கற்க, நிற்க அதற்குத் தக!| Dinamalar

கற்க, நிற்க அதற்குத் தக!

Added : ஜூன் 06, 2020 | |
அழகர்சமூக ஆர்வலர்வீடு நிறைய பிள்ளைகள் இருப்பதே பெருமை என, முன், மக்கள் நினைத்தனர்; குழந்தை செல்வங்களையே, பெரிய செல்வமாக நினைத்தனர். முன்பெல்லாம், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் நாள், ஒரு மகிழ்ச்சிகரமான நாளாகத் தான் இருந்தது.விஜய தசமி அன்று, பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், குரு
 கற்க, நிற்க அதற்குத் தக!

அழகர்சமூக ஆர்வலர்வீடு நிறைய பிள்ளைகள் இருப்பதே பெருமை என, முன், மக்கள் நினைத்தனர்; குழந்தை செல்வங்களையே, பெரிய செல்வமாக நினைத்தனர்.

முன்பெல்லாம், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் நாள், ஒரு மகிழ்ச்சிகரமான நாளாகத் தான் இருந்தது.விஜய தசமி அன்று, பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், குரு தட்சணையாக ஒரு சிறிய தொகை, அனேகமாக 1 ரூபாய் வைத்து, குழந்தையின் விரலை பிடித்து, நெல்லில் எழுதுவர்.புளகாங்கிதம்அன்று வீட்டில் அனைவரின் மனமும், மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். அதன் பின், அந்த ஆசிரியரின் குழந்தைகளில், அந்த மாணவனும் ஒருவனாகி விடுவான். பள்ளிக்கு, இரண்டு நாட்கள் தொடர்ந்து அவன் படிக்க வராவிட்டால், மாணவனுக்கு என்ன பிரச்னையோ என்று தெரிந்துக் கொள்ள, வீட்டிற்கே ஆசிரியர் வந்து விடுவார்.அதனால் தான், வளர்ந்த பிறகும், ஆசிரியர்களை மறக்க முடியாமல், 'அவரால் தான், நான் இப்போது நல்ல நிலைமையில் உள்ளேன்' என, புளகாங்கிதம் அடைவோர், நிறைய பேர் இப்போதும் உள்ளனர்.தங்களை புடம் போட்ட ஆசிரியர்களால் தான், தங்கமாக இன்று ஜொலிக்கிறோம் என்பதை உணர்ந்து, தங்களின், 'இ-மெயில் பாஸ்வேர்டாக' கூட, ஆசிரியர் பெயரை வைத்து, அதன் மூலம், அவரது நினைவு, தங்களை விட்டு அகலாமல் பார்த்துக் கொண்டுள்ளனர், ஏராளாமானோர்.ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே, அந்த குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது என யோசித்து, அந்த செயலை செய்து முடிப்பதற்குள், பெற்றோரின் தாவு தீர்ந்து விடுகிறது.இந்த கொரோனா தருணங்களில், பல துறைகள் மிகுந்த கடமை உணர்ச்சியுடன் பணியாற்றின. ஒளி ஊடகங்கள் ஒருபுறம் என்றால், காவல் துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, துாய்மை பணியாளர்கள் என, பல துறையினரும் மகத்தான சேவை ஆற்றி, தங்களின் செயல்திறனை நிரூபித்துள்ளனர்.எல்லா துறையினரும் நன்றாக வேலைப் பார்த்தால், அரசு இயந்திரத்திற்கு கண் பட்டு விடும் என்று, திருஷ்டி பரிகாரமாய் இருக்கிறது, நம் கல்வித்துறை.ஊடகங்களை இன்று எடுத்தால், தலைப்பு செய்தியை, கொரோனாவிற்கு கொடுத்து விட்டு, அடுத்த இடத்தைப் பிடித்து இருப்பது, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் பற்றிய செய்திகள் தான்.'இந்த தேர்வை, இதுவரை, எத்தனை தடவை மாற்றி வைத்தோம்' என, அதிகாரிகளிடம் கேட்டால், நிச்சயம், ஆளுக்கொரு பதிலை தான் கூறுவர். அத்தனை முறை, தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டுமல்ல, கல்வித்துறை தொடர்பான விஷயங்களிலும், சில ஆண்டுகளாகவே, ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள், கணக்கில் அடங்காத உத்தரவுகள்...அறிக்கைகள்கிட்டத்தட்ட, நாள்தோறும் ஒரு அறிக்கை அல்லது ஆணையை வெளியிடாவிட்டால், கல்வித்துறை மீது யாரேனும் வழக்கு போட்டு விடுவரோ என்ற அச்சத்தை, அந்த துறைக்கு யாரேனும் விதைத்திருக்க வேண்டும். அதனால் தானோ என்னவோ, தினம் தினம், புதிது புதிதாக அறிக்கைகள், ஆணைகள் வந்து கொண்டே இருக்கின்றன.பள்ளிக்கல்வித் துறை மட்டுமின்றி, உயர் கல்வித்துறை, தேர்வுகள் துறை, வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த உத்தரவுகள், அறிக்கைகள், நாள் தோறும் வந்த வண்ணமாகவே உள்ளன.எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், நம் மாணவ சமுதாயம், இத்தனை உத்தரவுகளையும், மாற்றங்களையும் உள்வாங்கி, எப்படி சாதித்து காட்டி வருகிறது என்பது தான்!உலகின் இளைய சமுதாயத்தினர் அதிகம் இருப்பது, நம் இந்தியாவில் தான். நம் தேசத்தின் வல்லரசு கனவு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தில் தான் எழுதப்படப் போகிறது.இந்தியா என்ற, பல மாநிலங்களின் கூட்டாட்சியில், தமிழகத்தின் பங்கு தன்னிகரில்லாதது. தமிழர்கள் இல்லாத துறையோ, பெரிய நிறுவனமோ, நாடோ இந்த உலகில் கிடையாது. உலகின் தலை சிறந்த நிறுவனங்களுக்கு மூளையாக இருப்பது நம் தமிழர்களே.அது மட்டுமல்ல, நாட்டின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளையும், தலை சிறந்த அதிகாரிகளின் பட்டியலையும் எடுத்துக் கொண்டால், தமிழனின் பெயர் அதில் இல்லாமல், அந்த பட்டியல் முழுமை பெறாது. அந்த அளவிற்கு தமிழர்கள், அனைத்து இடங்களில் நீக்கமற நிறைந்துள்ளனர்.ஆனால், இதே நிலை, எதிர்காலத்திலும் நீடிக்குமா என்பதை, கேள்வி குறியாக்கி இருக்கிறது, ஒட்டுமொத்த கல்வித் துறையின் செயல்பாடு மற்றும் அங்கிருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், உத்தரவுகள்.இவை, கல்வியின் எதிர்காலம் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், முதல் நாள், சில வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு என்பர். அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல, எதிர்க்கட்சிகளிடம் இருந்து கண்டன அறிக்கைகள் வரும்.அடுத்த நாள், 'அந்த திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த மாட்டோம்; அவசரப்பட மாட்டோம்' என்பர்.அப்படியே, 'இந்த ஆண்டு, தேர்வே இல்லை' என்பர்; அடுத்த நாள் தேர்வு தேதியை அறிவிப்பர். இப்படி, ஏராளமான குழப்பங்களுக்கு காரணமான கல்வித்துறை, மாணவர்களையும், பெற்றோரையும், தொடர் அதிர்ச்சியிலேயே வைத்திருக்கிறது.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியில் சேர காத்திருக்கும் மாணவ சமுதாயம் சந்திக்கும் குழப்பங்கள் ஏராளம்.இந்த ஆண்டு கவுன்சிலிங்கா, கட் ஆப் மார்க்கா, ஆன்லைனில் விண்ணப்பமா, நேரிலா, கல்வி கட்டணம் எவ்வளவு, கல்லுாரி திறப்பு எப்போது என, ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும், புதுப்புது உத்தரவுகள்.மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வு அவசியம் என, மத்திய அரசு கூறும். ஆனால், மாநிலத்தில், அதற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கும்.நடத்தவே விட மாட்டோம் என, ஒரு கட்சி கூறும்; அதன் தொண்டர் ஒருவர், தீக்குளிப்பார் அல்லது நீதிமன்றத்திற்கு சென்று, தடையாணை வாங்கி விடுவார்.குழப்பம் இல்லைமாணவர்கள் விவகாரத்தை, அரசியல் பிரச்னையாக்கி, குளிர்காயும் கட்சிகள் தான், நம் மாநிலத்தில் அதிகம்.ஆனால், வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில், இவ்வளவு குழப்பங்கள் இப்போது இல்லை.'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடி, தீர்மானம் நிறைவேற்றும். அதுவே தான், தங்கள் விருப்பமும் என, மாநில அரசு சொல்லும். அப்போது, நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என, மாணவர் பதைபதைப்பர். அடுத்த சில நாட்களில், மாநில அரசு சார்பில், நீட் தேர்வுக்கான, இலவச பயிற்சி மையம் துவங்கும் தேதி அறிவிக்கப்படும்.இப்படி, மாணவர்களையும், அவர்களின் கல்வியையும், அரசியலுக்கு பயன்படுத்துவது, நம் மாநிலத்தில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.கல்வியைப் பற்றி அறியாத, முறையாக கற்றிராத அரசியல் தலைவர்கள் பலர், கல்வித்துறையில் இன்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பர்.கல்வித்துறையின், நாளுக்கு நாள் மாற்றங்களை யாராவது புத்தகமாக தொகுத்து வெளியிட்டால், இந்த ஆண்டின், மிகச் சிறந்த, அவலச்சுவை நிரம்பிய புத்தகமாக அது இருக்கும்.ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய அரசுக்கு, ஆலோசனை சில... நீங்கள் ஒரு முறை முடிவெடுத்து ஆணையிடும் முன், நுாறு முறை யோசியுங்கள். அந்த முடிவு சரியா தவறா என்பதை, காலம் தீர்மானிக்கட்டும். எடுக்கும் முடிவில் உறுதியாக இருங்கள். அடுத்தவர்களை குறை சொல்வதற்கு என்று ஒரு கூட்டம், எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும்.ஆம், அவர்கள் தான், நம் எதிர்க்கட்சித் தலைவர்கள். அவர்களிடம் ஆக்கபூர்வமாக ஏதாவது அறிவுரை சொல்ல சொன்னால், நிச்சயம் சொல்ல மாட்டார்கள். ஆனால், அரசு எடுக்கும், எல்லா நடவடிக்கைகளையும் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பர்.உலகம் தோன்றிய காலம் முதல், மனித குலம் கற்றுக்கொண்டே இருக்கிறது.இந்த நிலையில் தான், குழப்பமில்லாத கல்வி, மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான வழியில் கற்றல், நம் மாநிலத்தில் நடை பெற வேண்டும்.வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்து, அதை அப்படியே மனப்பாடம் செய்து, அதை அப்படியே வெளியே கொட்டும் வகையில், கல்வி இருக்கக் கூடாது. பாடங்களோடு, படிப்பை முடித்து விட்டு, மாணவப் பருவத்தை தாண்டி, வெளியே வரும் போது, பொது வாழ்க்கையை எதிர் கொள்ளும் அளவிற்கு, திறமை படைத்தவர்களாக மாணவனை மாற்றும் வகையில், கல்வி இருக்க வேண்டும்.கல்வித்துறையின் மாற்றங்கள் என்பது, காலத்திற்கு ஏற்ப பாடங்களில், தேர்வு முறைகளில் செய்யப்படும் மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, அங்கு பணியாற்றும் நபர்களை மாற்றுவதில் மட்டும் இருக்கக் கூடாது.நல்லதல்லஅரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, கல்வி என்பது கசக்காமல் இருக்க வேண்டும். பிள்ளைகளையே கசக்குவதாய் அமைதல், நிச்சயம் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.கல்விப்பணி என்பது, இந்த தேசத்தின் ராணுவப்பணிக்கு சற்றும் குறைவில்லாதது. ராணுவம் எல்லைகளோடு இருந்து விடுவது; கல்வி, எல்லைகள் இல்லாதது.கல்வி ஒன்றே, இந்த தேசத்தை முன்னெடுத்து செல்லப்போகும் ஆயுதங் களில் தலையானது. அத்தகைய கல்வி குறித்த முடிவுகளில், அரசு செய்யும் குளறுபடிகள் களையப்பட வேண்டும். மாற்றங்கள், இந்த மாநிலத்துக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.கல்வி சார்ந்த அரசு, ஒவ்வொரு முடிவுகளையும், சீர்துாக்கி ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே நம் ஆசை!தொடர்புக்கு: இ - மெயில்: kumar.selva28769@gmail.comமொபைல் எண்: 90800 06180எடிட் செய்யப்பட்டது / கீ: 7,900 / வார்த்தை: 880இவரின் கட்டுரை, இதற்கு முன், உரத்த சிந்தனை பகுதியில், 2020, பிப்., 22ல் வந்துள்ளது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X