கொரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து கடைசி நோயாளியும் குணமடைந்தார்| Dinamalar

கொரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து கடைசி நோயாளியும் குணமடைந்தார்

Added : ஜூன் 09, 2020
Share
 கொரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து கடைசி நோயாளியும் குணமடைந்தார்

வெலிங்டன்; நியூசிலாந்தில் கொரோனா பாதிப்புடன், 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் முழுமையாக குணமடைந்தார்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத நாடாக, நியூசிலாந்து மாறியுள்ளது. நியூசிலாந்து, தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு. மற்ற நாடுகளைப் போலவே இங்கும், மார்ச்சிலிருந்து கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியது.

50 லட்சம்

இங்கு, 1,500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில், 22 பேர் பலிஆகினர். இதையடுத்து, நியூசிலாந்தின் எல்லைகள் மூடப்பட்டன. வெளிநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.சமூக விலகல் நடவடிக்கை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டது. தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்தது. இந்நிலையில், 17 நாட்களுக்கு முன், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து, கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.

இந்த செய்தி, நியூசிலாந்தில் வசிக்கும், 50 லட்சம் மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியதாவது:கடந்த, 17 நாட்களில் மட்டும், 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக, கடந்த மூன்று மாதங்களில், மூன்று லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.தடை இல்லைகொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமடைந்தது, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸ், நியூசிலாந்தில் மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி விட்டோம். வைரஸ் மீண்டும் பரவாது எனக் கூற முடியாது வைரஸ் என்றால், மீண்டும் பரவத் தான் செய்யும்; அதற்காக, நாம் தோல்வி அடைந்து விட்டோம் என அர்த்தம் அல்ல. மீண்டும் வைரஸ் பரவினால் விழிப்புணர்வுடன் இருந்து, வைரசை முற்றிலும் ஒழிக்க துணிச்சலுடன் போராடுவோம்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தான், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியது. எனவே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இன்னும் சில மாதங்களுக்கு நியூசிலாந்தில் அனுமதி அளிக்கப்படாது. எல்லை, தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். நியூசிலாந்தில் வசிப்பவர்கள், குடிமக்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. திருமணம், பொது நிகழ்ச்சிகளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். வர்த்தக நடவடிக்கைகள், விருந்தோம்பல் துறை முழுமையாக செயல்படலாம். உள்நாட்டு போக்குவரத்துக்கு எந்தவிதமான தடையும் கிடையாது.

விளையாட்டு நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். விமானங்களில் இருக்கை கட்டுப்பாடுகள் நீக்கப்படும். மேலும் பல தளர்வுகள் வரிசையாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். சுகாதார நிபுணர்கள்இதற்கிடையே, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சாமர்த்தியமாக செயல்பட்ட பிரதமர் ஜெசிந்தாவுக்கு, நியூசிலாந்து மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வைரசால் பாதிக்கப்பட்டோரை முழுமையாக தனிமைப்படுத்தி, அவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்ததன் காரணமாகவே, நியூசிலாந்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X