சென்னை: ‛‛சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை பெற போதிய படுக்கைகள் இல்லை'' என்பதை பதிவிட்டு வீடியோ வெளியிட்ட நாடகாசிரியரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜனை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். வரதராஜன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளததை கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவரது டுவிட்டரில் கூறி உள்ளார்.
வரதராஜன் கூறிய கருத்தில் என்ன பெரிய தவறு இருக்கிறது?. தனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பொதுவெளியில் வெளியிட்ட வரதராஜனை கண்டித்து பேட்டி அளித்தது தனி மனித தாக்குதல் இல்லையா?
வரதராஜன் மீது பாய்ந்து என்ன பயன் ?

மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லை என்று வரதராஜன் வெளியிட்ட தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்வதை விட்டு விட்டு, அவர் மீது கோபத்தைக் காட்டி என்ன பயன்? சரி, அமைச்சர் கூறுவது போல், காலி படுக்கைகள் இருக்கின்றன என்றே வைத்துக்கொண்டாலும், எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்ற விபரத்தை வெளியிட வேண்டியது தானே. கொரோனா ஒழிப்பில் இதுவரை ஓய்வில்லாமல் அமைச்சர் ஆற்றிய பணிகளை பொதுவாக மக்கள் பாராட்டுகின்றனர். இந்நிலையில் அரசை விமர்சிக்காமல் ஒரு தனி நபர், படுக்கைகள் போதாது என்று கூறுவதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடாது.
மோசமான சூழ்நிலை ஏற்பட்டால்
ஒரு பிரச்னையை சுட்டிக்காட்டிய ஒருவரை அமைச்சர் விமர்சனம் செய்வதால், இதுவரை பாராட்டிய பொதுமக்களும், அரசை விமர்சிக்க தொடங்குவர். இதைத் தான் அமைச்சர் விரும்புகிறாரா. வரதராஜன் ஒரு நாடக ஆசிரியர், இயக்குனர். ஒவ்வொரு ஆண்டும் பல நாடகங்களை அரங்கேற்றுகிறார். அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே அவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது.வீடியோவில் வரதராஜன், அரசை குறை கூறவில்லை. ‛‛எல்லோரும் கவனமாக இருங்கள்'' என்பதைத் தான் அழுத்தமாக கூறி உள்ளார். அப்படி இருக்க, வரதராஜனை குறை கூறுவது அமைச்சருக்கு அழகல்ல. நாளையே 10 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு படுக்கை வசதி இருக்கிறதா?.
உலக பணக்கார நாடான அமெரிக்காவில் என்ன நடந்தது? கொத்து கொத்தாக பிணங்கள் விழுந்தபோது, அடக்கம் செய்ய இடம் இல்லாமல், கன்டெய்னர் லாரிகளில் போட்டு வைத்தார்கள். அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் நாம் எம்மாத்திரம்?
சென்னையில் தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க என்ன செய்யலாம் என்று தான் அரசு திட்டமிட வேண்டும். அதை விடுத்து, ‛‛நீ போய் பார்த்தாயா. யாருடன் பேசினாய், என்னுடன் மருத்துவமனைகளுக்கு வா'' என்றெல்லாம் ஒரு அமைச்சர் கூறுவது, பிரச்னைக்கு தீர்வாகாது.
வரதரராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், ‛‛எனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அனுமதிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் ஒரு படுக்கை கூட இல்லை. பெரிய இடத்து சிபாரிசு செய்தும் படுக்கை கிடைக்கவில்லை. எனவே, கொரோனா வராமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
விஜயபாஸ்கர் மறுப்பு:
வரதராஜனின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்தார்.
சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், ‛‛கெரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இது தவறு என்றார்.
நடிகர் வரதராஜன் பேசிய வீடியோ குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ; அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு இல்லை. இது தவறான தகவல். குறை சொல்ல வேண்டாம். விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். அவர் எந்த மருத்துவமனையில் பார்த்தால் என்பதை சொல்ல வேண்டும். நேரில் வந்து பார்க்க நான் தயார். அரசு நிலை குறித்து தவறான தகவல் பரப்பாதீர்கள். வரதராஜன் மீது பெருந்தொற்று நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வரதராஜனை அழைத்து சென்று, டாக்டர், சுகாதார பணியாளர்களின் பணியை காட்ட தயார். வதந்தி பரப்பினால், அரசு வேடிக்கை பார்க்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியில்அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக்கூடாது. கொரோனா தடுப்பு பணிகளில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.
சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி கூறி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வரதராஜன் விளக்கம்:
அமைச்சர் பேட்டிக்கு பின் வரதராஜன் வெளியிட்ட வீடியோவில் நான் அரசு குறித்து குறைகூறும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. எனது நண்பருக்கு அனுப்பிய வீடியோவை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனக்கு அரசு மீது குற்றம் சொல்லும் எண்ணம் இல்லை. எனது நண்பருக்கு படுக்கை கிடைத்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரதராஜன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு
நாடகாசிரியரும் செய்திவாசிப்பாளருமான வரதராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.முன்னதாக, வரதராஜன் சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் தொற்று நோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவலை வெளியிட்டதா பொது சுகாதார இயக்குநர் வரதராஜன் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதராஜனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் கண்டித்து டுவிட்
செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் கொரோானா நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.
வழக்குகளைத் திரும்ப பெறுக! இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE