அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்| George Floyd protests: Gandhi's statue outside Indian Embassy in US desecrated | Dinamalar

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (10)
Share

வாஷிங்டன்; அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையைக் கண்டித்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்தியத் துாதரகம் அருகே நிறுவப்பட்டுஉள்ள, மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் வகையில், அதன் மீது பெயின்ட் வீசப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, இந்தியத் துாதரகம் புகார் கொடுத்துள்ளது.latest tamil newsஅமெரிக்காவில் போலீஸ்காரர் ஒருவர், தன் முழங்காலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து, அமெரிக்கா முழுதும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெரும்பாலான நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. நாடு முழுதும் கலவரம் பரவி, பதற்ற நிலை நீடித்து வருகிறது.வாஷிங்டனில் உள்ள, இந்தியத் துாதரகம் அருகே நிறுவப்பட்டுள்ள, 8 அடி, 8 அங்குலம் உயரமுள்ள மஹாத்மா காந்தியின் வெண்கல சிலையின் மீது, சிலர் பெயின்டை தெளித்து அசிங்கப்படுத்திஉள்ளனர். இது தொடர்பாக, இந்தியத் துாதரகம், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் தெரிவித்துள்ளது.

மேலும், போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.கண்டனம் கடந்த, 2000ம் ஆண்டு, அப்போதைய அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில், நம் நாட்டின் அப்போதைய பிரதமர் வாஜ்பாயி இந்த சிலையை திறந்து வைத்தார்.

அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள ஒரு சில வெளிநாட்டுத் தலைவர்கள் சிலைகளில், மஹாத்மா காந்தியின் சிலையும் ஒன்றாகும். சிலையை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அஹிம்சையை போதித்த காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'வாஷிங்டனில், மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 'ஜார்ஜ் பிளாய்டு மரணம் மற்றும் அதையடுத்து நடந்த வன்முறைகள் வேதனை அளிக்கின்றன. எந்த வகையிலும் பிரிவினையை, பேதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

'விரைவில் மீண்டு வருவோம்; சிறப்பாக வருவோம்' என, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர், கென் ஜஸ்டர், சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.போலீஸ் சுடப்பட்டார்நியூயார்க் நகரின் புரூக்ளினில், ஒரு போலீஸ்காரர் சுடப்பட்டுள்ளார். ஆனால், யார், எப்போது, அவரை சுட்டனர் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும், அந்த போலீஸ் அதிகாரியின் நிலை குறித்தும் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளனர். 'கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரசால், நாடு முழுதும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பிளாய்டு மரணத்தால் ஏற்பட்டுள்ள வன்முறையால், அந்தப் பிரச்னையை மக்கள் மறந்து விட்டனர்.

'இந்தப் போராட்டங்களால், வைரஸ் பாதிப்பு தீவிரமடையும்' என, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பிளாய்டு கொல்லப்பட்ட வழக்கில், அவருடைய கழுத்தின் மீது தன் முழங்காலால் நெருக்கிய, போலீஸ் அதிகாரி டெரக் சாவின் மீது, மூன்றாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் மீது, மிகவும் கடுமையான, இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, சம்பவம் நடந்தபோது உடன் இருந்த மேலும், மூன்று போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு, ஏப்., 3ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையின்போது, வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


latest tamil newsஆனால், வைரஸ் பாதிப்புக்கும், அவருடைய மரணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை தலைவர் கண்டனம்ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் தலைவர் மிச்சைல் பாச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:போலீஸ் வன்முறையில், ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள், அந்த மக்களின் குரலை எதிரொலிப்பதாக உள்ளன.
அமெரிக்க சமூகத்தை நீண்ட காலமாக வியாபித்திருக்கும் இந்த விஷம் நிறைந்த நோயை, திட்டமிட்ட இன பாகுபாடு கலாசாரத்தைத் தடுக்க வேண்டும். ஆப்ரிக்க அமெரிக்கர்களின் குரல்களை, அரசு செவிமடுத்து கேட்க வேண்டும்.கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகளில்கூட, இந்த இன வேறுபாடு தெரிய வந்தது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news'இந்தப் போராட்டங்கள், ஒரு மாற்றத்துக்கான வழியாக இருக்க வேண்டும். போலீஸ் அதிகாரம் குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கும், போலீசுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில், சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்' என, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.போலீஸ் சீர்திருத்தம்பிளாய்டு மரணத்தால், போலீஸ் அத்துமீறல் குறித்த விவாதம், அமெரிக்காவில் துவங்கியுள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், போலீஸ் சீர்திருத்தம் செய்வது தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீர்மானத்தை அவர்கள் வடிவமைத்து வருகின்றனர். செனட் உறுப்பினர்கள், கோரி பூக்கர் மற்றும் கமலா ஹாரிஸ், செனட்டில் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சியில் உள்ளனர். மிக விரைவில், இது தொடர்பான தீர்மானம், பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X