கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் யார் பொறுப்பு?

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
students, Madras HC, high court, Tamil Nadu, tn govt, 10th exam, Class X exams,

சென்னை: 'மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பு? பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த முடிவை, அரசே எடுத்தால் நல்லது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மாணவர்கள், தேர்வு மையத்துக்கான ஆசிரியர்கள் என, இந்த பொதுத் தேர்வுக்கான பணியில், 22.43 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.
பரிசீலனைகொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள நேரத்தில், பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது.முறையாக பரிசீலனை செய்யாமல், பொதுத் தேர்வு அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு பின், மாணவர்களை தயார்படுத்தி, பொதுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகினர். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டதாவது:
தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில், 9.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, 30 சதவீதம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
ஜூலை மாதம், சி.பி.எஸ்.இ., தேர்வு நடக்கிறது. 15 நாட்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, பின் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசு தரப்பில், 'தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே, பொதுத் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை, 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:மாணவர்கள், ஆசிரியர்களை சிரமத்துக்கு ஆளாக்கக் கூடாது. என்ன காரணங்களுக்காக, இரண்டு முறை தேர்வு தள்ளி வைக்கப்பட்டதோ, அதை விட, வைரஸ் தொற்று அதிகரித்து தானே வருகிறது.

மாணவர்கள், தேர்வுக்கு வருவதில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது, தேர்வு நடத்த வேண்டும் என, அவசரம் காட்டுவது ஏன்; அடுத்த மாதம் தேர்வு நடத்தலாமே. மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை, பார்த்து கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.அதற்கு, அரசு தரப்பில், 'தேர்வு நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சில மாநிலங்களில், தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டது' என, கூறப்பட்டது.விசாரணைஅதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அனுமதிக்க முடியாது. ஊரடங்கு நேரத்தில், மதுக் கடைகளை திறப்பது போல் அல்ல, பொதுத் தேர்வு நடத்துவது.
'தேர்வை தள்ளி வைக்கும் முடிவை, அரசே எடுத்தால் நல்லது. அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி, விசாரணையை, பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.பிற்பகலில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''வரும் காலத்தில், இரண்டு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம் என, நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், தேர்வு நடத்த, இதுவே உகந்த நேரம்.

''மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. 11 மாநிலங்களில் தேர்வு முடிந்து விட்டது,'' என்றார்.
அப்போது நீதிபதிகள், 'தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பேற்பர்? 'இழப்பீடு வழங்குவதை தவிர, உயிருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? 10 லட்சம் மாணவர்கள், இரண்டு லட்சம் ஆசிரியர்களின் வாழ்வில் எப்படி, 'ரிஸ்க்' எடுப்பது? தற்போது தேர்வு நடத்துவதில், எந்த, 'லாஜிக்'கும் இல்லை' என்றனர்.பின், அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.எஸ்.இ., தேர்வு தள்ளிவைப்பு உத்தரவை தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே, நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த மனுவையும் சேர்த்து, விசாரணையை நாளை மறுதினத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.இணை இயக்குனருக்கு கொரோனா பாதிப்புஅரசு தேர்வு துறையில், 10ம் வகுப்பு தேர்வை நடத்தும் பொறுப்பில் உள்ள இணை இயக்குனருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தன் ஊருக்கு செல்லும் வழியில், சோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது.

அதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடன் பணியாற்றிய, தேர்வு துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, தேர்வு துறை இணை இயக்குனர் தான், கல்வி தொலைக்காட்சி பணிகளையும் சேர்த்து கவனித்தார். அதனால், கல்வி தொலைக்காட்சி ஊழியர்களுக்கும், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


முதல்வர் இன்று முடிவுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.ஜூன்15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலையில் தேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று பகல் 12:00 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு வழக்கு குறித்தும் பள்ளிகள் திறப்பு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.


தெலுங்கானாவில் ரத்து

10ம் வகுப்பு தேர்வு தெலுங்கானாவில் ரத்து: தெலுங்கானா மாநிலத்தில் தற்போதைய சூழ்நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளதால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

3,650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவே 10ம் வகுப்பில் தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா. நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலுங்கானா காட்டும் வழியையாவது தமிழக முதல்வர் பின்பற்ற வேண்டும். - ஸ்டாலின், தலைவர், தி.மு.க.,


ஒரு மையத்தில் குறைந்தது 100 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றை பொதுக் கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் ஐந்து நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே மாணவர்களிடையே கொரோனா பரவுவதற்கு போதுமானது. கொரோனா அச்சம் முழுமையாக விலகும் வரை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


மூன்று மாதங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்ட நிலையில் மீண்டும் முறையான பயிற்சிகள் அளிக்காமல் ஆயத்தப்படுத்தாமல் மாணவர்களை தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் மனநிலையை கடுமையாகப் பாதிக்கும். எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.- வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
09-ஜூன்-202021:49:07 IST Report Abuse
mrsethuraman  வேண்டாம் இந்த விஷ'பரீட்சை '. நிலைமை சீரான பின் நடத்தலாம் .ஒன்றும் குடி முழுகி போகாது.
Rate this:
Cancel
09-ஜூன்-202020:52:46 IST Report Abuse
ஆரூர் ரங் சுடலையின்😎 சன்ஷைனிலும் ஓசிபாஸ்🤑 உண்டா ? இந்திப் பாடத்திலுமா ?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
09-ஜூன்-202020:45:14 IST Report Abuse
karutthu இனி இந்த வழக்கு தேவை இல்லை . அனைவரையும் பாஸ் ஆக்கிவிட்டார்கள் .வரும் காலங்களில் பிளஸ் டூ வரை ஆல் பாஸ் என அறிவித்து விடுங்கள் .மாணவர்கள் எதிர்காலம் ??? அக இருக்கட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X