மும்பை; ''எனக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. புலம் பெயர் தொழிலாளர்கள் மீதான அன்பால், அவர்களுக்கு உதவுகிறேன்,'' என, 'பாலிவுட்' நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.விமர்சனம்பஞ்சாபின் மோகாவிலிருந்து மும்பை வந்து, தபாங், ஜோதா அக்பர் உள்ளிட்ட ஏராளமான ஹிந்திப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், சோனு சூட், 46.கொரோனா ஊரடங்கால், பல்வேறு மாநிலங்களில் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல, இவர் உதவிகளை செய்து உள்ளார்.
கடந்த வாரம், மும்பையில் 'நிசார்கா' புயல் தாக்கும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், 180 புலம் பெயர் தொழிலாளர்களை, சிறப்பு விமானத்தில், அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு அனுப்பி வைத்தார்.அதற்கு முன், கேரளாவில் இருந்து, 177 தொழிலாளர்களை, விமானத்தில் ஒடிசாவிற்கு அனுப்பினார்.இதுவரை, 20 ஆயிரம் பேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவரது சேவையை மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே பாராட்டியுள்ளனர்.ஆனால், இவரது சேவைகளை விமர்சித்தவர்களும் உண்டு. உத்தவ் தாக்கரே அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., இவரை இயக்குவதாக, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறினார். இது, அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகள் என, சிலர் கூறினர்.
இதுகுறித்து, நடிகர் சோனு சூட் கூறியதாவது:மும்பையில், சாலையோரம் தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய போது, அவர்கள் சொந்த மாநிலமான கர்நாடகா செல்ல வேண்டும் என, கோரினர். இதனால், 300 தொழிலாளர்களுக்கு, பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். பின், பல்வேறு இடங்களில் இருந்தும் உதவி கேட்டனர்.

வேதனை
தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு நடந்து சென்ற காட்சிகளைப் பார்த்து, வேதனை ஏற்பட்டது. நானும் மும்பைக்கு புலம் பெயர்ந்து வந்தவன் என்பதால், அவர்களின் நிலையை உணர முடிந்தது.எனக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. புலம் பெயர் தொழிலாளர்கள், மீண்டும் குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்ற, அன்பின் காரணமாகவே உதவிகளை செய்கிறேன். கடைசி தொழிலாளியும், அவரது சொந்த ஊர் செல்லும் வரை, என் பணிகள் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்