபடி உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 ஆயிரத்து, 598 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், 9,034 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை, 158 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், ராயபுரம் மண்டலத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,000ஐ தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் பகுதிகளில் பாதிப்பு உள்ளது. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில், குறுகிய தெருக்களில், சிறிய வீடுகளில், அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இது, நோய் பரவல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
நோய் பரவல் அதிகரித்து வருவது தெரிந்தும், சென்னை மாநகர மக்கள், முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், வலம் வருகின்றனர். இதுவும், நோய் பரவல் அதிகரிப்பதற்கு, காரணமாக உள்ளது.

நோய் பரவலை தடுக்க, அனைவரும் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது, கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.
அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றும்படி, முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அரசின் விதிமுறைகளை, மக்கள் பின்பற்றினால் மட்டுமே, நோய் பரவலை தடுக்க முடியும். எனவே, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதேநேரம், அரசு தரப்பில், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும், நோய் பரிசோதனை செய்வதுடன், அவர்களை தனிமைப்படுத்தி, மூன்று வேளை உணவு வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையாதபடி, உள்ளிருப்போர் வெளியில் செல்லாதபடி, கண்காணிக்க வேண்டும். இப்பணியை தீவிரப்படுத்தினால், நோய் மற்ற பகுதிக்கு பரவுவதை தடுக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE