எப்போது! வெலிங்டன் ஏரி மேல்மட்ட பாசன வாய்க்கால் தூர்வாருவது...பருவமழைக்கு முன் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

எப்போது! வெலிங்டன் ஏரி மேல்மட்ட பாசன வாய்க்கால் தூர்வாருவது...பருவமழைக்கு முன் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
 எப்போது! வெலிங்டன் ஏரி மேல்மட்ட பாசன வாய்க்கால் தூர்வாருவது...பருவமழைக்கு முன் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

திட்டக்குடி : அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வெலிங்டன் பாசன ஏரி உள்ளது.

இந்த ஏரி நீர் பாசனம் மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் மேல்மட்ட, கீழ்மட்ட வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன.அதன்படி, பெண்ணாடம் அடுத்த வடகரை, நந்திமங்கலம், கோனுார், தாழநல்லுார், அருகேரி, எரப்பாவூர், இறையூர், கொத்தட்டை, கொல்லத்தங்குறிச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு, நெல் மற்றும் தோட்டப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனுார், தாழநல்லுார் பகுதிகளில் உள்ள மேல்மட்ட கிளை வாய்க்கால்கள் சரிவர தூர் வாராததால் செடி, கொடிகள், சம்பு, கோரைபுற்கள் அதிகளவில் வளர்ந்து மண்டியுள்ளன.

இதனால் பாசன காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் வரும்போது வயலுக்குள் புகுந்து தண்ணீர் வீணாவதுடன், கடைமடை நிலங்களுக்கு முழு அளவு நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கடைமடை விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் போர்வெல் பாசனம் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் பாசன வாய்க்கால் துார்வாரும் பணி முறையாக நடக்காததால் சம்பா, குறுவை நெல் நடவு பட்டத்திற்கு வெலிங்டன் ஏரி தண்ணீர் திறந்தாலும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.எனவே, வெலிங்டன் பாசன வாய்க்காலில் மண்டியுள்ள சம்பு, கோரை புற்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் நகர் பகுதிகள் மற்றும் மக்கள் பார்வையில் உள்ள வாய்க்கால் பகுதிகளை மட்டுமே துார் வாருகின்றனர். மக்கள் அதிகளவில் செல்லாத பகுதிகளில் வாய்க்காலை சரிவர துார்வார நடவடிக்கை எடுப்பதில்லை. நகர் புறங்களில் வாய்க்கால் துார்வாருவது போன்று, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் துார்வாரினால் விவசாய பணிகள் பாதிப்பில்லாமல் கடைமடைப்பகுதி வரை தண்ணீர் செல்லும் எனக்கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X