விருதுநகர்:விருதுநகர் அருகே நாராயணபுரத்தில் மழை நீரை சேமித்து அதன் மூலம் நிலத்தடி நீராதாரம் பெற்று வருகின்றனர் கிராம மக்கள் .இதனால் இங்கு குடிநீர் தட்டுப்பாடானது இல்லாமல் உள்ளது.
வறண்ட தரிசு காடுகள் நிறைந்த இப்பூமியில் தண்ணீர் தட்டுப்பாடு ஆண்டு முழுவதும் உள்ளது. இதிலும் விரல் விட்டு எண்ணும்படி சில கிராமத்தினர் மழை நீர் சேமிப்பின் மூலம் நிலத்தடி நீராதாரம் பெருக செய்கின்றனர். விருதுநகர் - எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள இக்கிராமத்தின் மைய பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இதனருகே ஊரணி சுத்தம், சுகாதாரமாக பேணப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஊரணியை நிரப்புகிறது.இங்கு குளிக்க, துணி துவைக்க, பிற தேவைகளை பூர்த்தி செய்ய கிராம நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் மழை நீர் அசுத்தம் ஆகாமல் பார்த்து கொள்ளப்படுகிறது. அடிகுழாயில் தண்ணீர் பிடிப் பவர்களால் வீணாகும் தண்ணீரை அருகில் உள்ள 'சமுதாய உறிஞ்சு குழிக்கு திருப்பி விடப்பட்டு இயற்கையான முறையில் சுத்திகரித்து ஊரணிக்குள் சேமிக்கப்படுகிறது. ஊரணியில் மழை நீரை சேமிப்பதால் நிலத்தடி நீராதாரம் கிடைக்கிறது. இதன் மூலம் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது.
இக்கிராம விவசாயி தனுஷ்கோடி:
ஊரணி வற்றினால் வீடுகளின் ஆழ்துளை கிணறு தண்ணீர் சுவையாக இருக்காது. இதனால் பெய்யும் மழை நீரை சொட்டு கூட வீணாக்காமல் முழுவதும் சேமிக்க வசதியாக ஊரணியில் சுகாதாரம் காக்கப்படுகிறது. சுகாதாரமாக வைத்து கொள்ள கிராம மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர், என்றார்.