பொது செய்தி

தமிழ்நாடு

தாமதிக்கக் கூடாது!அவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
தாமதிக்கக் கூடாது!அவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர்

சென்னை:தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும், தலைநகர் சென்னையில் அடங்க மறுத்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, புதிய உச்சத்தை எட்டி வருவதற்கு என்ன காரணம் என்பதைச் சரியாக கணித்து, 'அதிக பரிசோதனை; அதிக ரிசல்ட்' என்ற சாக்கு போக்கெல்லாம் சொல்லாமல்,துல்லிய செயல்பாடுகளை மேற்கொள்வதே, தற்போதைய அவசர சேவை.தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளையும், தடை ஏற்படுத்தும் அதிகாரிகளையும் ஓரங்கட்டி விட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில், கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தலைநகர் சென்னையில் மட்டும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பரிதாபம் தான்பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினமும் கூடி வருகிறது. இரண்டு நாட்களாக, ஆயிரத்தை தாண்டி வருகிறது. எனவே, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

கட்டுப்பாடு பகுதிகளிலும் சரியான கண்காணிப்பு இல்லை; மக்கள் இஷ்டம் போல் சுற்றித் திரிகின்றனர்; பெரும்பாலானோர் முகமூடி கூட அணியாமல் சுற்றுவது தான் பாதிப்பை அதிகப்படுத்துகிறது என,குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்து வது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோருடன், கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களில், 9,034 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 8,405 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர். சென்னையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில், பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். இதன் வாயிலாக, அப்பகுதிகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

முகக் கவசம் அணிவதை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காதவர்களை, பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும். காரில் செல்வோர், முகக் கவசம் அணியாவிட்டாலும், அவர்களை, கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்து கிறோம். தேவைப்பட்டால், காவல்துறை உதவியுடன், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் படும். அதிகப்படியான எண்ணிக்கையை கண்டு, மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா கட்டுக்குள் வரும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினாலும், அவரும், அவரது சகாக்களும், மக்களிடம் கெஞ்சுவதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது.


கட்டுப்பாடுடன் இருப்பதில்லைசில நாட்களுக்கு முன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குரல் தழுதழுக்க பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார்.அதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் யாரும், கட்டுப்பாடுடன் இருப்பதில்லை; தடைகளைத் தாண்டி வெளியே வந்த வண்ணம் இருக்கின்றனர்.

போலீசாரைக் கண்டதும் முக கவசம் அணிவதும், ஓடி ஒளிவதுமாக இருக்கின்றனர். சமூக இடைவெளி ஏன் அவசியம் என்பது குறித்து, மக்களுக்குச் சரியான புரிதல் இல்லை. இங்கெல்லாம், தண்டோரா மூலமோ, 'பிட் நோட்டீஸ்' மூலமோ மக்களுக்குப் புரிய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல இடங்களில், போலீசாருக்கே இதன் வீரியம் புரியவில்லை அல்லது ராப்பகலாய் உழைத்து சோர்ந்து விடுகின்றனர்.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட உபாதைகள் உள்ளோருக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உடனே, அவசர சிகிச்சை பிரிவில் தான் சேர்க்க வேண்டி உள்ளது.'இவ்வளவு பீதி ஏற்படுத்தக் கூடாது' எனக் கருதி, அரசு மெத்தனமாக இருந்தால், தொற்று இன்னும் எக்கச்சக்கமாகப் பெருகும்.பாதுகாப்பு அவசியம்அதிகாரி ராதாகிருஷ்ணன் பேசி முடித்ததும், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:

கொரோனா வைரஸ் குறித்து, தவறான கருத்து மக்களிடையே உள்ளது. தற்போதைய சூழலில், அனைவரும் வெளியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, பாதுகாப்புடன் இருப்பது அவசியம். சென்னை, கண்ணகி நகர் பகுதியில், ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். பின்தங்கிய மக்களாக இருந்தாலும், அவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளது. அதனால் அப்பகுதியில், பெரிய அளவிலான பாதிப்பு இல்லை.

நீரிழிவு, ரத்த அழுத்தம்உள்ளிட்டோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அவர்கள் முறையாக மருந்து உட்கொண்டு, தனிமைப்படுத்துதல் வாயிலாக, கொரோனாவில் இருந்து, தற்காத்து கொள்ள முடியும்.மாற்றுத் திறனாளிகளுக்காக, கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது; விரைவில், செயல்பாட்டுக்கு வரும்.சென்னையில் பாதிப்பு உள்ள வார்டுகளில், தலா, 3,000; பாதிப்பில்லாத வார்டுகளில், 1,500 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வசதி இல்லாத முதியவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு, 'வைட்டமின்' மாத்திரை உள்ளிட்டவற்றை வழங்கி, ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புடன் உள்ள, ஆபத்தில்லாத நோயாளிகளை, வீட்டில் தனிமைப்படுத்தும் போது, 80 சதவீதம் பேர், அரசின் வழிக்காட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்கின்றனர். ஒருசிலர் கடைப்பிடிக்காததால், பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சென்னையில், வீட்டு தனிமைப்படுத்துதலை ரத்து செய்து, பாதிப்பு மற்றும் அறிகுறி இருப்பவர்கள் அனைவரையும், மாநகராட்சி மையத்தில் தங்க வைப்பது குறித்து, தலைமை செயலரிடம் ஆலோசித்து உள்ளோம். ஆனாலும், வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


சுறுசுறுப்பு காட்டுங்கள்!

சென்னையில், அலோபதியுடன், பாரம்பரிய சித்தா மருந்தும் சேர்த்து அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதை அனைத்து அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களிலும் முழுமையாக செயல்படுத்த விடாமல், சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது தான், சிக்கல் அதிகமாக காரணம் என, கூறப்படுகிறது.அதிகாரிகளின், 'சில்லி'த் தனமான செயல்பாடுகள், நோய் பரவலை பெரிதாக்கிவிடும் என்பதை, அரசு உணர வேண்டும். குளறுபடிகளை தீர்க்க, தமிழக முதல்வர் அவசர கதியில் சில முடிவுகளை எடுக்க வேண்டும். அலோபதியுடன், சித்தா டாக்டர்களையும் ஒருங்கிணைந்து, செயல்பட வழி வகுக்க வேண்டும்.

சென்னையின் சில பகுதிகளில், கபசுர குடிநீர், மூலிகை கஷாயம் ஒரு வாரம் கொடுக்கப் பட்டதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதை, சென்னை முழுவதும் வினியோகிக்க, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர், சுதந்திரமாக செயல்பட வழிவகுக்க வேண்டும்.'குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி, காய்ச்சல், சளி தொல்லை, நீண்ட கால நோய் பாதிப்பு உள்ளோரை கண்டறிந்து, அவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளித்தல் என, சுறுசுறுப்பு காட்டினால், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்; இறப்புக்களை தடுக்க முடியும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர்.இனி, சென்னையில் நோய் பாதிப்பு கட்டுக்குள் வருவது அரசின் கையில்!


தினமும் 500 ஆட்டோக்கள்!

சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது:கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த, கோடம்பாக்கம் மண்டலத்தில், கோயம்பேடு சேமாத்தன் நகர் உள்ளிட்ட, ஐந்து பகுதிகளில், தினமும், 20 ஆட்டோக்கள் பயன்படுத்தி, வீடு தோறும், கபசுர குடிநீர் வழங்க, மாநகராட்சி அனுமதி அளித்தது. ஒரு வாரத்தில், அங்கு பாதிப்பு வெகுவாக குறைந்தது.

இன்று வரை, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், ராயபுரம் மண்டலத்தில், சில வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு வாரமாக கபசுர குடிநீர், மூலிகை தேநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்த செயல்பாட்டை இன்னும் வேகப் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.சென்னை முழுவதும், வீடு தோறும் சென்று, கபசுரகுடிநீர், மூலிகை தேநீர் வழங்கலாம்.

பத்து நாட்களுக்கு தொடர்ந்து வழங்கினால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தினமும், 500 ஆட்டோக்கள் வரை பயன்படுத்த வேண்டும்.கொரோனா பீதியில் இருந்து, சென்னை மக்கள் விடுபட்டு விடுவர். இதற்கு, அரசு சித்தா டாக்டர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களையும் பயன்படுத்தலாம். அரசு தயக்கமின்றி, உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கிருமி தொற்று தான்; நோய் கிடையாது!

''முக கவசம் அணிவது, சமூக இடைவௌி கடைபிடிப்பது ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட உபாதைகள் உள்ளோர், கவனமாக இல்லையெனில், பிரச்னை அதிகரிக்கும்,'' என, தொற்று நோய் தடுப்பு நிபுணரான குகானந்தம் கூறினார்.

அவர் கூறுவதாவது:சென்னையில், கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.அதிலும், 60 வயதிற்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்னை, காசநோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு, சிகிச்சை எடுப்போர், இதற்கும் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதேபோல், கர்ப்பிணியர், ஏதேனும் நோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கும், பரிசோதனை நடத்த வேண்டும். நோய் தாக்கம் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, பாதுகாக்க வேண்டும்.கிருமி தொற்று என்பது, நோய் கிடையாது. அவர்கள் நோயாளியாக மாறுவதற்கு முன்பாக, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.சென்னையில், பெரும்பாலானோருக்கு, கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் என்றால், காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் போன்றவை இருக்கும். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால், எளிதாக காப்பாற்றி விடலாம்.

எனவே, மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை; அரசின் விதிமுறைகளை பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிந்தால், மற்றவர்களின் மூச்சுக் காற்று நம்மை அணுகாமல், நாம் தொற்றிலிருந்து தப்புவோம்.நம் பழக்கமே, கைகளை கண்ட இடங்களில் வைத்து, அதே கையோடு, மூக்கு, கண், வாய்களில் வைப்பதே.தொற்று உள்ளவர்கள் இருந்த இடத்திலோ அல்லது அவர்கள் மீதோ அல்லது அவர்கள் தொட்ட பொருட்களையோ நாம் தொட்டு விட்டால், கிருமி நம் கையில் ஒட்டி விடுகிறது.

இந்த கிருமி, நம் கையில் இருப்பதை நாம் பார்க்க முடிவதில்லை என்பதால், அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம். அதற்காக தான், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யச் சொல்கிறோம். இப்படிச் செய்யும்போது, கிருமி நம் கையை விட்டு அகன்று விடும்.சமூக இடைவெளி எதற்கு என்றால், மற்றவர்களின் மூச்சுக் காற்று நம் மீது படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே. மூச்சுக் காற்று பட்டால், கிருமி நம் மீதும் தொற்றி விடும்.

சென்னையில், மக்கள் நெருக்கம் அதிகம். சமூக இடைவெளியை பின்பற்றாததால், நோய் பரவல் அதிகரிக்கிறது. அரசின் விதிகளை பின்பற்றினால், நோய் பரவலை தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
05-ஜூன்-202021:43:49 IST Report Abuse
Rajas 40 வருடமாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை என்று எதுவும் செய்யவில்லை. சாதாரண காய்ச்சலையே கூட சமாளிக்க முடியாத நிலையில் தான் அரசு இயந்திரம் துரு பிடித்து இருக்கிறது.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
05-ஜூன்-202021:41:45 IST Report Abuse
பெரிய ராசு முடிந்தது சென்னையின் கதை .....அறிவீலி மக்கள் விளைவு உயிர் இழப்பு .
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
05-ஜூன்-202021:37:59 IST Report Abuse
Rajas 4 நாட்கள் முழு ஊரடங்கு என்று முதல் நாள் அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள், ஒரு குப்பை லாரி கூட கைவசம் இல்லாத CMDA எப்படி கோயம்பேடு மார்க்கெட்டை நடத்துகிறது. (அதை சென்னை மாநகராட்சி தானே நடத்த வேண்டும்.) இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு காரணமான அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தால் தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X