திருப்பூர்:அமெரிக்கா, இங்கிலாந்தில் திவாலாகியுள்ள ஆடை வர்த்தக நிறுவனங்களால் பாதிக்கப்படும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, அடுத்த நான்கு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என, இ.சி.ஜி.சி., தலைவர் உறுதி அளித்துள்ளார்.ஏற்றுமதியாளர்கள், தங்கள் ஆர்டர்களை பாதுகாப்பதற்கு, ஏற்றுமதி காப்பீட்டு கழகம் (இ.சி.ஜி.சி.,) கைகொடுக்கிறது. வர்த்தகர்களிடமிருந்து தொகை பெறமுடியாத நிலை ஏற்படும்போது, காப்பீடு செய்துள்ள ஏற்றுமதி நிறுவனத்துக்கு, இ.சி.ஜி.சி., நிறுவனம், இழப்பீடு வழங்கி பாதுகாக்கிறது.
தற்போது, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு, ஜவுளி வர்த்தக நிறுவனங்கள், திவாலாகியுள்ளன. இதனால் இவ்விரு நிறுவனங்களுக்கும் ஆடை தயாரித்து அனுப்பிய இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, தொகை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண்பது குறித்த ஆலோசனை கூட்டம், ஏ.இ.பி.சி., சார்பில், ஆன்லைனில் நேற்று நடந்தது. ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
இ.சி.ஜி.சி., சேர்மன் செந்தில்நாதன் பேசியதாவது:அமெரிக்க நாட்டு ஜெ.சி., பென்னி, இங்கிலாந்து நாட்டு லாரா ஆஷ்லே நிறுவனங்கள், 100 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டு, திவாலாகியுள்ளன. இதுகுறித்து, ஏற்றுமதியாளர்களிடமிருந்து எந்த ஒரு கோரிக்கை தாக்கலும் செய்யப்படவில்லை.ஆனால், அந்த வர்த்தக நிறுவனங்கள் திவாலாகியுள்ள தகவல், எங்களுக்கு கிடைத்துள்ளது.இதனால் பாதிக்கப்படும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் வழங்க இ.சி.ஜி.சி., முனைப்புகாட்டிவருகிறது.குறிப்பிட்ட வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்துள்ள, ஆர்டரை காப்பீடு செய்துள்ள ஏற்றுமதியாளர்கள், விவரங்களை சமர்ப்பித்தால், இ.சி.ஜி.சி., விரைவாக பணம் திரும்ப செலுத்துவதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE