புதுடில்லி; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட, 'பி.எம்.கேர்ஸ்' நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட உத்தரவிடுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மார்ச், 28ல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 'பி.எம்.கேர்ஸ்' என்ற நிவாரண நிதியம், பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. நன்கொடைஇதையடுத்து, பிரபலங்கள், அரசு ஊழியர்கள், தனிநபர்கள் என பலரும், இந்த நிதியத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களை வெளியிட உத்தரவிடுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சுரேந்தர் சிங் ஹூடா தாக்கல் செய்த அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 'பி.எம்.கேர்ஸ்' நிவாரண நிதியத்திற்கு, நன்கொடையாக வழங்கப்படும் பணம் குறித்த தகவல்களை, ஹர்ஷா குந்தகர்னி என்பவர் கோரினார். ஆனால், அதை வெளியிட மறுத்த பிரதமர் அலுவலகம்,'இந்த நிதியம், பொது அதிகாரத்தின் கீழ் வராது' என்றும் தெரிவித்தது. பிரதமரின் நிவாரண நிதியம், பொது அதிகாரத்தின் கீழ் தான் வரும்.
ஆகையால், இந்த நிதியத்திற்கு கிடைக்கும் பணம், செலவிடப்படும் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அரசு வெளியிட வேண்டும்.நிதியத்தை நிர்வகிக்கும் உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காக உழைப்பதாகவும், தனிப்பட்ட நலனுக்காக பணியாற்றவில்லை என்றும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரகசியம் எதற்கு?
பொது காரணத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நிதியத்தில், ரகசியம் எதற்கு?வைரசால் பாதிக்கப்பட்டோரிடம் பணம் இல்லாததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சிகிச்சைகளும் கிடைப்பதில்லை. பிரதமரின் நிவாரண நிதியம் இருந்தும், அவர்களுக்கு என்ன பயன்?இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய இந்த மனு, வரும், 10ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரிக்க, டில்லி உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE