10ம் வகுப்பு தேர்வு நடக்காமலேயே அனைவரும் ஆல் பாஸ்!| Class 10 public exams cancelled in Tamil Nadu, all pass | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வு நடக்காமலேயே அனைவரும் 'ஆல் பாஸ்!'

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (29)
Share
சென்னை : தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தாமலேயே அனைவரும், 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி அரசுகள், நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதோடு சேர்ந்து நடத்த திட்டமிட்டிருந்த, பிளஸ் 1 வகுப்புக்கான விடுபட்ட பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 மறு தேர்வுக்கான தேதி மட்டும், பின்னர் அறிவிக்கப்படும் என,
class 10 public exam, tamil nadu public exam, tn news, tamil news, 10ம் வகுப்பு தேர்வு நடக்காமல், அனைவரும்
'ஆல் பாஸ்!'

சென்னை : தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தாமலேயே அனைவரும், 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி அரசுகள், நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதோடு சேர்ந்து நடத்த திட்டமிட்டிருந்த, பிளஸ் 1 வகுப்புக்கான விடுபட்ட பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 மறு தேர்வுக்கான தேதி மட்டும், பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு; பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, சில பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.இம்மாதம், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்து, தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தது.


யார் பொறுப்பு?'அரசு அறிவிப்புக்கு தடை செய்யக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவத்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழகத்தில், பல மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எதுவும் நேர்ந்தால், யார் பொறுப்பு?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். இதற்கிடையில், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள், 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தன.இதனால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்த பின், முதல்வர் இ.பி.எஸ்., தொலைக்காட்சி மூலம் மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த கல்வி ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்; பிளஸ் 1 வகுப்பில், தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன, வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் புதிய பாடத் திட்டம்; வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்கு பதிவியல் பழைய பாடத்திட்டம் தேர்வு ஆகியவற்றை, ஜூன், 15 முதல், 25 வரை நடத்த, அரசு ஆணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், தள்ளிவைப்பது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, அரசு விரிவாக ஆய்வு செய்தது.


கோரிக்கைதற்போதுள்ள நிலையில், கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுனர்கள், 'நோய் தொற்று, குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை' என, கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, பெற்றோர் கோரிக்கை, நோய் தொற்றின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வரும், 15ம் தேதி முதல் நடக்கவிருந்த, 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், பிளஸ் 1 வகுப்புக்கான, விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும், முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண், அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்டையில், 80 சதவீத மதிப்பெண்கள்; மாணவர்கள் வருகைப் பதிவின் அடிப்படையில், 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த, மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப, பிளஸ் 2 வகுப்பு மறு தேர்வுகளுக்கான நாள், பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.தேர்வு மதிப்பெண் கணக்கீடு வழிமுறைகள் வெளியிடப்படுமா?பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மதிப்பெண் கணக்கீடு எப்படி நடக்கும் என்ற, வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, வரும், 15ம் தேதி துவங்கவிருந்த நிலையில், தேர்வு துறை இயக்குனர் மற்றும் தேர்வை நடத்தும் பொறுப்பில் உள்ள இணை இயக்குனருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டிய நிலை, அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இம்மாணவர்கள், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., உள்ளிட்ட படிப்புகளில் சேர, மதிப்பெண் தேவைப்படும். பிளஸ் 1 படிப்பில், எந்த பாடப்பிரிவு என்பதை முடிவு செய்யவும் மதிப்பெண் தேவை.

இதை கருத்தில் வைத்து, மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களை சராசரியாக வைத்து, அதில், 80 சதவீதம்; மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில், 20 சதவீதம் மதிப்பெண்கள் பிரிக்கப்பட்டு, பட்டியல் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பல தனியார் பள்ளிகளில், அரசின் வினாத்தாள் இல்லாமல், தாங்களே வினாத்தாள் தயாரித்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தியுள்ளனர். அதில், அவர்கள் குறைந்த மதிப்பெண்களை வழங்கியதாக, பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளிலும் பல இடங்களில், மாணவர்களில் சிலர், தேர்வுக்கே வராமல் இருந்துள்ளனர். சிலவற்றில் தேர்வு எழுதினாலும், சில பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.
இதை எப்படி அணுகுவது என்பது குறித்து, உரிய தெளிவு அவசியம் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு துறை உயதிகாரிகள், மூன்று பேர், கொரோனா பாதிப்பில் உள்ள நிலையில், இந்த பணிகளை மேற்கொள்ள, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.


தலைவர்கள் வரேவேற்புபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, தமிழக அரசு ரத்து செய்ததை, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளும், பா.ம.க.,வும் வரவேற்றுள்ளன.

* தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது; வரவேற்கத்தக்கது.

* தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, தேர்வை ரத்து செய்தது, காலந்தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் வரவேற்கிறேன்.

* பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த முடிவை, முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

* ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ: அனைத்து மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்வர் அறிவித்து இருப்பது, எல்லை இல்லாத மகிழ்ச்சியை தருகிறது.

* தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி:ஸ்டாலின், போராட்டம் என அறிவித்த நிலையில், நீதிமன்றமும், கடுமையான கேள்விகளை எழுப்பிய பின், தேர்வை ரத்து செய்துள்ளது, தமிழக அரசு. இது, மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.எதிர்கட்சிகள் போராட்டம் ரத்து!பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், போராட்டத்தை அக்கட்சிகள் ரத்து செய்துள்ளன.புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து''தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில், தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. தேர்வும், அந்த மாநிலத்தையொட்டி எழுதப்படுகிறது.
எனவே, கல்வி அமைச்சர் கமலக்கண்ணனுடன் கலந்து பேசி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும்.
தமிழ்நாடு கல்வி வாரியத்தை பின்பற்றுவதால், நீதிமன்றம், தமிழக அரசின் முடிவு நமக்கும் பொருந்தும். தமிழகத்தை போன்று, தேர்ச்சியை பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி வருகை அடிப்படையில் அறிவிக்கப்படும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்த வேண்டியுள்ளது; அதுவும் ரத்து செய்யப்படும். இதன் தேர்ச்சி, பருவத்தேர்வு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் வழங்கப்படும். பள்ளி, கல்லுாரிகள் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திறக்கப்படும். முன்னதாக, தனியார் கல்வி நிறுவனங்களுடன் கலந்து பேசி, பரிந்துரையை மத்திய அரசு கேட்டுள்ளது. மாநில அரசுகளின் பரிந்துகளை பரிசீலித்த பின், மத்திய அரசு முடிவு எடுக்கும்.
பட்ஜெட் தொடர்பாக கோப்பு, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஒப்புதல் கிடைத்தும் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும். இவ்வாறு, முதல்வர் நாராயணசாமி கூறினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X