பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்

Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்

மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம். ஊட்டச் சத்துக்களை அதிகம் தரும் உணவு எது என்றால், நம் பாரம்பரிய உணவான சிறு தானிய உணவுகள் தான் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். முன்னோர்களின் உணவில் சிறுதானியங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. அந்தந்த நிலம் சார்ந்தே முன்னோர்களின் உணவு முறையும் இருந்தது.

அந்தப்பகுதியில் உள்ள நிலவளம், மழைவளம் சார்ந்து விளையும் பயிர்களிலிருந்தே உணவும் இருந்தது.நாம் தான் காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் உடம்புக்கு ஒத்துவராத, ஆகாத போகாத துரித உணவுகளின் பக்கம் சாய ஆரம்பித்து அடுத்த தலைமுறைகளையும் அந்த சுவைக்கு அடிமையாக்கிவிட்டு இருக்கிறோம்.

அதன் பலனையும் இன்று அறுவடை செய்ய தொடங்கிவிட்டோம். இளம் வயது பருவத்தை கடக்கும் முன்னேயே உடல்பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், புற்று நோய் என நோய்களைத் தேடி இழுத்து வலுக்கட்டாயமாக உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்கிறோம்.

சளி வந்தால்

முன்னோர்களின் உணவே மருந்தாக இருந்தது. சளி பிடிச்சா ஒரு வெடக்கோழிய அடிச்சி சாறு வச்சுத்தருவாக. காய்ச்சல், தலைவலியா ஒரு சுக்கு மல்லி காபி போட்டுக் கொடுப்பாக. பொண்ணு வயசுக்கு வந்துருச்சா உளுந்தம் களிய நல்லெண்ணெய் விட்டு கிண்டித் தருவாக. பிள்ளையப் பெத்த தாய்க்கு சுக்கு, மிளகு, ஓமத்தை வறுத்து அதோட பனை வெல்லத்தை சேர்த்து உரல்ல போட்டு இடிச்சி சிறு உருண்டைகளாக செஞ்சி வச்சி பேறுகால மருந்துன்னு முப்பது நாளைக்கு கொடுப்பாக.'கொழுத்தவனுக்குக் கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு'ன்னு இப்படி ஒவ்வொன்னும் பார்த்து செஞ்ச காலம் அது.


சிற்றுண்டிகள்மூன்று வேளை உணவுகளிலும் சிறு தானியங்களும், கீரைகளும், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், வாசனைப் பொருட்கள் என்று அதிக சத்துள்ளதாக இருந்தன.அதனால் உடல் நலத்துடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தனர். அவர்களின் இடைவேளை சிற்றுண்டிகள் கூட பயறு, சிறு தானிய இனிப்பு உருண்டைகள் இப்படியாக இருந்தன. ஆனால் இன்று மூன்று வேளை உணவும் பெரும்பாலானவர்களுக்கு மருந்து, மாத்திரைகளாகிப்போனது.
இதெல்லாம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை கைவிட்டதின் விளைவு.


நீராகாரம்ஒரு காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியான கரிசல் பூமி பகுதியில் புழக்கத்திலிருந்த நீராகாரம் இன்று புட்டியிலடைத்த உடல் ஆரோக்கியத்தை தரும் பானங்களாக மேலைநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.நெல்லரிசிச் சோறை பொங்கி வடித்தெடுத்த வடி நீரை வீட்டின் ஒரு மூலையில் மண்பானையை வைத்து அதில் ஊற்றி சேமித்து வைத்தார்கள். அது அதிலேயே ஊறி கொஞ்சம் புளித்திருக்கும். வயக்காட்டில் வெயிலில் வேலை செய்துவிட்டு வந்து ஒரு சொம்பு நீராகாரத்தை குடித்தால் போதும் களைப்பை போக்கி உடல் சூட்டை தணிக்கும்.
வெயில்ல பகல் முழுதும் விளையாடி வந்த பசங்க, அர்த்த ராத்திரியில நீர்க்கடுப்பு சூடு பிடிச்சிக்கிடுச்சின்னு சொன்னா அப்பவே ஒரு சொம்பு நீராகாரத்தை கொடுப்பாங்க. அடுத்த நொடியில் நீர்க்கடுப்புத் தொல்லை நீங்கி நிம்மதியாக துாங்குவார்கள். நீராகாரத்தை மட்டுமே அருந்தி நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவர்கள் கூட உண்டு. அதில் அவ்வளவு நோய் எதிர்ப்பாற்றலைத்தரும் நல்ல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. நீராகரத்தை சேர்த்து மற்ற உணவுகளை தயாரிப்பதும் கூட பார்த்திருக்கேன்.வீட்டுக்கு வரும் விருந்தாளியை டீ, காபி சாப்பிடுறீகளான்னு கேட்டால் இல்லை நீராகாரத்தை கொடுங்கள்ன்னு கேட்டுப் பெற்று அருந்திய காலமது. இன்னைக்கு வந்த குக்கர் சமையல் புண்ணியத்துல அது வழக்கொழிந்து நீண்ட காலமாயிற்று.


சிறுதானியங்கள்சிறு தானியங்கள் (millets) என்று சொன்ன காலம்போய் இன்று ஊட்டச்சத்து தானியங்கள் (Nutri millets) என்று உணவியல் வல்லுனர்கள் சொல்லும் அளவுக்கு அதன் மதிப்பு உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் ஏழைகள், உழைப்பாளிகளின் உணவாக கருதப்பட்ட கம்மங்கூழ், கேப்பைக்கூழ் இன்று நோயாளிகளுக்கு வலு தரும் சத்துணவாகிப்போனது. ஒரு காலத்தில் சிறைவாசிகளின் உணவாகவும், கேலியாகவும் கருதப்பட்ட கேப்பைக்களி இன்று பெங்களூருவில் நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்படுகிறது. அதை உண்பவர்கள் யார் என பார்த்தால் உயர் ரக கார்களில் வந்து
இறங்கும் மேல்த்தட்டு மக்கள் தான். அவர்களின் மதிய உணவாக முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது இந்த கேப்பைக்களி. மட்டன்குழம்பிலும், சிக்கன் குழம்பிலும் கேப்பைக்களியை தோய்த்து உருட்டி உருட்டி அவர்கள் ருசிக்க வியந்து பார்த்திருக்கிறேன். பழைய சோறு கூட ஓட்டல் மெனுக்கார்டில் இடம் பிடித்துவிட்டது.தெருவுல சுட்டு விற்றுக்கொண்டிருந்த சிறு தானிய பணியாரம், இன்று பெரிய உணவகங்களில் கிராமத்து உடையலங்காரத்தில் ஒரு பெண் நம் கண் முன்னே வார்த்து கொடுக்க, விரும்பி வாங்கி காத்திருந்து மக்கள் சாப்பிட்டு போகிறார்கள்.


கரிசல் காட்டில்கரிசல் காட்டுப்பகுதியில் மானாவாரி புன்செய் நிலங்களில் சிறு தானியங்களும் அதில் ஊடு பயிராக பயறு வகைகளும் முக்கிய விவசாயப் பயிராகவே இருந்தது. இது குறைந்த நீர் வளத்தில் நல்ல விளைச்சலைத் தரும் பயிராக அமைந்தது. சிறுதானியங்களின் மேலோடுகளை நீக்கி அரிசியாக்கி அரைக்க, திரிக்க, பொடிக்க,மாவாக்க கல் திருகைகள், குத்து உரல்கள்,மாவாட்டும் உரல்களெல்லாம் இருந்தன. இதில் தான் பயறு வகைகளையும் உடைத்து இரண்டாக்கினர்.கரிசல் பகுதி மக்களின் முக்கிய உணவாக மூன்று வேளையும் சிறு தானியங்களும், பயறு வகைகளும், காய்கறிகளும், கீரைகளுமாகத்தான் இருந்தன. அசைவ உணவாக வீட்டைச்சுற்றி வளர்ந்த நாட்டுக்கோழிகளும், ஆடுகளும், ஆறு, குளத்தில் கிடைத்த மீன்களும் இருந்தன.


அதிக சத்துக்கள்சிறு தானிய உணவுகளில் புரதங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து என ஏனைய பலச்சத்துகளும், நெல்லரிசி, கோதுமையை விட அதிகமாக உள்ளன.அந்த காலத்தில் கிராமங்களில் வரகு அரிசி சோறு, தினை சோறு, சாமை, குதிரை வாலி அரிசியில் சோறு ஆக்குவதும் அதை பருப்பு மற்றும் கீரைக்குழம்புகளுடன் கலந்து உண்பதும் தான் வழக்கிலிருந்தது. அது போல கேப்பை மற்றும் சோளத்தில் தோசை, களி, ரொட்டி இதெல்லாம் செய்து சாப்பிடுவர். சூடான கேப்பைக்களியில் நடுவில் ஒரு அச்சு வெல்லத்துண்டை வைத்து அழுத்தி
தருவார்கள் அது நிமிடத்தில் பாகு ஆகிவிடும். அதை தொட்டு சாப்பிடுவது சிறுவர்களுக்கு விருப்பமான ஒன்று. கருவாட்டுக்குழம்பு கூட இந்த கேப்பைக்களிக்கு கூடுதல் சுவை.நோய் எதிர்ப்பு சக்தி தரும் புரதச்சத்துள்ள பயறு வகைகளை அவித்து தாளித்து அடிக்கடி சாப்பிடுவது நம் முன்னோர் வழக்கம். இதையே சிறு குழந்தைகளுக்கு கொஞ்சம் வெல்லம் சேர்த்து உரலில் இடித்து உருண்டை பிடித்துக்கொடுப்பார்கள். சுவையாகஇருக்கும். எந்த வயதினருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதைக்கூட அறிந்து வைத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள்.


இன்று எப்படிஇன்று தானியங்களில் பொங்கல், பாயாசம்,பிரியாணி, கம்பு தோசை, கம்பங்கூழ் என வித விதமாக செய்து ருசிக்கிறார்கள். குதிரை வாலி அரிசியை மாவாக்கி அதை நீருடன் கலந்து பிசைந்து இடியப்பம் போல காரச்சேவு கணத்தில் நுாடுல்ஸாக பிழிந்து நாட்டுக்கோழி, மட்டன் குழம்போடு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.இது போலவே இடைவேளை உணவுகளிலும் சிறுதானிய மாவில் செய்த கொழுக்கட்டை, புட்டு, கம்பு இனிப்பு மா உருண்டை, தேனோடு கலந்த தினை உருண்டை, தினை மாவில் செய்த அச்சு முறுக்கு போன்றவற்றை சாப்பிடலாம்.சிறு தானியங்கள், கீரைகள், பயறு வகைகள் நிறைந்த நம் முன்னோர்களின் உணவு முறைகளை மக்கள் இன்று விரும்புவதும், மருத்துவர்கள் இதை பரிந்துரைப்பதும் வரவேற்கதக்கது. தொற்று நோய் பரவும் இக்காலக்கட்டத்தில் இவ்வகை உணவுகள் நல்லதே.பாரம்பரிய உணவின் மகத்துவத்தை குழந்தைகளுக்கும் உணர்த்தி, உடல் ஆரோக்கியத்தை நோக்கி முழுமையாக பாரம்பரிய உணவிற்கு மாறுவோம். உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.-நாச்சியார்பட்டி எஸ்.தனசேகரன்எழுத்தாளர். மதுரை94433 01383

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-202016:45:45 IST Report Abuse
Bhaskaran குதிரைவாலியை வெல்லத்துடன் கலந்து உருண்டை சாப்பிட்டால் அலாதி ருசி .இன்னும் கரிசல் பகுதி தின்பண்டங்களான கலப்படம் இல்லாத கருப்பட்டி மிட்டாய் காராசேவு சீவல் கடலை மிட்டாய்எள்ளு மிட்டாய் .உடலுக்கு கேடு விளைவிக்காத பண்டங்கள்
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
11-ஜூன்-202013:46:03 IST Report Abuse
Rameeparithi பாரம்பரியம் மறந்து மரித்து போய்விட்டது ...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-ஜூன்-202011:22:30 IST Report Abuse
vbs manian முற்றிலும் உண்மை. அனால் இயந்திரமாக சுழல வேண்டிய இந்த காலத்தில் கை அருகே இருக்கும் அமிர்தத்தை மறந்து போனோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X