ஐ.நா., தலைமை செயலகம் 3 கட்ட தளர்வுக்கு ஆயத்தம்| Dinamalar

ஐ.நா., தலைமை செயலகம் 3 கட்ட தளர்வுக்கு ஆயத்தம்

Added : ஜூன் 09, 2020
Share

நியூயார்க்; அமெரிக்காவில், நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமை செயலகம், கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை, மூன்று கட்டங்களாக தளர்த்த முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில், கொரோனாவுக்கு மிக அதிகமானோர் பலியான நியூயார்க் நகரில், நேற்று முதற்கட்ட தளர்வு அமலுக்கு வந்தது. எனினும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கும், 13 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா., செயல்பாட்டு பிரிவு, பொதுச் செயலர், அதுல் கரே வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.நா., பணியாளர்கள், துாதர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கருதி, புதிய விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. தலைமை செயலகத்தின் அலுவலக அறைகள், 39வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றை துாய்மைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, வரும், 13 முதல், அலுவலகத்தில், முக்கிய நடவடிக்கைகள் துவங்கும். வழக்கமாக, தினமும், 4,200 பேர் வரும் நிலையில், 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அலுவலகம் வருவோர் அனைவரும், முக கவசம் அணிய வேண்டும். நேருக்கு நேர் சந்தித்துப் பேச, தடை விதிக்கப்படுகிறது. இருவர் மட்டுமே, 'லிப்டை' பயன்படுத்த வேண்டும். அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்காக வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வரிசையில் நிற்கும் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்படும். இரண்டாம் கட்ட தளர்வின் போது, 1,100 பேர் அலுவலத்தில் அனுமதிக்கப்படுவர். பணியாளர்கள், சுழற்சி முறையில் பணியாற்றுவர். நியூயார்க் நகரம், கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்து, பள்ளிகள், கல்லுாரிகள், பொது இடங்கள் திறக்கப்படும் போது, மூன்றாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X